அண்மைய செய்திகள்

recent
-

சுதந்திரமாகவும் சகோதரத்துவத்துடனும் இந்த மண்ணில் சகல இனங்களும் வாழ்வதற்கான ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி முறையை தோற்றுவிக்கப்பட வேண்டும்-மன்னாரில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

இன்றைய எமது அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கையில் சுதந்திரமாகவும் சுய கௌரவத்துடனும் தமது தனிப்பட்ட அடையாளங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைப் பேணி அவற்றின் பால் ஒழுகுவதற்கு உரித்துடையவர்கள் என்ற கருத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். ஏனைய இனங்களின் அடக்கு முறைகளோ அதிகாரப் பிரயோகங்களோ எம்மைப் பாதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

சுதந்திரமாகவும் சகோதரத்துவத்துடனும் இந்த மண்ணில் சகல இனங்களும் வாழ்வதற்கான ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி முறையை தோற்றுவிக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

-வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழா இன்று வெள்ளிக்கிழமை (23) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,,,

வடமாகாணத்தின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற கலை பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வாக இன்று நடைபெறுகின்ற இந்த விழாவில் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

'தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு' என்றான் பாரதிதாசன்.

தமக்கே உரிய கலை, பண்பாட்டு, இலக்கிய விழுமியங்களை பேணிப் பாதுகாப்பதிலும் மரபுவழி பண்பாட்டு இலக்கியங்களின் இலக்கண புருஷர்களாக வாழ முனைவதிலும் ஆர்வம் கொண்டவர்கள் தமிழர்கள்.

அதனால் தானோ என்னவோ எமது இனம் இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் தமது பாரம்பரிய பண்பாட்டு சுவடுகளை விட்டுவிடாது அதன்வழி நடக்கமுனைந்துள்ளது. ஏனைய சமூகங்கள் எம்மைஅடக்க முற்படும் போது வீறுகொண்டு எழுகின்ற தமிழினமாக மாறவும் அவர்கள் பின்னின்றதில்லை.

தோல்விகள் தரையில் அல்ல. எமது மனத்தில்த்தான் தோன்றுகின்றன. மனதைப் பண்பட்டதாக மாற்ற எமது பண்பாடுகள், பாரம்பரியம், வரலாறு பற்றிய அறிவு மிக முக்கியம். அதே நேரத்தில் ஒற்றுமையின் அத்தியாவசியத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வே ஒற்றுமை இன்றேல் அனைவருக்குந் தாழ்வே' என்கின்றது எமது பண்பாடும் இலக்கியமும்.

எம்மிடையே காணப்படக்கூடிய மத,இன,வர்க்க வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் தமிழ் மொழியால் ஒன்றுபட்டு தமிழர்கள் என கூறிக்கொள்வதில் பெருமையடையும் காலம் வெகு தொலைவிலில்லை.நாம் மதத்தினால் வேறுபட்டாலும் மொழியினால் ஒன்றுபட்டவர்களாகவே இருக்கின்றோம்.

இதன் அடிப்படையிலேயே 'உலகமயமாக்கல் சூழலில் ஈழத்துக் கலை இலக்கிய கலாச்சார போக்கும் சவால்களும்' என்ற தொனிப்பொருளில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முத்தமிழ் விழா ஒன்று நடாத்தப்பட்டது. உரைகள், கூத்துக்கள், நாடகங்கள், நடனங்கள் எனப் பல்வேறு கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இந்த நிகழ்வில் இந்துக்கள், கத்தோலிக்கர்கள்,மறு கிறீஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள் என்ற வேறுபாடு இன்றி அனைவரும் தமிழால் ஒன்றிணைந்தவர்களாக அங்கு பிரசன்னமாகி இருந்தார்கள்.

தமிழ் மொழியின் மகத்துவம், அதன்பால் உதயமாகிய தமிழ் இலக்கிய கலாச்சாரங்கள்,அக்கலாச்சாரங்களைக் கடைப்பிடிப்பது அதன் வழி ஒழுகுதல்போன்ற பல விடயங்கள் குறிப்பிட்ட விழாவில் பேசப்பட்டன, ஆற்றுப்படுத்தப்பட்டன.

