அண்மைய செய்திகள்

recent
-

மகளிரை காத்த மங்கையற்கரசி...ஐடாஸ்காடர்‬----உண்மை வரலாறு


மகளிரை காத்த  மங்கையற்கரசி...ஐடாஸ்காடர்‬


தன் மனைவிக்கு பிரசவம் பார்த்த ஆண் டாக்டரைச் சுட்டுக் கொன்ற சவுதி ஷேக். அன்றொரு நாள் துபாய் கடற்கரையில் தன் மகளை அந்நியன் காப்பாற்ற‌ தொட்டதற்காக அவளை கொன்றார் தந்தை என ஏகபட்ட செய்திகள் வரும் காலமிது. உடனே நமது தமிழகத்தார் குதிக்கின்றார்கள், பார்த்தீர்களா? அவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள்.........

ஏதோ நாமெல்லாம் நாகரீகமான உலகில் வாழ்வது போலவும், அவர்கள் இம்மாதிரியான காரியங்களை செய்வதுபோலவும் பலர் சொல்லிகொண்டிருக்கின்றனர், கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகமும் இப்படித்தான் இருந்தது

அன்று வேலூர் ராணிபேட்டையில் ஒரு அமெரிக்க மிஷினரிகள் குடும்பம் பணியாற்றிகொண்டிருந்தது, பெற்றோர் இருவரும் டாக்டர்கள், மகளுக்கு 17 வயது இருக்கலாம், விடுமுறைக்காக இந்தியா வந்திருநாள்.

அவர்கள் அமெரிக்க மருத்துவர்கள், இலங்கை யாழ்பாணத்தில் பிளேக், தொழுநோய் மருத்துவம் எல்லாம் பார்த்தவர்கள், பின்னாளில் பிரிட்டன் அரசின் அனுமதியுடன் வேலூரில் மருத்துவம் பார்த்துகொண்டிருந்தார்கள்.

வருடம் 1886 ஆக இருக்கலாம், அந்த நள்ளிரவு ஒரு பிராமணர் தன் மனைவி பிரசவத்திற்காக டாக்டர் வீட்டு கதவினை தட்டினார், டாக்டர் கதவை திறந்தபோது பிராமணரின் கண்கள் டாக்டரின் மனைவியினை தேடின, டாக்டரின் மனைவி அப்பொழுது வெளிநாடு சென்றிருந்தார், இதனை டாக்டர் சொன்னதும் அவர் தலையில் அடித்துகொண்டு சோகமாக திரும்பினார்.

டாக்டர் வந்து படுத்துகொண்டார், மகளுக்கோ கடும் ஆத்திரம், "நீங்கள் ஒரு மருத்துவர் தானே, ஏன் செல்லவில்லை? அப்பெண்மணி செத்துவிட்டால் என்ன செய்வீர்கள்? இரு உயிர்கள் அல்லவா" என்று கத்தி கேட்க, அமைதியாக பதில் சொன்னார் டாக்டர்,

"இது இந்தியா மகளே, கட்டுப்பாடுகள் நிறைந்த தேசம், ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்தான் பிரசவம் பார்க்கவேண்டும், ஒரு ஆண் அதனை செய்தான் என்றால் அவள் வாழ்வு நரகம், அவளை கொன்றே விடுவார்கள், நான் சென்று காப்பாற்றினாலும் அவள் சாகத்தான் போகிறாளம்மா..", கண்களை துடைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார்

அவள் தூங்கவில்லை, ஜன்னலை நோக்கியபடியே இருந்தாள், கொஞ்ச நேரத்தில் அழுகை சத்தம் கேட்டது, குழந்தை குரல் அல்ல, கும்பல் குரல். ஆம் அந்த கர்ப்பவதி இறந்துவிட்டாள், சுடுகாட்டிற்கு அவளை எடுத்து செல்வதை இந்த ஆங்கிலபெண்மணி பார்த்து அழுதாள்

இருவாரத்தில் அதே நள்ளிரவு, இம்முறை கதவை தட்டியவன் இஸ்லாமியன். அதே பரிதவிப்பு, டாக்டருக்கு அதே பதில். விளைவு அதே மரணம்.

இதற்கு என்னதான் தீர்வு அப்பா, நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என கதறினாள் அவள், தந்தை சொன்னார், "இது மிக சிக்கலான பிரச்சினை, பெண்களை அவர்கள் படிக்கவும் அனுமதிப்பதில்லை, ஆண்களை பிரசவம் பார்க்க அனுமதிப்பதுமில்லை. சுகபிரசவம் தவிர அவர்கள் பிழைக்க ஒரு வழியும் இல்லையம்மா, கடவுள் விதித்தது அவ்வளவுதான்" என்றார்.

