அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்த அச்சமும் இல்லை! ப.சத்தியலிங்கம்
வட மாகாண சபை தமிழர் வரலாற்றில் முதன்முறையாக ஸ்தாபிக்கப்பட்ட சட்ட ரதியான சபையாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டிருக்கும் மாகாணசபை உருவாக்கப்பட்டு 03 வருடங்கள் பூர்த்தி செய்யப்படாதுள்ள நிலையில் மாகாண அமைச்சர்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கே என்ன குற்றம் செய்தார்கள் என்ற விபரங்களை தெரியப்படுத்தாமல் அவர்களுக்கெதிராக விசாரணை நடாத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை.
வழமையான அரசாங்க உள்ளக விசாரணைப்பொறிமுறைகள் மாகாணத்தில் உள்ளபோதும் அதைவிடுத்து வெளியக விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மூன்று தசாப்த யுத்தத்தின் மூலம் எல்லாவழிகளிலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்ட எமது சமூகத்திற்கு கிடைத்த தற்காலிக தீர்வே மாகாணசபை முறைமையாகும்.
அதிகாரமற்ற சபையாக இருந்தபோதும் கொடிய யுத்தத்தால் துவண்டுபோயுள்ள எமது மக்களுக்கு தற்காலிக ஓய்வாகவே இந்த மாகாணசபையை ஏற்று அரசியலுக்குள் பிரவேசித்தோம்.
தொழில் ரீதியாக மருத்துவராக பூரண திருப்தியுடன் மக்களுக்காக கடந்த 20 வருடங்களாக சேவை செய்துள்ளேன்.
வடக்கில் ஏற்பட்ட இயற்கை, செயற்கை பேரவலங்களின்போது நானாக முன்வந்து அரச கட்டுபாடற்ற பிரதேசங்களில் சவால்களுக்கு மத்தியில் பணியாற்றியுள்ளேன்.
நான் ஒருபோதும் அரசியலுக்கு வருவேனென்று சிந்தித்ததே இல்லை. காலத்தின் தேவை கருதி அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டேன்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னமே எனது தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் எனது குடும்பதேவைகளை பூர்த்தி செய்து வசதிவாய்ப்புகளுடன் வாழ்க்கை நடத்தியவன்.
கௌரவமான மருத்துவர் பணியை விட்டு மக்களுக்கு பணியாற்ற அரசியலுக்கு வந்த எனக்கு அரசியல் மூலம் எந்த தனிப்பட்ட தேவையையும் பூர்த்தி செய்யவேண்டிய அவசியம் இல்லை.
அதற்காக நான் அரசியலுக்கு வரவும் இல்லை. எனினும் சிலரின் கபடநோக்கங்கள் நிறைவேறுவதற்காக அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தியுள்ளனர்.
சந்தேகம் என்பது பொல்லாத நோய். அது நாட்டுக்கும் பொருந்தும், வீட்டுக்கும் பொருந்தும். அதை முளையிலேயே கிள்ளி விடுவது நல்லது.
அந்த வகையில் விசாரணைக்குழுவொன்றை அமைத்து உண்மையை வெளிக்கொண்டுவருவது நல்லவிடயம்.
எனினும் எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாது விடின் அதற்கு வகைசொல்வது யார். சட்டத்தின் பிடியிலிருந்து ஓர் குற்றவாளி தப்பினாலும் நிரபராதி தண்டிக்கப்டக்கூடாது என்பது மரபு.
கொடிய யுத்தத்தின் பின்னர் அதன் வடுக்களையும், ரணங்களையும் மனதில் சுமந்தவர்களாக எமது மக்கள் ஏங்கித்தவிக்கும் நிலையில் அவர்களுக்கு செய்யவேண்டிய எவ்வளவோ பணிகள் எம்முன்னே உள்ளன.
அவற்றை விடுத்து நம்மில் சிலர் பதவிக்காகவும், சுயநல அரசியல் காரணங்களுக்காகவும் மற்றவர்கள் மீது வீண்பழிசுமத்த முற்படுவது துரதிஷ்டவசமானது. 13வது திருத்தம் தமிழ் மக்கள் இழந்தவைக்கு ஒருபோதும் நிவாரணத்தை கொடுக்காது.
அரைகுறை அதிகாரமுடைய மாகாண சபையை வைத்து மக்களின் பிரச்சனைகளில் சிறிய பகுதியையாவது தீர்க்க முயலும் எமக்கு மன உளைச்சலை தருவதாகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அமைந்துள்ளன.
எனக்கு வழங்கப்பட்ட அமைச்சைபொறுத்த வரை துறைசார்ந்தவன் என்ற வகையில் நாட்டின் ஏனைய மாகாணங்களின் சுகாதார துறைக்கே முன்மாதிரியான பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
இலவச நோயாளர் காவு வண்டிச்சேவை, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம், கணனிமயப்படுத்தப்பட்ட தரவு வங்கி, மாகாண சுகாதார சேவைக்கான ஐந்தாண்டு திட்டம் இப்படி பல புதிய விடயங்கள் நாட்டின் வேறு எந்த மாகாணத்திலும் நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்கள் நாம் ஆரம்பித்துள்ளோம்.
வெறும் சட்டத்தில் மட்டுமுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்துமுகமாக பல நியதிச்சட்டங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. மக்களின் தேவைக்கும், மாகாண சபையின் இயலுமைக்கும் பாரிய இடைவெளியுள்ளது.
இதற்கு காரணம் அமைச்சர் அல்ல. சட்டத்திலுள்ள பிரச்சனை. அரசியல் முதிர்ச்சியுள்ள யாவருக்கும் இதுபுரியும்..
இவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்காது, செய்யும் நல்லகாரியங்களை பாராட்டாதவர்கள் மற்றவர்கள் மீது குறைகளை சொல்லும் தங்கள் பழக்கத்தை மாற்ற முயலவேண்டுமென அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்த அச்சமும் இல்லை! ப.சத்தியலிங்கம்
Reviewed by Author
on
August 30, 2016
Rating:

No comments:
Post a Comment