மட்டக்களப்பில் சுனாமியின் போது ஒரு விந்தை நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். பல்லாயிரம் நீர் மீன்கள் கடலில் இருந்து களப்பை நோக்கி சுனாமி வர ஓருசில நாட்களுக்கு முன்னரே படையெடுத்து வந்தன. பின்னர் சுனாமி வந்து போனபின் திரும்பவும் கடலுக்குப் போய்விட்டன. இது உண்மையில் விந்தை அன்று. பல காத தூரத்தில் கடல்கொந்தளிப்புக்கு இலக்காகியதை இயற்கையுடன் வாழும் அந்த ஜந்துக்கள் உணர்ந்து கொண்டன.

பாதுகாப்புத் தேடி ஓரிரு நாட்களுக்கு முன்னரே கரை நோக்கி, களப்பு நோக்கி படையெடுத்துள்ளன. இயற்கையோடு வாழ்ந்ததால் அவற்றிற்கு சில இயற்கையான புலன்கள் உணர்வுகள் இருப்பதை நாம் காணலாம். எமது பண்டைய மக்களும் இயற்கையோடு வாழ்ந்தவர்கள். அவர்களின் அறிவும் உணர்வுகளும் படிப்பால் அல்லாமல் அவதானங்களால் உருவாகியிருந்தன. பல கால அனுபவங்கள் அவதானிப்புக்கள் எம் மக்களை சில விடயங்களில் விற்பன்னர்கள் ஆக்கி விடுகின்றன. அவர்களின் அனுபவங்கள் தற்போது எம்முடன் பகிர்ந்து கொள்ளப்படாமலே ஆனால் அவர்களுடன் மறையும் ஒரு சூழல் உதயாமாகி வருகின்றது.

ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் முதுமை எய்திய எமது மக்களுடன் கலந்துறவாடி அவர்கள் பெற்றுள்ள அனுபவ அறிவை அறிந்து வெளியிட முன்வர வேண்டும். வானத்தைப் பார்த்து சரியாக எப்போது மழை வரும் என்று சொல்லக் கூடிய விற்பன்னர்கள் எம்மிடையே இன்றும் இருக்கின்றார்கள். கருவிகள் இல்லாமல் தமது கருத்தையும் கணிப்பையும் முன்வைத்து அவர்கள் அதைச் சரியாகக் கூறி விடுவார்கள். அழிந்து வரும் எம்மக்களின் அனுபவ அறிவை நாங்கள் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூற வருகின்றேன்.


உலகில் பேசப்படுகின்ற பல்லாயிரம் மொழிகளில் மிகவும் ஆதியான ஒன்றாகவும், செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றதுமான தமிழ்மொழியின் சிறப்புக்களையும்
தமிழின்பால் உருவாக்கப்பட்ட கலை இலக்கியப் படைப்புக்களையும் இன்னோரன்ன சமூகவியல், புராண திகாசங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதும்,

அவர்களை கௌரவிப்பதும் அவர்களின் ஆக்கங்களையும் கலைத்திறன்களையும் ஏனைய மக்களும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் அறிமுகம் செய்து வைப்பதுமான ஒரு நிகழ்வாகவே இன்றைய இந்த கலை பண்பாட்டு நிகழ்வைக் காண்கின்றேன்.

பல புலவர்கள், பண்டிதர்கள் மற்றும் கல்விமான்கள் வாழ்ந்து கல்விப் பணியும், இலக்கிய பணியும், கவிதைப் பணியும் ஆற்றியுள்ள இந்த மண்ணில் இன்றும் பல கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இலை மறை காயாக சமூகத்தில் அடையாளப்படுத்தப்படாதவர்களாக சமூகத்தை விட்டு ஒதுங்கி வாழ்வதை நாம் அவதானித்திருக்கின்றோம். அவ்வாறான அறிஞர்களை இனம்காண்பதற்கும் அவர்களை ஏனையவர்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்கும் அவர்களின் படைப்புக்களை வெளிக்கொணர்வதற்கும் இவ்வாறான தேடல்களும் ஊக்குவிப்புக்களும் தேவைப்படுகின்றன.

