சோமவன்சவின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் ரிஷாட்
மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவு இலங்கை வாழ் மக்களுக்கு பாரிய இழப்பாகுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
காலஞ் சென்ற அமரசிங்க இடது சாரி சிந்தனை கொண்டவர். இடது சாரிக் கொள்கையில் பற்றுறுதியுடன் வாழ்ந்து மக்கள் நலனுக்காக அரும்பாடு பட்டவர். இன நல்லுறவுக்காகவும் உழைத்தவர்.
இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் சமாதானமாகவும் சரி நிகராகவும் வாழ வேண்டுமென்பதற்காக அனைத்து இனத்தலைவர்களுடனும் நல்லுறவுடன் இணைந்து பணியாற்றியவர்.
சிங்கள கடும் போக்காளர்களால் முஸ்லிம் இனத்துக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் அவற்றை தீர்த்து வைப்பதில் முனைப்புடன் செயற்பட்ட ஒரு பண்பாளர். மனித நேயம் கொண்ட சோமவன்ச அமரசிங்க முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் முஸ்லிம் அமைப்புக்களுடனும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை நல்கியவர். அதே போன்று தமிழ் மக்கள் மீதும் அவர் நல்லுறவுடன் செயற்பட்டவர்.
மக்கள் விடுதலை முன்னனியின் நான்காவது தலைவரான அன்னார், அந்தக் கட்சிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்ட காலங்களில் கட்சியை அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுத்து புதிய உத்வேகத்தை வழங்கியவர்.
அன்னாரின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமவன்சவின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் ரிஷாட்
Reviewed by NEWMANNAR
on
June 16, 2016
Rating:

No comments:
Post a Comment