மைத்திரியின் கருத்து புறக்கணிப்பு! சூடுபிடிக்கும் மீள்குடியேற்றச் செயலணி விவகாரம்....
மீள்குடியேற்றச் செயலணியில், வடக மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் உள்வாங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது.
இதன் விளைவாகவே, மீள்குடியேற்றச் செயலணி விவகாரம் விவாதத்திற்குரியதாகியுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீள்குடியேற்றச் செயலணியை உருவாக்கும் அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையில் முன்வைப்பதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அதற்கு தனது அவதானத்தை வழங்கியிருந்தார். வடக மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் மீள்குடியேற்றச் செயலணியில் உள்வாங்குமாறு ஜனாதிபதி பரிந்துரை செய்தார்.
ஜனாதிபதியின் பரிந்துரையை உள்வாங்காமலேயே அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனே, ஜனாதிபதியின் பரிந்துரையை உள்ளீர்ப்பதற்கு அனுமதிக்கவில்லை என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வட மாகாண முதலமைச்சரை உள்ளீர்க்காமல் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணிக்கு, வட மாகாண சபை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
வட மாகாண சபையின் அமர்வு கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றபோது, மீள்குடியேற்றச் செயலணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில், மீள்குடியேற்றச் செயலணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்காவது நபராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
மீள்குடியேற்றச் செயலணியில் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தப்பா, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பரிந்துரையை அமைச்சரவைத் தீர்மானத்தில் உள்வாங்காமை தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் கருத்தை அறிவதற்கு தொடர்புகொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.
எனினும் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை ஒரு கட்டமைப்பின் கீழ் குடியமர்த்தி அவர்களை நிம்மதியாக வாழ வைப்பதற்கு உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் வட மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
செயலணியின் நோக்கங்களை திரிபுபடுத்தி அதன் எதிர்கால நடவடிக்கைகளை கறுப்புக் கண்ணோடு பார்த்துவரும் வட மாகாண சபையின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மைத்திரியின் கருத்து புறக்கணிப்பு! சூடுபிடிக்கும் மீள்குடியேற்றச் செயலணி விவகாரம்....
Reviewed by Author
on
July 26, 2016
Rating:

No comments:
Post a Comment