அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலைகளில் பாலியல் கல்வி தேவையான ஒன்றா - பாலா சுதர்சன்

பாடசாலைகளில் பாலியல் கல்வி தேவையான என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகவே உள்ளது. இருப்பினும் இன்று நாம் அனைவரும் பொதுவாக விவாதிக்கும் விடயம் பாலியல் கல்வி மற்றும் பாலியல் விழிப்புணர்வுகளையும் பாடசாலைகளில் கற்று கொடுக்க வேண்டிய தேவை உள்ளதா என்பது தான்

பாலியல் என்பது வெறுமனே பால் உறுப்புக்களையும் பாலியல் நடத்தைகளையும் கொண்டதல்ல. எமது கலாச்சாரத்திலும்,பண்பாட்டிலும் பாலியல் என்றவுடன் உடலுறவு என்பது மட்டும் தான் என்னும் சிந்தனை நமக்குள் எப்போதுமே உள்ளது .

பாலியல் விருத்தி என்பது ஒரு மனிதனின் ஆளுமையின் கூறு என்றால் மிகையாகாது. அது அவனுடைய எண்ணங்கள், நடத்தைகள் என்பனவற்றுடன் அவனது உடல், உள நலத்தினையும் பிரதிபலிக்கின்றது.

பாலியல் என்றவுடன் பேசக்கூடாது அல்லது பேசப்படாத விடயமாகும். இச் சூழ்நிலையில் சிறுவர்கள்முதல், பருவமடைந்தவர்கள் தொடக்கம் வயதானவர்கள் வரை பலவிதமான பாலியல் பிரச்சினைகளுக்கு அன்றாடம் முகம் கொடுக்கின்றனர்.

இன்றைய சூழலில் சிறுவர், சிறுமியர் பெண் மாணவிகள் பாலியல் பலாத்காரங்களும், வன்முறைகளும்,துன்புறுத்தல்களும், வன்புணர்ச்சியும் என பல துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

மனிதனின் பாலியல் நடத்தைகள் மிகவும் வேறுபட்டவை.இது தனியே உயிரியல் ரீதியாக மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அது சமூகச் சூழல் காரணிகளினால் தீர்மானிக்கப்படுகிறது.

இலங்கையில் நிகழும் பாலியல் கொடுமைகளை தினம் தோறும் பத்திரிகைகளின் ஊடகவும் ,இணையங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்களின் பதிவுகள் ஊடாகவும் வரும் செய்திகளை வாசிக்கும் போது பாடசாலை மாணவர்களும் எயிட்ஸ் நோயாளிகளாக அதிகரித்து கொண்ட வரும் நாடு எனும் பட்டியலில் இடம்பிடித்து வருகின்றமை மிகவும் மன வேதனையினை தரும் செய்தியாக இருக்கின்றது

மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரை வளர்ச்சி மற்றும் விருத்தி அடைகின்றான். இவ்விருத்தியை விஞ்ஞானிகள் பல பருவங்களாகப் பிரிக்கின்றனர். அதாவது குழந்தை பருவம்,பிள்ளைப் பருவம், கட்டிளமைப் பருவம், வயது வந்தோர் பருவம்,முதுமைப் பருவம் என்று முக்கியமாக ஐந்து வகைகளில் பிரித்துள்ளனர். மேலும் இதில் பாலியல் சார்ந்த வளர்ச்சி மற்றும் விருத்தியினையும் வளர்ச்சிகாலத்தில் அடைகின்றார்கள்.

குழந்தை பருவம் பிறப்பு முதல் 12 வயது வரை ஒரு குழந்தையின் பாலியல் நிர்ணயம் அக் குழந்தையின் பிறப்பிற்கு முன்பே பரம்பரை அலகுகளினால் தீர்மானிக்கப்படுகின்றது.
உடலுறுப்புக்கள் அத்தகைய அடையாளத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன. குழந்தைப் பிறப்பின் பிற்பட்ட காலப்பகுதிகளின் சூழல் காரணிகளும் அதில் செல்வாக்குப் பெறுகின்றன. நிறை,உயரம்,எடை என்பனவும் வேறுபடுகின்றன. பெரும்பாலும் இரண்டு அல்லது இரண்டரை வயதுகளின் பாலியல் அடையாளத்தை குழந்தை அறிந்துக் கொள்கின்றது.