பண்டைக்கால கிராமிய கூத்து வடிவங்கள் மற்றும் இசை வடிவங்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஏற்ற அவர்களின் தனிப்பட்ட அடையாளங்களைப் பிரதிபலிப்பனவாக அமைந்திருக்கின்றன. தொழில்சார் கிராமியப் பாடல்களும் மற்றும் நாட்டார் பாடல் இசை வடிவங்களும், தாலாட்டுப் பாடல்கள், கும்மிப் பாடல்கள் மேலும் எமது இசை வடிவங்கள் அவற்றுடன் சேர்ந்த நாடகக் கலைகள், வாய்மொழி கூத்து வடிவங்கள் போன்றவை காலத்தால் மருவி இன்னோர் வடிவில் உருப்பெற்று சிதைந்து விடாமல் பார்த்துக் கொள்வது எமது தலையாய கடமையாகின்றது. பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது அதுதான்.

சுற்றுலா வருபவர்கள் எமது பாரம்பரியங்களிலும் பண்பாட்டிலும் நாட்டம் கொண்டே இங்கு வருகின்றார்கள். தம்மை விட வேற்று பாரம்பரியங்களைக் கொண்ட மக்களையும் அவர்களின் கலாசாரங்களையும் அறியவும் அவதானிக்கவுமே வருகின்றார்கள். எனவே எமது பாரம்பரியங்களைப் பாதுகாப்பது பொருளாதார விருத்திக்கும் அடி கோலுகின்றது.


இன்றைய எமது அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கையில் சுதந்திரமாகவும் சுய கௌரவத்துடனும் தமது தனிப்பட்ட அடையாளங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைப் பேணி அவற்றின் பால் ஒழுகுவதற்கு உரித்துடையவர்கள் என்ற கருத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். ஏனைய இனங்களின் அடக்கு முறைகளோ அதிகாரப் பிரயோகங்களோ எம்மைப் பாதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

சுதந்திரமாகவும் சகோதரத்துவத்துடனும் இந்த மண்ணில் சகல இனங்களும் வாழ்வதற்கான ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி முறையை தோற்றுவிக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

புதிய அரசியல் யாப்பு திருத்தங்களுக்கான முன்னெடுப்புக்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அந்தக் காலப் பொழுதில் எமது வாழ்வியல் உறுதிப்பாடுகளையும் அடையாளங்களையும் மற்றும் இன்னோரன்ன பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்து அவற்றை எமது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லக் கூடிய வழி வகைகளையும் நாம் ஆராய வேண்டும்.

எம்மிடையே சிறந்த இசை ஞானம் படைத்தவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் இசைத்தேடல்களை மேல் நிலைக்கு கொண்டுவருவதற்கு ஏற்ற பயிற்றுவிப்பு, பாடசாலைகள், இசைக்கல்லூரிகள் எம்மிடம் இல்லை. சிறந்த ஓவியக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களும் தங்கள் துறைகளில் முன்னேறுவதற்குநாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எமது மாணவ மாணவியருக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்குவதன் மூலமே அவர்களைச் சிறந்த கலைஞர்களாக மாற்ற முடியும்.

கலை என்பது ஒரு நாளில் அல்லது ஒரு சில மணித்தியாலங்களில் வந்துவிடுவதல்ல. கடுமையான பயிற்சியும் விடா முயற்சியுமே ஒருவரை சிறந்த கலைஞராக மாற்ற முடியும்.அந்த வகையில் இன்றையவாறான முன்னெடுப்புக்களும் ஊக்கப்படுத்தல்களும் எமது கலை வடிவங்கள், கலைப்படைப்புக்கள், கவிதைகள், ஓவியங்கள், நடனங்கள் என அனைத்து அடையாளங்களையும் பேணிப்பாதுகாப்பதற்கும் அவற்றை விரிவாக்கம் பெற வைப்பதற்கும் ஒரு உந்துதலாக அமைவன என்பதில் ஐயமில்லை.

