அண்மைய செய்திகள்

recent
-

11 கிராமங்களை இராணுவம் விடாது! இழப்பீடு தருவதாகக் கடிதம், கூட்டமைப்பு எச்சரிக்கை....


யாழ். வலிக்காமம் வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக் காரணமாக அந்தக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்றும், அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு பொருத்தமான இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம், யாழ். மாவட்டச் செயலகத்தால் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 171 குடும்பங்களுக்கு நேற்று விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடிதங்களைக் கொண்டு சென்ற கிராம சேவையாளர்களுக்கு நலன்புரி நிலைய மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு கடிதத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு நாளை வருகை தரவுள்ளார். இந்நிலையில், நலன்புரி நிலையங்களை முழுமையாக மூடுவதற்கு கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதற்கு அமைவாக முதல் கட்டமாக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள காணியில்லாத குடும்பங்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்படும் என்று கடிதம் வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக, விரைவில் விடுவிக்கப்படவுள்ள 460 ஏக்கர் காணியினுள்ளும் உள்ளடங்கும், நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள காணி உரிமையாளர்களுக்கு காணிகள் விடுவிக்கப்படும் என்ற கடிதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நலன்புரி நிலையங்களில் எஞ்சியுள்ள மக்களுக்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தங்களுடைய காணி தேசிய பாதுகாப்புக் காரணமாக தற்போது மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட முடியாது.

காணிக்குரிய பெறுமதி இழப்பீடாக வழங்கப்படும் என்ற கடிதம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நலன்புரி நிலையங்களிலுள்ள சுமார் 171 குடும்பங்களுக்கு இந்தக் கடிதம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.

மாவட்டச் செயலகத்தால் இதற்குரிய கடிதம் தயாரிக்கப்பட்டு, நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள பிரதேச செயலர்கள் ஊடாக, கிராம சேவையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

கிராம சேவையாளர்கள் இதனை மக்களிடம் கொண்டு சென்ற போது, மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தையிட்டி வடக்கு, மயிலிட்டி வடக்கு, மயிலிட்டித்துறை, பலாலி மேற்கு, தென்மயிலை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும், பலாலி கிழக்கு, பலாலி வடக்கு, பலாலி தெற்கு, வசாவிளான் மேற்கு, குரும்பசிட்டி, கட்டுவன் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதியாகவும், பாதுகாப்பு அமைச்சின் மேற்படி அறிவுறுத்தலுக்கு அமைய விடுவிக்கப்பட முடியாத இடங்களாக அறிவிக்கப்பட்டன.

கடிதம் வாங்க வேண்டாம்! பிரதமருடன் பேச்சு

காணிகள் விடுவிக்கப்படாது இழப்பீடு வழங்கப்படும் என்ற கடிதத்தை பொதுமக்கள் எவரையும் வாங்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

"கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டாம். அத்துடன் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்து கையெழுத்து வாங்கும் எந்தப் படிவத்திலும் கையெழுத்திட வேண்டாம்.

வலி. வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் நீதிமன்றத்தில் எம்மால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மேற்படி நடவடிக்கை முன்னெடுப்பது முற்றிலும் தவறானது.

மக்கள் பிரதிநிதிகளான எம்முடன் இது தொடர்பில் பேசவில்லை. அரச அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்பட முனையக் கூடாது.

காணிகள் விடுவிக்கப்பட மாட்டாது என்று எப்படி முடிவு எடுப்பீர்கள். இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இது தொடர்பில் பேச்சு நடத்துவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

11 கிராமங்களை இராணுவம் விடாது! இழப்பீடு தருவதாகக் கடிதம், கூட்டமைப்பு எச்சரிக்கை.... Reviewed by Author on August 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.