கேதீச்சர மண்ணை சூழந்த இடர்வினை கெடுமா? தீபச்செல்வன்
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்
எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின்
மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே!
- திருஞான சம்பந்தர்இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பக்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பந்த நாயனார் ஈழத்தின் மன்னாரில் மாதோட்டத்தில் பாலாவி ஆற்றங்கரையில் உள்ள திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடிய பதிகமாகும். ஈழத்தில் தமிழ் மக்களின் மிக முக்கியமான தொல்லியல் ஆதாரங்களாக, தொன்மைகளாக உள்ளவை கிழக்கில் திருக்கோணேஸ்வரர் ஆலயமும் வடக்கில் திருக்கேதீஸ்வரர் ஆலயமுமாகும். அத்தகைய ஆலயத்தை கொண்டமைந்த மன்னாரில் நடைபெறும் நில அபகரிப்புக்கள் இப்போது அந்த மாவட்டத்தையே உலுப்புகின்றது.

தொன்மையான மாதோட்டம்
இம்மாவட்டத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டமும், வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டமும் கிழக்கே வவுனியா மாவட்டமும், தென்கிழக்கே அனுராதபுர மாவட்டமும், தெற்கே புத்தளம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் தலை நகரமாக தலைமன்னார் காணப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள மாதோட்டை துறைமுகம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலய வரலாற்றுடன் வங்காலை நகரமும் தொடர்புபடுகிறது. விஜயன் உள்ளிட்ட சிங்களக் குடியேற்ற மூலவர்கள் மன்னாரில் வந்திறங்கியதாகவும் அப்போதே திருக்கேதீஸ்வரத்தில் விஜயன் வழிபட்டான் என்றும் சிங்கள வலாற்று நூலாக கருதப்படும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
பத்துப் பதினோரம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியின்போது, இந்த ஆலயம், இராசராசேஸ்வர மகாதேவன் ஆலயம் என்று அழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆலயத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்கள் காணப்பட்டுள்ளதாகவும் இந்த இடத்தில் பெருநகரம் ஒன்று அமைந்திருந்ததாகவும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக அது விளங்கியது என்றும் இங்கு பல சிற்ப, கலை, தொழிநுட்ப வல்லுனர்கள் வாழ்ந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் பலரும் தமது ஆய்வுகளில் எழுதியுள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாண அரசுகளின் காலத்திலும், வன்னி அரசுகளின் காலத்திலும் இந்த ஆலயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிவாலயமாக இருந்துள்ளமையும் புலப்படுகிறது.

இராணுவ நில அபகரிப்புக்கள்
மன்னார் முசலிப் பிரதேசத்தின் முள்ளிக்குளத்தின் முசலிப் பிரதேசத்தில் மக்களின் காணிகள் பலவற்றை சிங்களப் படைகள் அபகரித்துள்ளனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஓலைத்தொடுவாய் தொடக்கம், தலைமன்னார்வரை (தென்கடல் பிரதேசமாக, 500ஏக்கர் நிலப் பகுதி கற்றாலை மின் உற்பத்திக்கு என்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஓலைத்தொடுவாய், நடுக்குடா, வாயடிப்பண்ணை, கட்டுக்காரன்குடியிருப்பு, கீளியன்குடியிருப்பு ஆகிய இதன் அடங்கலான 300 ஏக்கருக்குமேல் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர மன்னாரில் மக்களுக்குச் சொந்தமான பல காணிகளில் படையினர் முகாம் அமைத்து தங்கியுள்ளனர். இதில் பல வீடுகளையும் அபகரித்துள்ளனர்.
மன்னார் முசலிப் பகுதியில் இராணுவம் ஆராயிரம் ஏக்கர் நிலத்தில் மரமுந்திரிகைத் தோட்டம் செய்து வருகின்றனர். அங்கு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர், மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியிலும் இராணுவத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்த காணிகளை விட்டு இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் மக்களின் காணிகளின் முந்திரிதோட்ட வர்த்தகத்தில் இராணுவம் ஈடுபடுவதை ஏற்க முடியாது என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிலாவத்துரையில் 25 ஏக்கரை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அரிப்பு பகுதியில் கடற்படையினர் 4 ஏக்கரையும் பொலிஸ்படையினர் 10 ஏக்கரையும் ஆக்கிரமித்துள்ளனர். முள்ளிக் குளத்தில் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணி 56 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்குச் சொந்தமான 30 ஏக்கர் மேட்டு நிலத்தையும் 25 ஏக்கர் வயல்நிலத்தையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். முசலியில் 50 ஏக்கரில் கடற்படையினர் விவாயம் செய்வதுடன் அப் பகுதியில் கடற்கடையினர் குடியிருப்பு அமைக்கப்பட்டு, சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அப் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். குறித்த பகுதியிலேயே கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 25 வீட்டுத்திட்டத்தில் உள்ள ஆயர் காணிகளில் இராணுவமுகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
சன்னார் பகுதியில் வளம் மிக்க காணிகளை மக்களுக்கு மறுத்துள்ள நிலையில் 3,500 ஏக்கர் காணிகளை இலங்கை இராணுவத்தின் இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு அபகரிக்கப்பட்டுள்ளது. இதைப்போல நாகதாழ்வு தொடக்கம், வங்காலை வரையிலும், மன்னார் நுழைவாயில் வரையில் காணிகள் அபகரிக்கும் நோக்கில் எல்லையிடப்பட்டுள்ளன. நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவின், முருங்கன் நகரத்திலும் முருங்கன்பிட்டியிலும் மக்களின் காணிகளில் படைமுகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வங்காலையில் தனியார் காணியிலும் மக்களுக்குச் சொந்தமான காணிகளிலுமே கடற்படைமுகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நரிக்காடு கிராமத்தின் காணிகளில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வாழ்வாதாரத் தொழில் பாதிப்பு
மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத் தொழில்களுக்கு இராணுவத்தால் பெரும் இடைஞ்சல் காணப்படுகின்றன. விவசாயக் காணிகளில் படையினர் நிலை கொண்டுள்ளதால் விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளாங்குளம், விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை, அடம்பன் முதலிய பல இடங்களில் மக்களின் விவசாய நிலங்களில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். இதேவேளை, மாவட்டத்தின் கடற்தொழில் புரியும் கரையோர பகுதிகளில் பல இடங்களை கடற்படையினர் அபகரித்துள்ளனர். இதனால் இந்த மக்களின் மற்றொரு பிரதான தொழிலான கடற்தொழிலை முன்னெடுப்பதிலும் பெரும் இடர்பாடுகள் காணப்படுகின்றன.