உழைத்து களைத்த உடலுக்கு இனிய நாதம் ஒரு சுக உணர்வைக் கொடுக்கின்றது.
அதே போன்று கணணி மற்றும் எழுத்து வேலைகளுடன் ஆழ்ந்திருந்து களைப்படைந்த விழிகளுக்கு சிறந்த ஓவியங்களும் அதன் அழகிய வர்ணங்களும் ஒத்தடமாக அமைகின்றன.

உறங்காத விழிகளுக்கு இனிய தாலாட்டுப் பாடல் உறக்கத்தை அளிக்கின்றது. வயலில் வேலை செய்பவர்கள் தமது களையை மறந்து வேலையைத் தொடர அருவிவெட்டுப் பாடல்கள் ஆறுதல் அளிக்கின்றன. நெல் குற்றும் பெண்களின்அசதியைப் போக்கக் கிராமிய பாடல்கள் அரும் உதவி புரிகின்றன. மீன்பிடிக்குந் தொழிலில் ஈடுபடுபவர்களின் மீனவப் பாடல்கள் புத்துணர்ச்சி ஊட்ட உதவுகின்றன.

எமது கலை வடிவங்கள் அனைத்தும் எமது அன்றாட செயற்பாடுகளுடன் பின்னிப்பிணைந்தவையாகவும் உடலுக்கும் உணர்வுக்கும் சுகம் தருபவையாகவும் புத்துணர்வை ஊட்டக் கூடியவையாகவும் புதிய நேர்வழி சிந்தனைகளை தூண்டக் கூடியவையாகவும் அமைந்திருக்கின்றன.

எனவே இவ்வாறான கலை வடிவங்களையும் இவற்றுடன் இணைந்த கலைஞர்களையும் அடையாளப்படுத்தலும் உலகுக்கு அறிமுகஞ்செய்தலும் எமது கட்டாயப் பணியாகும்.முதலமைச்சரின் விருது வழங்கும் வைபவம் அதனால்த்தான் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விருது என்பது அந்தப் பதவியை வகிக்கும் ஒருவரின் விருது அல்ல. ஆகமொத்தம் வடமாகாண மக்களின் ஏகோபித்த விருதாகவே அதைக் கணிக்க வேண்டும். முதலமைச்சர் என்ற பதவி சகல வடமாகாண மக்களையும் உள்ளடக்கிய ஒரு பதவி. ஆகவே முதலமைச்சர் விருது எமது மக்களின் ஏகோபித்த கருத்தை வெளியிடும் விருதாகவே கருதப்பட வேண்டும். விருதுகளை நாம் வழங்கும் போது தில்லுமுல்லுகள் நடைபெறக்கூடாது. பக்கச்சார்புகள் இருக்கக்கூடாது.

அவ்வாறு எமது அலுவலர்கள் செய்ய நினைத்தால் அல்லது முனைந்தால் அது எமது மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை எமது அலுவலர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

அந்த வகையில் இன்றைய கௌரவத்தை பெற்றுள்ள அனைத்து துறைசார் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களையும் வாழ்த்தி கௌரவிப்பதுடன் இவர்களின் கலை முயற்சிகள் இன்னும் விரிவடைந்து எமது தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்திலும் எமது பாரம்பரிய கலை வடிவங்கள் நிலைத்து நிற்க நாம் யாவரும் பாடுபட வேண்டும் என வாழ்த்துகின்றேன்.என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
Attachments area
சுதந்திரமாகவும் சகோதரத்துவத்துடனும் இந்த மண்ணில் சகல இனங்களும் வாழ்வதற்கான ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி முறையை தோற்றுவிக்கப்பட வேண்டும்-மன்னாரில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். Reviewed by NEWMANNAR on September 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.