அண்மைய செய்திகள்

recent
-

நாம் சொந்த மண்ணில் சுயமாக சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு அனுமதியுங்கள் - வடக்கு முதல்வர்!


மாணவ சமுதாயத்தினரிடையே ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் உறுதுணையாக அமையக் கூடும் என்பதில் சந்தேகம் இருக்காது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் 28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இன்று (10) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் தமிழர்கள் பலர் பௌத்தர்களாக இங்கு வாழ்ந்தார்கள். பின்னர் திரும்பவும் இந்து மதத்திற்கு மாறினார்கள்.

இங்கே போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் தென்பகுதி இளைஞர் யுவதிகளிடம் ஒரு விடயத்தைத் தெரிவிக்கலாம் என எண்ணுகின்றேன்.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் இன்றைக்கு 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் வாழ்விட பூமியாக இருந்து வந்துள்ளது.

அண்மைக் காலங்களில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகளினால் இங்குள்ள மக்களின் வாழும் உரித்து கேள்விக்குறியாக மாற்றப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இங்குள்ள இளைஞர் யுவதிகள், மத்தியில் இருந்த அரசியல் தலைமைகளினதும், இங்கிருந்த முகவர்களினதும் அடக்கு முறைகளுக்கு எதிராக எழுந்தனர்.

இதன் விளைவாகவே கொடிய நீண்டகால யுத்தமொன்று வலுப்பெற்று எத்தனையோ ஆயிரக் கணக்கான உயிர்களைக் காவு கொண்டது.

இந்த யுத்தம் யாரும் விரும்பி மேற்கொண்டதொன்றல்ல. தமது இனத்தை சேர்ந்த மக்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டு எந்த இள இரத்தமும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

தம் கண்களுக்கு முன்பே தம் இன வயோதிப தாய், தந்தையர், சகோதர சகோதரிகள் இன்னல் படுத்தப்பட்டதை அவர்கள் 1958, 1961, 1977, 1983 போன்ற பல கலவரங்களின் போதும் கண்ணுற்றார்கள்.


கடந்த 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மகாநாட்டில் கண்ணுற்றார்கள். அத்துடன் பல்கலைக்கழகங்களில் தரப்படுத்தலைக் கொண்டுவந்து எமது மாணவர்கள் பெருவாரியாக பல்கலைக்கழகங்களினுள் நுழைவதைத் தடைப்படுத்தினார்கள்.

advertisement


இவற்றைக் கண்டு மௌனிகளாக நிற்க இயலாத சந்தர்ப்பத்திலேயே போர் புரியவேண்டும் என்ற ஒரு கடுமையான முடிவுக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

இவை இப்போது முடிந்துபோன கதைகள் என இன்றைய அரசியல் தலைமைகள் கூறுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று, இரண்டு என தமது பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய் தந்தையர் இதனை எவ்வாறு முடிந்துபோன கதைகள் என ஏற்றுக் கொள்வது?

அவர்களின் உயிர்களின் இழப்புக்கான பரிகாரங்கள் என்ன? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன? தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் இதுவரையில் கிடைக்கப் பெற்றதா? இவை அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன.

நீங்கள் இந் நிகழ்வுகளுக்காக இங்கே வந்து தங்கியிருக்கும் மிகக் குறுகிய இந்த மூன்று நாட்களில் இங்குள்ள மாணவ, மாணவியரின், இளைஞர், யுவதிகளின் பழக்க வழக்கங்கள் அவர்களின் உபசரிக்கும் தன்மை சகோதரத்துவ நடத்தைகள் அனைத்தையும் காண்பீர்கள்.

இவ்வாறு அனைத்து விடயங்களிலும் உங்கள் உறவுகளாக நண்பர்களாக உடன் பிறவா சகோதரர்களாக சகோதரிகளாக விளங்கக்கூடிய இப் பகுதி இளைஞர் யுவதிகளை கௌரவத்துடனும் சுதந்திரமாகவும் தங்கள் பிரதேசங்களில் சுயமாக வாழ அனுமதிப்பதில் தென் பகுதி மக்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கின்றன?

அடக்கி ஆள வேண்டும் என்ற மனோ நிலையில் தென்பகுதித் தலைவர்கள் இன்னமும் இருப்பதன் சூட்சுமம் என்ன?

இவ் விடயத்தை நாம் பல ஆண்டுகளாக தென் பகுதி அரசியல் தலைமைகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இதுவரை எதுவித முன்னேற்றகரமான செயற்பாடுகளும் நடைபெறுவதாக இல்லை.

ஒரு கையால் தருவது போல் தந்து மறு கையால் தட்டிப்பறிக்கின்ற கபட நாடகமே அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. பல வெளிநாட்டுத் தலைவர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் இங்கு வருகின்றார்கள்.

