அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒரு பார்வை....
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போன்றே அங்கு கடந்த 10 ஆண்டுகளில் பல முறை மர்ம நபர்களால் வெறியாட்டம் நடந்தேறியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு விர்ஜீனிய பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 33 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒமாஹா, Nebraska பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் புகுந்த 19 வயது Robert Hawkins தாம் கொண்டு வந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், அங்குள்ள கடை ஒன்றின் ஊழியர்கள் 6 பேர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் அந்த குற்றவாளியும் தற்கொலை செய்துகொண்டார்.
2008 ஆம் ஆண்டு வடக்கு இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள வகுப்பறை ஒன்றில் நுழைந்த Steve Kazmierczak என்பவர் தாம் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் அங்குள்ள மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், 5 மாணவர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர், 16 பேர் படுகாயமடைந்தனர்.
2009 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் அமைந்துள்ள குடியேற்ற மையம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின்போது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார், கொலைகாரனிடம் இருந்து தப்ப 37 பேர் கழிவறையில் மறைந்திருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.
அதே ஆண்டு Killeen பகுதியில் ராணுவ உளவியல் மருத்துவர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்கிருந்த 13 ராணுவத்தினர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
2010ம் ஆண்டு அலபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரியல் பேராசிரியர்கள் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் மான்செஸ்டர், கனெக்டிகட் பகுதியில் கிட்டங்கி ஒன்றில் தொழிலாளர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் தலைவர் உள்ளிட்ட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2011ம் ஆண்டு அரிசோனா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தின் வெளியே நின்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அங்கிருந்த 6 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
அதே ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சலூன் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
2012ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தின் ஆக்லாந்த் பகுதியில் அமைந்துள்ள மதம் தொடர்பான கல்லூரி ஒன்றில், முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே ஆண்டு ஜூலை மாதத்தில் திரையரங்கு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். தற்கொலைக்கு முயன்ற கொலைகாரர் தப்பிப்பிழைத்து பின்னர் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் மாதத்தில் சீக்கியர் கோவிலில் நடந்த துப்பாக்கிச் சூடில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் சரணடைய மறுப்பு தெரிவித்த குற்றவாளியை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு மேலும் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்தனர்.
செப்டம்பர் மாதத்தில் மின்னெபொலிஸ் பகுதியில் உள்ள தொழிற்பட்டறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தற்கொலை செய்து கொண்டார்.
டிசம்பர் மாதம் கனெக்டிகட் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்குள்ள 20 மாணவர்களும் 6 ஊழியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். கொலைகாரன் தனது தாயை கொலை செய்துவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டான்.
2013ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டே துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். கொலைகாரனை பொலிசார் சாமர்த்தியமாக சுட்டு வீழ்த்தினர்.
அதே ஆண்டு வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள கப்பற்படை தளத்தில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி தாக்குத்கலில் 12 பேர் உயிரிழந்தனர். முன்னாள் ஊழியரான அவர் அங்கேயே தற்கொலை செய்துகொண்டார்.
2014ம் ஆண்டு, Killeen பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் 16 பேர் காயமடைந்தனர்.
கலிபோர்னியா பகுதியில் கல்லூரி மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 22 வயதான அந்த நபர் பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.
Marysville பகுதியில் பாடசாலை உணவு விடுதியில் 15 வயது மாணவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
2015ம் ஆண்டு Charleston பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
Chattanooga பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
Roseburg பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் பொலிசாருடன் நடந்த மோதலில் கொலைகாரர் கொல்லப்பட்டார்.
San Bernardino பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஓர்லாண்டோ நகரில் மதுவிடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒரு பார்வை....
Reviewed by Author
on
June 13, 2016
Rating:

No comments:
Post a Comment