ஆண் குழந்தை தான் தந்தையின் பாலியல் அடையாளத்தை பெற்றுள்ளதாகவும் தாயின் பாலியல் அடையாளத்தில் எதிரானவை என்பதை அறிந்து கொள்கின்றமை இயல்பானதே. பெண் குழந்தைகளும் அவர்களின் பாலுறுப்புக்களின் வேறுபாடுகளை அறிந்து கொள்கின்றன. அத்துடன் பாலுறுப்புக்களை கையாள்வதிலும் ஈடுபடுகின்றார்கள்.

நான்கு அல்லது ஐந்து வயதுகளின் அவர்கள் திருமணம் பற்றிய கருதுகோளினை அறிந்துக் கொள்கின்றார்கள். அப்பொழுதே அம்மா,அப்பா போன்ற பாவனை விளையாட்டுக்களை விளையாடுகின்றார்கள். இத்தகைய காலங்களின் பாலியல் சுய தூண்டல்களையும் சில சந்தர்ப்பங்களின் சுய புணர்ச்சிகளையும் அவர்கள் மேற்கொள்கின்றார்கள்.

இதற்கு பிற்பட்ட வயதுகளின் அவர்கள் மாதவிடாய் பற்றியும் கர்ப்பம், குழந்தைப்பேறு போன்ற விடயங்கள் பற்றியும் விவாதிக்கின்றார்கள். அவர்கள் எதிர்பாலார் மீது ஈர்ப்புடையதாகவும் உடல் கவர்ச்சியில் நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பர். பத்து முதல் பன்னிரண்டு வயது காலங்களின் பூப்பெய்தலை ஒட்டிய மாற்றங்களும் அது தொடர்பான உணர்வுகளும் எதிர்பாலார் மீது காதல்மயப்படுகிற உணர்வுகளையும் காட்டுவார்கள்.

ஆண் குழந்தைகள் சுய புணர்ச்சிகளின் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கலாம். இத்தகைய மாற்றங்கள் சாதாரணமாக இத்தகைய வயதுகளின் ஏற்படுகின்றன. இவற்றை சில பெற்றோர் அசாதாரண நடத்தைகளாக எண்ணி குழப்பம் அடைகின்றார்கள். இத்தகைய காரணத்தினாலேயே இதனை சற்று விபரமாக தந்துள்ளேன்.

கட்டிளமைப்பருவம் உடல்,உள வளர்ச்சிகளுடன் பாலியல் ரீதியான வளர்ச்சி நடைபெறுவது இந்தக்காலப்பகுதிகளிலே ஆகும். உடலில் கோமோன் சுரப்புக்களின் அளவு அதிகமாவதுடன் உடல் மாற்றங்களையும் இந்தக் காலப்பகுதிகளின் அதிகமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

பருவமடையும் போது ஆண்களிலும் பெண்களிலும் ஏற்படுகின்ற உடல், உருவ மாற்றங்களினால் முகப்பருக்கள், உடல்மணம், உடல் உரோமங்கள்,குரல் மாற்றங்கள், பிறப்புறுப்பின் அளவு, மார்பகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் வேறுபாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் அவர்களுடைய சமூகக் கட்டுப்பாடுகளும் அவற்றை தீர்மானிக்கின்ற களமாக அமைந்துவிடுகின்றது. பால் உறுப்புக்களின் திடீர் வளர்ச்சியும் அதனை ஒட்டிய உடல் மாற்றங்களினாலும் நிகழ்கின்றன. சுயஇன்பம் என்பது ஒரு ஏற்புடைய நிகழ்வாக இக்காலத்தில் இருபாலாரிடத்திலும் காணப்படுகிறது .

இவை தவிர பாலியல் உணர்வுகள், காதல்,முத்தம்,உடலுறவு ஆகியவை பற்றி வெளிப்படையாகவும் ஆபாசமின்றி மாணவர்கள் மத்தியில் காதல் பற்றி சிறு வயதிலேயே அறிந்துவிடுகின்றனர். அந்தச்சொல்லின் முழு அர்த்தம் தெரியாவிட்டாலும் எதிர்பாலிடை கவர்சியின் வளர்ச்சிகாலத்தினை படிநிலைகளை அடைந்து காலத்தில் தவறான அல்லது முறைகேடாக பாலியல் பற்றி அறிய முற்படல் ,தவறான பாலியல் நடத்தை படங்களை பார்தல் ,பாலியல் காட்சிகளை பார்த்தல் ,பாலியல் கதைகளை படித்தல், போன்ற விடயங்களில் அதிகம் ஈடுபடுகின்றார்கள்.

