இடம்பெயர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருக்கும் மக்கள் தமது மீள்குடியேற்றம் குறித்து தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்ற போதிலும் அந்தப் பிரச்சினைக்கு இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் 27 வருடங்களாக வாழ்ந்து வரும் மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் முறையிட்டு வருகின்ற போதிலும் அதற்கான உரிய பயன் கிடைக்கவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பதில் பொறுப்பதிகாரி அன்ட் மாரி டில்சன் தலைமையிலான அதிகாரிகள் விஜயம் செய்திருந்தனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனைச் சந்தித்து பேசியிருந்ததுடன் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது மருதனார் மடம் – சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் வசித்து வருகின்ற மக்களை உலக வங்கியின் பிரதிநிதிகள் சந்தித்து தற்போதைய நிலைவரம் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அந்த மக்கள் தம்மைப் பார்க்க வருகின்றவர்கள் அனைவருக்கும் எமது பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல முறை கூறிவிட்டோம்.
கடந்த முறை முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களுக்கும் நாம் எமது பிரச்சினைகளை கூறியிருந்தோம்.
ஆனால் யாராலும் எதுவுமே நடைபெறவில்லை என்று அவர்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.
இங்கு தங்கியுள்ள எமக்கு உரிய வேலையில்லை. பிள்ளைகளுக்கு முறையான கல்வி இல்லை. எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
ஒரு சிறிய கொட்டிலுக்குள் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மருமகன், மருமகள் என எல்லோரும் வாழ்கின்றோம். சமூக ஒழுக்கத்திற்கு ஒவ்வாத வாழ்க்கையையே நாம் வாழ்ந்து வருகின்றோம்.
நாம் எமது சொந்த மண்ணில் வாழ்வதற்கே விரும்புகின்றோம். எங்களுடைய நிலத்தை எங்களிடம் கொடுங்கள் என அரசாங்கத்திடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று நலன்புரி முகாமில் வாழும் மக்கள் உலக வங்கியின் பிரதிநிதிகளிடம் கண்ணீர் மல்க எடுத்துக்கூறியிருக்கின்றனர்.
இதேபோல் வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மல்லாகம் – கோணப்புலம் முகாமில் வசித்து வருகின்ற மக்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில் நலன்புரி முகாம்களுக்கு அமைச்சர் மங்கள சமரவீர விஜயம் செய்திருந்தார்.
இதன்போதும் இங்கு வாழும் மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துமாறும், இல்லையேல் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என்றும் எடுத்துக்கூறியிருந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் வலிகாமம் வடக்கிலுள்ள மயிலிட்டி இறங்குதுறையையும் பார்வையிட்டிருந்தார்.
இப்பகுதியில் மக்கள் மீளக்குடியேற்றப்படாத நிலையில் இருந்து வருகின்றனர். மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் தம்மை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டுமென்று அங்குள்ள மக்கள் கோரிக்கையும் விடுத்திருக்கின்றனர்.
கடந்த வருடம் தேசிய நத்தார் தின நிகழ்விற்கு யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதும் மக்கள் தாம் படும் கஷ்ட துன்பங்களை கண்ணீர் மல்க தெரிவித்ததுடன் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டுமென்று கோரியிருந்தனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் தம்மை பார்வையிட வருகின்ற அனைவரிடமும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
ஆனால் யாரிடம் முறையிட்டும் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று ஏமாற்றம் அவர்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
இந்த ஏமாற்றத்தையே உலக வங்கியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அந்த மக்கள் எடுத்துக்கூறியிருக்கின்றனர்.
கடந்த அரசாங்க காலத்தில் பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிப்பதற்கோ அல்லது இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கோ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் கடந்த வருடம் பதவியேற்ற நல்லாட்சி அரசாங்கமானது இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்கும் மக்களை மீளக்குடியேற்றுவதற்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
ஆனாலும் இந்த நடவடிக்கைகளின் வேகம் போதாமல் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களது காணிகளை மீள ஒப்படைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்த நடவடிக்கையில் தொடர்ந்தும் மந்தநிலை காணப்படுகின்றது. இதனால் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தமது அதிருப்தியை தற்போது வெளிக்காட்டி வருகின்றனர்.
அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்ற போதிலும் அதிலும் திருப்தி கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
கீரிமலை, மயிலிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கென காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியில் 133 வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அதில் 100 வீடுகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. மயிலிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் தமது சொந்த இடத்திலேயே தம்மை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் மயிலிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த பூர்வீகக் குடிகளைக் கொண்ட மக்கள் இந்த வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளைப் பெறுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.
அந்த மக்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளே இந்த வீடமைப்புத்திட்டத்தில் குடியேறுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீளக்குடியேற்றும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாக தெரிகின்றது.
ஆனாலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் படையினர் வசமுள்ள காணிகள் முழுமையாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
ஆனால் படையிருக்கு தேவையான காணிகள் பொதுமக்களிடம் மீளக்கையளிக்கப்பட மாட்டாது. அதற்கான மாற்று இடமோ, இழப்பீடோ வழங்கப்படும் என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் முழுமையான மீள்குடியேற்றம் என்பது சாத்தியமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன், வலி. வடக்கிலுள்ள மக்களது பூர்வீக காணிகளில் இராணுவத்திற்கு தேவையான காணிகளை எடுத்துக்கொண்டு அதற்கு கவர்ச்சிகரமான இழப்பீடு தருவதாக யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி கூறுவதானது சொந்த அப்பா, அம்மாவை விட்டு வாருங்கள், வேறு நல்ல அப்பா, அம்மா தருவதாக கூறுவதைப் போல் உள்ளது. இந்த மக்கள் மீண்டும் மீண்டும் தங்கள் சொந்தக் காணிகளையே கோரி வருகின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று விசனம் தெரிவித்திருக்கின்றார்.
எனவே தற்போதைய நிலையில் இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இந்த மக்கள் இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி வலியுறுத்தி சலிப்படைந்த நிலையில் போராட்டங்களை நடத்துவதற்கு முயற்சிப்பதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கமானது இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இடம்பெயர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!
Reviewed by Author
on
August 31, 2016
Rating:

No comments:
Post a Comment