எமது பிரச்சனைகளை கேட்டுத் தெரிந்து கொள்கின்றார்கள். நாம் பிரிவினை பற்றி பேசவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் எமது பகுதியில் சுயமாக சுதந்திரமாக சொந்த அடையாளங்களுடன் வாழ்வதற்கு ஏற்ற ஒரு நிலையை ஏற்படுத்தித் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

அவர்களும் சர்வதேச அரங்கத்தில் நடைபெற்றுள்ள வேறு நாடுகள் சம்பந்தமான நிகழ்வுகளை மனதில் வைத்து எமது கோரிக்கை நியாயமானதே என்று கூறுகின்றார்கள்.

நாம் சொந்த மண்ணில் சுயமாக சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு அனுமதியுங்கள் எனக் கேட்டால் தென் பகுதித் தலைவர்கள் நாம் பிரிவினையைக் கோருகின்றோம் என்ற தவறான தகவல்களை தென் பகுதிகளில் பரப்புகின்றார்கள்.

எம்மைத் தீவிரப் போக்குடையவர்களெனக் கூறுகின்றார்கள். இதனால் அப்பாவி சிங்கள மக்களும் எம் மீது ஆத்திரப்படுகின்றார்கள்.

எனவே தான் எமது நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றி தென் பகுதி சிங்கள இளைஞர் யுவதிகளிடம் நேரடியாக எமது கருத்தை தெரிவிக்க விரும்புகின்றோம்.

நீங்கள் இவ் விடயங்களை உங்கள் தாய் தந்தையருக்கு எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அயலவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.


இந்த நாட்டில் புரிந்துணர்வுடன் வாழக் கூடிய சமூகங்களின் தேவைப்பாடு என்ன என்பதை எடுத்துக் கூறுங்கள்.

அதாவது ஒரு இனம் இன்னோர் இனத்தை அடிமைப் படுத்தி வாழ நினைப்பது தவறு என்று கூறுங்கள்.

சகல மக்களும் இந்நாட்டு மன்னர்கள் என்ற எண்ணம் வலுப்பெற வேண்டும் என்பதை எடுத்துக் கூறுங்கள். அப்போது தான் இந்த நாட்டில் உண்மையான மனப்பூர்வமான சாந்தியும் சமாதானமும் ஏற்படும்.

தென் ஆபிரிக்காவில் அரசியல் யாப்பு பற்றிய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொண்டே நல்லிணக்கத்தில் இறங்கினார்கள். இங்கு இராணுவத்தை எம் மத்தியில் வைத்துக் கொண்டு எமது அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்காமல் நல்லிணக்கத்தில் இறங்கப் பார்க்கின்றார்கள்.

கிணற்றினுள் இருப்பவனுக்கும் கிணற்றுக்கு வெளியில் இருப்பவனுக்கும் இடையில் நடைபெறும் உடன்பாடு போன்றே இன்றைய சமாதானச் செயற்பாடுகள் எனக்குத் தோன்றுகின்றன. கிணற்றுக்குள் இருப்பவனுக்குச் சுயமாக

இயங்க வசதி இருக்கின்றதா என்பதை நாங்கள் ஆராய வேண்டும். அவனையும் வெளியில் எடுத்த பின்னர்தான் உடன்பாடுகள் அமைய வேண்டும்.

ஒரு நாட்டின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய இளைஞர் யுவதிகளும் மாணவர்களும் மனது வைத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை எனலாம். அந்த வகையில் தமிழ் மக்களின் இன்றைய தேவை, அவர்களின் தற்போதைய நிலைப்பாடு என்பவற்றை நன்கு புரிந்துகொண்டு அவர்களையும் இந்த நாட்டின் சுய கௌரவம் உள்ள பிரஜைகளாக வாழ்வதற்கு உங்கள் பங்களிப்புக்களை நல்குங்கள் என மாணவ சமுதாயமான உங்களிடம் விநயமாக வேண்டிக்

கொண்டு இனி விடயத்திற்கு வருவோம்.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டிற்கும் அவர்களை இந்த நாட்டின் நற்பிரஜைகளாக, வீரம் மிகுந்தவர்களாக, சகோதரத்துவம் கொண்டவர்களாக மாற்றியமைப்பதற்காகவும் நாடளாவிய ரீதியில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

தங்கள் நடவடிக்கைகளை அவ் அப் பிரதேசங்களில் இலகுவாக முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் தேசிய சம்மேளனம், மாவட்ட சம்மேளனம், பிரதேச சம்மேளனம், இளைஞர் யுவதிகள் கழகம் என பல மட்டங்களில் இணைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றின் ஊடாக தமது செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.

இது அரசியல் குறிக்கோள்களை மையமாக வைக்காத வரையில் வரவேற்கத்தக்கது.

கட்சி அரசியல் இச் சம்மேளனங்களுள் உட்புகுத்தப்பட்டால் விபரீதம் விளையும் என்பதைக் கூறிவைக்கின்றேன்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகள் வடபகுதியில் எந்த அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி முழுமையான தகவல்கள் எமக்கு கிடைக்காத போதும் அவர்கள் இங்குள்ள மாணவர்களின் கலை கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தும் வகையில் கலாச்சார மத்திய நிலையம் ஒன்றை கோப்பாய்ப் பகுதியில் 5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட ஒரு காணியில் அமைக்க இருப்பதாக அறிகின்றேன்.