தற்போது கையடக்க தொலைபேசி அல்லது இணையத்தினை பாவிக்காத அல்லது பாவிக்க தெரியாத மாணவர்கள் என்றால் என்கேனும் சிலர்தான் இருப்பார்கள் இன்றைய கற்றல் செயற்பாட்டின் போது இணைய ஊடகங்களின் பங்கு அதிகரித்து காணப்படுகின்றது இது பயனுள்ளதாகிருக்கும் அதே நேரத்தில் பிள்ளைகள் அதிக தேடல்களில் இருக்கும் இந்த பாலியல் சார்ந்த விடயங்கள் பற்றிய தவறான அல்லது முறைகேட்டான விடயங்களை கற்றுக்கொள்கின்றார்கள். பிள்ளைகள் பாவிக்கின்ற கைபேசி அல்லது இணையங்கள்
என்ன விடயத்தில் பிள்ளைகள் நேரத்தினை செலவிடுகின்றார்கள் என பெற்றோர்களும்,ஆசிரியர்களுக்கும் , கண்காணித்திட வேண்டும்.

யுத்தத்தின் விளைவாக. இடப்பெயர்வுகளும்,இடைத்தங்கல் முகாம் வாழ்க்கையும்,மீழ்குடியேற்றங்களின்போதும் பெற்றோர் இரவில் பிள்ளைகளுடன் ஒரே அறையில் படுத்துறங்கும் போது அவர்கள் தூங்குவதாக எண்ணி தாய் தந்தை தமது உறவில் ஈடுபட்டிருத்தல், பிள்ளைகளை காம இச்சையுடன் அந்தரங்கப் பகுதிகளைக் பிள்ளைகளிடத்தில் காட்டுதல் அல்லது பிள்ளைகளைகளின் தனிப்பட்ட மறைவான பகுதிகளை தொடுதல் ஆகியவற்றின் மூலமாகவே பாலியல் மனக் குழப்பங்களுக்கு பிள்ளைகள் ஆளாகிறார்கள். இதனால் சாதாரண குழந்தைகளைப் போல் உற்சாகத்துடன் படிக்கவோ,விளையாடவோ இயலாமல் குழப்பத்துடன் காணப்படுகிறார்கள்.

பெற்றோரை இழந்த பிள்ளைகள் அல்லது குடும்ப வறுமை காரணமாக நெருங்கிய உறவினர்களுடன் வாழும், வளரும் பிள்ளைகளுக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதுபோல் நடித்து அவர்களின் அன்பைப் பெற்று அந்த உரிமையில் தவறாகவும் பிள்ளைகளை வழிநடத்துகின்றார்கள்.

இத்தகைய கொடுமைகள் பரவலாக ஏழை, பணக்காரர் ,படித்தவர்,பாமரர்கள் என்ற எந்த வித்தியாசமின்றி பாதிக்கப்படுகின்றார்கள் இவர்களில் பாதிப்புக்கு உள்ளான அல்லது உள்ளாகிக்கொண்டிருக்கின்ற அல்லது உள்ளாகக்கூடிய பிள்ளைகளுக்கு உளச்சமூக சிகிச்சை ,உளச்சமூக தலையீடு ,அளிக்க வேண்டியது மிக முக்கிய பங்கினை பாடசாலைச் சமூகம் கொண்டிருக்கின்றது. பாடசாலையில் உள்ள உளவளத்துணை ஆசிரியரின் கடமை பொறுப்பாகவும் இருக்கின்றது மாணவர்கள் மேல் சிறப்பு கவனம் தேவை. மாணவர்கள் பெற்றோரினை விட பாடசாலை ஆசிரியர்களிடம் தான் பொதுவாக அதிக நேரத்தைச் செலவிடுகின்றார்கள் ஆகவே இவர்களை காக்கும் அறிவூட்டவுமான தார்மீகப்பொறுப்பு ஆசியர்களிடம் உள்ளது.

பாடசாலைக்குப் பெற்றோர்கள் மிகுந்த அக்கறையுடன் பிள்ளைகளை ஆசிரியர்கள் பொறுப்புடன் கவனித்துக்கொள்வார்கள் என நம்புகின்றார்கள். பொதுவாக பிள்ளைகள் பாடசாலையில் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்களின் வேலைப்பழு காரணங்களினால் கவனிப்பதில்லை. பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும். அதற்கான நாளாந்த வருமானத்தினை பற்றி மட்டுமே சிந்தனையுள்ளாவர்களாக இருக்கின்றார்கள்.