அவர்கள் மிஷனரிகள் என்றாலும் இந்நாட்டின் கலாச்சாரத்தினை அவர்கள் மீறியதில்லை, தலையிட்டதில்லை, உதவி செய்வார்கள் அவ்வளவுதான்,

அந்த இளம்பெண் கிளம்பினாள் இனி இந்தியாவில் ஒரு நொடி இருக்கமாட்டேன் என்றாள், அவள் மனதிலே ஒரு வைராக்கியம் இருந்தது, மருத்துவம் படித்தாள், தங்க மடல் வாங்கினாள், அமெரிக்காவில் பெரும் எதிர்காலம் காத்திருந்தது.

அதனை தூக்கி எறிந்துவிட்டு இந்தியா வந்தாள், இனி இந்த வேலூரில் ஒரு கர்ப்பிணிபெண்ணை சாகவிடமாட்டேன் என சொல்லி அந்த மருத்துவமனையினை 1899ல் நிர்மானித்தாள். அதாவது அவளின் வெறும் 29ம் வயதில், சேவை செய்யும் வயதா அது?

அதுதான் புகழ்பெற்ற வேலூர் மருத்துவ கல்லூரி, அப்பெண்தான் பெரும் புண்ணியவதி ஐடா ஸ்கேடர்.

வேலூரில் அந்த கல்லூரி, ஒரு காலத்தில் தமிழக பெண்கள் பட்ட மகா கொடுமைக்கு பெரும் அடையாளம் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை

நீங்கள் பெண்களை அடிமையாகவே வைத்திருங்கள் அது என்பிரச்சினை அல்ல, ஆனால் ஒரு உயிரை இழக்க நான் விட மாட்டேன், சக மானிட பிறப்பாக அவர்களும் வாழ என் வளமான வாழ்வினையே அர்பணிக்கின்றேன் என அர்பணித்து நின்றவள் அவள், மகராசி

இப்படி தென்னகம் முழுக்க பெரும் மருத்துவ சேவையினை வழங்கினாள், அந்நாளைய பெரும் நோயான மலேரியா, பிளேக், தொழுநோய்க்கு எல்லாம் மருந்தளித்தாள். வேலூர் பகுதியில் அவள் இந்திய தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையும் ஆறுதலும் அளித்த சமயத்தில் அன்னை தெரசா பிறந்திருக்க கூட இல்லை.

பின்னாளில் ஓரிடத்தில் தெரசா சொன்னார், எனக்கு முன்பாகவே இந்திய தொழுநோயாளிகளை பராமரித்தவர் ஐடா ஸ்கேடர், அதனால்தான் சென்னைக்கு நான் செல்ல அவசியமற்று போயிற்று.

பெரும் சேவையில் மங்கா புகழ்பெற்றிருந்தார் ஐடா ஸ்கேடர், 1928ல் மகாத்மா காந்தி வேலூர் சென்று மருத்துவமனையினை பார்வையிட்டு ஐடாவினை வணங்கினார்.

இன்று உலகிலே மிகபெரிய கிறிஸ்தவ மருத்துவமனை என்ற பெருமையுடன் அது இயங்கிகொண்டிருக்கின்றது, கவனியுங்கள், உலகிலே மிகபெரும் கிறிஸ்தவ மருத்துவமனை.

அந்நிய நாட்டவர்தான் அந்த பெண்மணி, தந்தை பணியாற்றிய இடத்தில் விடுமுறைக்காக வந்தவள். ஆனால் இம்மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும், அவர்களுக்கு ஒரு மருத்துவமனை கட்டவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எப்படி வந்தது? இங்கே வாழவேண்டும், அதுவும் குளிரான அமெரிக்காவினை விட்டு வெயிலுக்கு பெயர்பெற்ற வேலூரில் வாழவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? அதுதான் உண்மையான கிறிஸ்தவம், சேவை செய்யும் கிறிஸ்தவம்.

இந்த மனதுதான் பெரியார் அணை கட்டிய பென்னிகுயிக், அன்னை தெரசா போன்றோருக்கு எல்லாம் இருந்தது.