வடபகுதி, மக்களின் வழிவழியாக, வாய்மொழி மூலமாக அரங்கேற்றப்பட்டு வந்த பல நாடகக் கலைகள், தென் மோடி, வடமோடி கூத்துக்கள், இப்போது மருவிப்போய்விட்டன.

இவற்றைத் தேடி அறிந்து கொண்டு அவற்றை நாம் புத்தக வடிவிலேனும் அல்லது குறிப்புக்களாகவேனும் அச்சுப் பிரதிகள் ஏற்றி அழியாமல் அறிவுக்காகவேனும் பாதுகாக்க வேண்டும்.

அடுத்த வாரம் நாங்கள் மட்டக்களப்பில் பாரிய முத்தமிழ் விழாவொன்றினை நடத்தி அங்கும் இங்கும் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்ட இயல், இசை, நாடக மாதிரிகளை மேடையேற்ற உள்ளோம்.

இசைத் துறைகளில் எம்மவர்கள் இயல்பாகவே திறமைகளை கொண்டிருக்கின்ற போதிலும் அவர்கள் பல்வேறு கீழைத்தேய, மேலைத்தேய இசைகளை முறையாகக் கற்றுக் கொள்வதற்கு போதுமான அளவில் இசைக் கல்லூரிகள் இங்கு இல்லாமல் இருப்பது ஒரு குறைபாடாகும்.

இத்துடன் வாத்தியக் கருவிகளையும் மற்றும் நவீன இசைக்கருவிகளையும் அதற்கே உரிய இசை நுணுக்கங்களுடன் கற்றுத்தேர்ந்து அவற்றில் வல்லுனர்களாக மாறுவதற்குரிய இசைக்கல்லூரிகளும் அமைக்கப்படுதல் அவசியமாகும். இதனையும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பரிசீலிக்கலாம்.

எந்த ஒரு கலையையும் கற்பதற்கு மிகப் பொருத்தமான காலம் மாணவப் பருவமே. அக் காலத்தில் குறிப்பிட்ட விசேட கற்கைநெறிகளில் ஈடுபடாது பின்னர் அதற்காக மனம் வருந்துவது பிரயோசனம் அற்றது.

மாணவ மாணவியர்கள் குறிப்பாக குழந்தைப் பருவத்தில் இருந்து வாலிபப் பருவத்தை அடைவதற்கான இடைப்பட்ட காலம் மாணவர்களைப் பிழையான வழிகளில் வழிநடாத்திச் செல்வதற்கு உகந்த காலமாக கண்டறியப்பட்டுள்ளது.

இக் காலத்தில் முறையான கவனிப்பின்றி வெறுமையாக வேலையின்றி இருக்கக் கூடிய நிலையிலேயே மாணவர்கள் மதுபோதை, போதைப் பொருள் பாவனை, வீதிச் சண்டை, அடி தடி, வாள்வெட்டு போன்ற இன்னோரன்ன துர்ப் பழக்கவழக்கங்களைப் பழகிக் கொள்கின்றார்கள்.

இங்குள்ள மாணவ மாணவியர்கள் பலருக்கு வெளிநாட்டுப் பணம் வருவதால் கல்வி, ஒழுக்க நடவடிக்கைகளில் சிரத்தை காட்டுகின்றார்கள் இல்லை.

இந்த வயதில் உள்ளவர்கள் நல்லது கெட்டது அறியாதவர்கள். சினிமா பாணியில் தாம் ஏதோ சாதித்துவிட்டதாக கருதி பிழையான வழிகளில் சென்று விடுகின்றார்கள்.

எனவே, மாணவ மாணவியரை நாம் ஓய்வாக இருக்கவிடாது கற்றலுடன் சேர்த்து பல்வேறுபட்ட இசை, நடனம், நாட்டியம் போன்ற துறைகளிலும் விளையாட்டுக்களிலும் மற்றும் சாரணியம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வை வளப்படுத்துவதற்கும் தவறான வழிகளில் செல்லாது தடுப்பதற்கும் அவை உதவி புரிவன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இன்று நடைபெறவிருக்கின்ற இந்த நிகழ்வுகளில் ஆண்களும் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொள்வது சற்று வித்தியாசமானதாக அமைகின்றது.

விளையாட்டுக்கள் என்பன மாணவ மாணவியரையும் இளைஞர் யுவதிகளையும் அவர்களின் உடலில் இருக்கக் கூடிய சோம்பல் தன்மையை நீக்கிச் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் தமது கடமைகளை

ஆற்றக்கூடிய உத்வேகத்தை அளிப்பதாகவும், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை விருத்தி செய்வதாகவும் அமைவதால் இவ்வாறான போட்டிகள் அதற்குத் துணைபுரிவனவாக விளங்குகின்றன எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாம் சொந்த மண்ணில் சுயமாக சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு அனுமதியுங்கள் - வடக்கு முதல்வர்! Reviewed by Author on September 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.