அண்மைய செய்திகள்

recent
-

கடற்படையினரின் ஆக்கிரமிப்பு அவலங்கள் தொடர்வதாக முழங்காவில் மக்கள் சீற்றம்!


கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்புபுரம் கிராமத்தில் இலங்கை கடற்படையினரின் ஆக்கிரமிப்பால் நாளாந்தம் அல்லலுறுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமை தொடர்பில் அப்பகுதி மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அப்பகுதிக்கான பயணமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அ.வேழமாலிகிதன், முழங்காவில் பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் மாஸ்ரர், உருத்திரபுரம் பிரதேச அமைப்பாளர் எழில்வேந்தன், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கிருபாகரன் ஆகியோர் இன்று மேற்கொண்டிருந்தனர்.

அன்புபுரத்தில் மக்கள் வாழ்ந்த குடியிருப்புக்களையும் அவர்களின் தோட்ட நிலங்களையும் உள்ளடக்கியதாக 1275 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் அன்புபுரம் கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையை பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ளதுடன் அவர்கள்மீது இறுக்கமான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர்.

மீனவர்களின் இறங்குதுறையை இடமாற்றம் செய்யுமாறு வற்புறுத்துவதுடன் நாளாந்தம் அச்சத்துடனேயே தொழில் புரிகின்ற சூழல் நிலவுவதாக கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். காலம் காலமாக அன்புபுரம் முருகன் ஆலயம் இவ் இறங்குதுறையூடாகவே தீர்த்தமாடச் செல்வது வழமை என்றும் கடற்படையினர் அன்புபுரம் முருகன் ஆலயத் தீர்த்தமாடச் செல்லும் புனிதப் பகுதியைக்கூட விடாது தம்வசம் வைத்துள்ளதாக மக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடற்படையினர் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு சென்றுவருவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் குடிநீர் எடுப்பதற்குப் பயன்படுத்திய கிணறுகள் இரண்டை முட்கம்பிகளால் அடைத்து பல அசௌகரியங்களை மக்களுக்கு ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

கடற்படையினர் தங்கள் வீடுகளுக்கு அருகே 24 மணிநேரமும் நடமாடுவதும் தரித்திருப்பதும் அக்குடியிருப்பு பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலை குறித்து கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்,

இவ்விடயம் குறித்து உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் நல்லிணக்கம் மீள்குடியேற்றம் பற்றி பேசுகின்ற ஆட்சியாளர்கள் சொல்லில் ஒன்றையும் செயலில் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்புவாத சிந்தனைகளையுமே கொண்டிருக்கின்றனர் என்றும் இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.

கடற்படையினரின் ஆக்கிரமிப்பு அவலங்கள் தொடர்வதாக முழங்காவில் மக்கள் சீற்றம்! Reviewed by Author on July 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.