இதில் மிக வேதனை தரும் விடயம் என்னவென்றால் மாத,பிதா,குரு,தெய்வம்,இதில் ஆசிரியர்களை குரு கடவுளாகவே மதிக்க வேண்டும் என்று எமது சமூகம் கற்று கொடுத்திருக்கின்றது.இதில் சில புல்லுருவி ஆசிரியர்களின் விசித்திரமான நடத்தைகள் இருப்பது மிகவும் கவலைதரும் விடயம் ( எல்லாஆசிரியர்களையும் சொல்லவில்லை ) அண்மைக் காலமாக பத்திரிக்கைகளில் ஒரு நாளைக்கு ஒரு செய்தி எனிலும் வருகின்றது

பாடசாலையில் ஆசிரியர்கள் ஆண் பிள்ளைகளை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் , மாணவிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதற்காகக் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார், அல்லது ஆசிரியரைக் கைது செய்யக் கோரி மாணவர்கள் ,பெற்றோர்கள், ஆர்ப்பாட்டம் என்று தினமும் நாம் பத்திரிக்கைகளில் படிக்கும் செய்திகள் மிகவும் வேதனையுற்று கவலை தருவதாக இருக்கின்றது

யுத்த அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,
மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் பிள்ளைகள், போர் விளைவின் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் அல்லது இருவரையும் இழந்தவர்கள் ,குடும்ப உறவுகளை இழந்த பிள்ளைகள்,பாலியல் கொடுமைகளுக்கும் உள்ளாகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது என்பது, பாலினம்,சமூகநிலை, இனம், மத வேறு பாடுகள் இன்றி நகரங்கள், கிராமப் பகுதிகள் என்ற எல்லா இடங்களிலும் நடைபெற்று வரும் ஒரு நோயாகவே காண முடிகின்றது.

இந்த நிலையில் தான் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வினை பாடசாலைகளிலும் ஊடகங்கள் வாயிலாகவம் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

பாலியல் கல்வி பற்றி சரியான அணுகுமுறையுடனும், தெளிவான பார்வையுடனும், உறுதியான வரை முறையுடன் கூடிய பாடத்திட்டங்களை வயது,வகுப்புகள் வாரியாக என்ன என்பதையும் கல்வி அமைச்சு முடிவு செய்து ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் என தெளிவான வரையறையையுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

பெற்றோர் விழிப்புணர்வு செயற்பாடுகள் மூலம் பிள்ளைகள் பாடசாலையில் பாலியல் கல்வியில் என்ன விடயங்களைப் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தப்பட வேண்டும். பிள்ளைகள் சரியான விடயங்களைத்தான் கற்றுக் கொள்கிறதா, தேவையானவை மட்டும் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்பதை பெற்றோரும் கவனிக்க வேண்டும்.

பால்வினை நோய்கள், அதுகுறித்த விழிப்புணர்வு பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இருத்தல் மிக மிக அவசியம். மேலும் வாழ்க்கை முறை பாலியல் வளர்ச்சியில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை பற்றிய விளக்கமும் அவசியம்.

பிள்ளைகள் புகை பிடித்தல், மது அருந்துதல் தவறான பாலியல் ஈடுபாடுகள் போன்ற தீய பழக்கங்களில் இருந்து மீள்வதற்கான அல்லது வாய்ப்புகளை உருவாக்கிட ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகள் மனம் திறந்து பேசுவதற்கான தளத்தினை உருவாக்க வேண்டும்.

பாடசாலைகளில் உள்ள உளவளத்துணை ஆசிரியர்களிடம் பிள்ளைகள் தமது தாம் எதிர் கொள்ளுகின்ற பிரச்சினைகளையும் சவால்களையும் மனம் திறந்து பேசுவதற்கான உறவு நிலையை பிள்ளைகளுடன் வைத்திருத்தல் வேண்டும்.பாலியல் சீரழிவுகளிலிருந்து சமூகத்தை மீட்டு பாதுகாக்கவும் தொடர்ச்சியான முயற்சிகளில் அரச திட்டங்களும் கல்வி நடமுறைகளும் விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாடசாலைகளில் பாலியல் கல்வி தேவையான ஒன்றா - பாலா சுதர்சன் Reviewed by NEWMANNAR on July 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.