யாழில் நவீனரக கருவியை அறிமுகம் செய்த பனை ஆராய்ச்சி நிறுவனம்.....
யாழ். கைதடியில் உள்ள பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் நவீனரக பனை ஏறு கருவி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யப்பான் நாட்டின் தொழில்நுட்பத்துடன் அண்மையில் யப்பான் நாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்தக் கருவிகள் யாழ்ப்பாணத்தில் பரீட்சார்த்தத்திற்கு விடப்பட்டுள்ள நிலையில் பரீட்சார்த்தம் வெற்றியளித்துள்ளதாகப் பனை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு புனர் நிர்மாணம் மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அண்மையில் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்று குறித்த கருவியை பார்வையிட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.
பனைமரம் நீண்ட உருண்டையான கிளைகளற்ற தன்மையைக் கொண்டிருப்பதால் இதில் ஏறுவது மிகவும் சிரமமான காரியமாகவுள்ளது. பனைமரப் பூந்துணர்களிலிருந்து சாற்றினை பெற்றுக்கொள்வதற்கும், ஓலை வெட்டுதல் போன்ற இதர வேலைகளுக்கும் பனைமரத்தில் ஏறுவது வழக்கமாகவுள்ளது.
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பயனை தமது குடும்ப வருமானமாகப் பெறும் குடும்பங்கள் பிரதானமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கிறார்கள். எனினும், பெருகி வருகின்ற நாகரீக வாழ்க்கை முறைகள் மற்றும் கல்வியறிவு மட்டத்தின் அதிகரிப்புக்கள் இத்துறையில் இளைஞர்கள் நாட்டத்தைக் குறைத்துள்ளது.
இந்த நிலையில் இத்தொழில்துறையை நவீன மற்றும் இயந்திர மயமாக்கலுக்குட்படுத்துவதன் ஊடாக மொத்த தேசிய உற்பத்தியில் பெரும் பங்காற்றுவதுடன், பனம் உணவுகள் மக்களின் போசாக்கு மட்டத்தையும் அதிகரிக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
பனைமரம் ஏறுவதை இயந்திர மயமாக்குவதன் ஊடாக இளைய சமூதாயத்தினை அதிகமாக ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக யப்பான் தொழில் நுட்பத்துடன் நவீனரக மரம் ஏறும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கருவிகள் மரம் ஏறுவதில் அனுபவமற்ற ஏனையோரும் பாவிக்கக் கூடியதாகவுள்ள காரணத்தால் மரம் ஏறுவதில் அனுபவமுள்ள தொழிலாளிகளுக்காக அலைந்து திரிய வேண்டிய தேவையில்லை. அத்துடன் பணவிரயம், நேரவிரயம் என்பனவும் தவிர்க்கப்படுகின்றது எனவும் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாழில் நவீனரக கருவியை அறிமுகம் செய்த பனை ஆராய்ச்சி நிறுவனம்.....
Reviewed by Author
on
September 14, 2016
Rating:

No comments:
Post a Comment