9 வயதில் சாதனை படைத்த குடிசைவாழ் சிறுமி!
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் படிப்பறிவற்ற சிறுவர்களுக்கு சிறுவயதிலேயே கல்வித் தொண்டாற்றி வரும் 9 வயது சிறுமிக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவிக்க உள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். மூன்றாம் வகுப்பு படிக்கும் முஸ்கான், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டின் வாசலில் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை கடைவிரித்து, அப்பகுதியில் உள்ள எழுத்தறிவில்லாத குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடம் நன்கொடையாக அளித்த 25 புத்தகங்களை கொண்டு தனது வீட்டின் வாசலில் கடந்த ஆண்டு ஒரு சிறிய நூலகத்தை முஸ்கான் ஆரம்பித்தார்.
அந்த புத்தகங்களில் உள்ள ராஜா-ராணி கதைகள் மற்றும் நமது நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை கதை வடிவில் படிப்பறிவில்லாத அப்பகுதி குழந்தைகளுக்கு கற்பிக்கும் முஸ்கானிடம் தற்போது நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.
படிக்க தெரிந்த சில சிறுவர் - சிறுமியர் இந்த கட்டணமில்லாத நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துச் சென்று, வாசித்துவிட்டு, மறுநாள் கொண்டுவந்து திருப்பி தந்துவிட்டு, வேறு புத்தகங்களை கொண்டு செல்கின்றனர்.
நன்றாக படித்து, எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்பதுதான் தனது எதிர்கால லட்சியம் என்று கூறும் முஸ்கானின் கல்வித் தொண்டை பாராட்டி மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின்கீழ் விரைவில் 'சிந்தனை தலைவர்' பட்டம் வழங்கப்படவுள்ளது.
இந்த சிறு வயதிலேயே சமூக மாற்றத்துக்காக பாடுபடும் முஸ்கானின் சேவை எங்களை பெருமைப்படுத்தியுள்ளது என இவரது தாயார் மாயா கூறுகிறார்.
9 வயதில் சாதனை படைத்த குடிசைவாழ் சிறுமி!
Reviewed by Author
on
September 11, 2016
Rating:

No comments:
Post a Comment