தமிழகத்தில் தெருமுக்கு, டிவி, கடற்கரை, இந்து கோயில் எதிரில் என ஊளையிட்டு கொண்டிருக்கும் கிறிஸ்தவ பதர்களுக்கு சொல்வது இதுதான். அந்நாளைய கிறிஸ்தவர்கள் பின் தங்கிய இந்நாட்டிற்கு வந்தார்கள் என்றால், நீங்கள் பின் தங்கிய ஆப்ரிக்காவிற்கும், மங்கோலியாவிற்கும் இன்னும் பல நாடுகளுக்கும் செல்வதுதானே முறை

அம்மக்களுக்கு கல்வியும், மருத்துவமும் கொடுத்து சேவை செய்வதுதானே முறை, அதனை விட்டு இங்கே குதி குதி என குதிப்பதிலோ, வெள்ளையனுக்கே நற்செய்தி போதிப்பதிலோ என்ன இருக்கின்றது? எல்லாம் பணம்

இன்று அரேபியர்கள் அன்றைய நமது முன்னோர்களை போல சில விஷயங்களில் இருக்கலாம், நாம் மாறிவிட்டோம், அவர்களும் நிச்சயம் ஒரு காலத்தில் மாறுவார்கள். அதுவும் ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் கல்வியினை பெண்களுக்கு கொடுத்துகொண்டுதான் இருக்கின்றது.

நிச்சயம் அன்னை தெரசா அளவிற்கு கொண்டாடபட்டிருக்க வேண்டிய பெருமகள் இவர், ஆனால் பல அரசியல் இதில் ஒளிந்திருந்தது, அதாவது இவர் அமெரிக்கர், வேறு சபை. தெரசா போல் வலுவான சர்ச அமைப்பு இவருக்கு இல்லை.

கிறிஸ்தவ மிஷினரிகள் பிரபலாமவதிலும் மகா அரசியல் உண்டு, உலக அரசியல் முதல் உள்நாட்டு அரசியல் வரை உண்டு. இந்த ஐடா ஸ்கேடர் கத்தொலிக்கராக இருந்திருந்தால் இன்று புனிதர் அளவிற்கு கொண்டாடியிருப்பார்கள், வலுவான சபையாக இருந்தால் ஆர்பரித்திருப்பார்கள், ஆனால் அவர் மைனாரிட்டி அனாதை சபை, அதுதான் காரணம்.

இன்னொன்று இவரின் கடைசி காலங்களில் இந்தியா, சுதந்திர இந்தியாவாக ஏக குழப்பங்களில் தத்தளித்தது, இவரை நினைத்து பார்க்கவும் யாருமில்லை, ஆனால் மகா நிச்சயமாக சொல்லலாம், தன் சொந்தவாழ்வினை கூட சிந்திக்காமல், இந்திய குறிப்பாக தமிழக மக்களுக்காக வாழ்ந்த அவருக்கு பாரத ரத்னா விருது மகா பொருத்தமான ஒன்று.

இனி அதனை எதிர்பார்க்கமுடியாது, அதனை தமிழகத்திற்கு தவ வாழ்வு வாழும் ஜெயலலிதாவிற்கு கொடுக்கவேண்டும் என டெல்லியில் தமிழக எம்பிக்கள் தவம் இருக்கின்றார்கள், நல்லது.

இப்படியாக இந்த அரேபிய சம்பவத்தை நினைக்கும்பொழுது, ஐடா ஸ்கேடரும் அவரின் தவ வாழ்வும், தமிழக மகளிருக்காக அவர் செய்த மகத்தான காரியமும், அவர் உயிர்விட்ட கொடைக்கானலும், வேலூரிலுள்ள அவர் சமாதியும் நினைவுக்கு வருகின்றன.

வேலூர் உள்ள காலம் வரை அம்மகராசி மக்கள் நினைவினில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

இம்மாதிரியான அரேபிய செய்திகளை கேட்கும் பொழுது ஐடா ஸ்கேடர், நெல்லையில் பணியாற்றிய மேடம் சாரா, டோனாவூரில் பணியாற்றிய கார் மைக்கேல் போன்ற வணக்கத்திற்குரியவர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றார்கள்.

அவர்கள் நமக்கு செய்திருப்பது பெரும் விஷயங்கள், சேவைகள். இப்பொழுதுள்ள மிஷினரிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் இந்த வரிசையில் சேர்க்காதீர்கள்.

சிலர் பாஷயில் சொல்லபோனால் அவர்கள் வந்தேறிகள் தான், ஆனால் அவர்கள்தான் பல வகைகளில் நம்மை ஏற்றிவிட்டவர்கள், என்றென்ற்றும் நன்றிகுரியவர்கள்.

அவர்கள் மனம் அவ்வளவு விசாலாமாக இருந்திருக்கின்றது, நமது மனமோ குறுகிகொண்டே செல்கின்றது.

தொகுப்பு- வை-கஜேந்திரன்


மகளிரை காத்த மங்கையற்கரசி...ஐடாஸ்காடர்‬----உண்மை வரலாறு Reviewed by Author on June 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.