மக்கள் தொழிலை மேற்கொள்ளும் இறங்குதுறைகள் கடற்படையின் முகாம்களாக உள்ளன. இவற்றை நிரந்தரமாக கடற்படை முகாங்களுக்காக அபகரிக்கும் நோக்கில் படையினர் விண்ணப்பித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கடற்தொழிலாளர்கள் கூறுகிறார்கள். தலைமன்னார், பேசாலை, செல்வபுரம், சனிவிலேச், சிலாவத்துறை, அரிப்பு, கொக்குப்புடையான், நறுவிலிக்குளம், ஜீவநகர், பண்டாரவெளி, உயிலங்குளம், பரப்புக்கடந்தான், கள்ளியடி, நாயாற்றுவெளி, கூராய், இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம், பாலம்பிட்டி, இரணை இலுப்பைக்குளம், செங்கல்பட்டு, மண்கிண்டி போன்ற இடங்களில் பல நூற்றுக் கணக்கான காணிகள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலும் ஆதிக்கத்திலும் உள்ளன. மன்னார் மாவட்டத்தில் 20 வீதமான வளமான பகுதிகளை இலங்கை இராணுவப்படைகள் அபகரித்துள்ளதாக தமிழரசுக் கட்சியை சேர்ந்த எஸ். சிவகரன் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத நிலச் சூறையாடல்
மன்னாரில் மக்களின் காணிகளை வர்த்தக முதலாளிகள் தமது வர்த்தக நோக்கங்களுக்காக முறையற்ற விதத்தில் சூறையாடும் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. அரசியல் செல்வாக்கு, இராணுவ ஒத்துழைப்பு ஊடாக இவ்வாறு காணிகளை அபகரிக்கின்றனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம் கிராமத்தின் மருதோடை பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக மக்கள் முறையிட்டுள்ளனர். பிரிட்டிஷ் காலத்திலிருந்து முக்கியத்துவம் பெற்று வரும் மருதோடை வாய்க்கால் பகுதி பொதுமக்களுக்குரிய பகுதி என்றும் இதனை தனிநபர்கள் சூறையாட இடமளிக்க முடியாது என்றும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இப் பகுதியை தனிநபர்கள் அபகரித்து எல்லையிட்டு வீடு அமைப்பதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
இவ்வாறே, மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தில் 510 ஏக்கர் காணிகளை மகிந்த ராஜபக்சவின் அரசியல் செல்வாக்குடன் ஒருவர் அபகரிக்க முயன்றுள்ளார். உவரி, தாழங்காடு, கருப்பன் குடியிருப்பு முதலிய பகுதிகளை சேர்ந்த 510 ஏக்கர் காணிகளை முதலாளி ஒருவர் போலி ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயன்றுள்ளார். அவை சுமார் முப்பது குடும்பங்களுக்கு சொந்தமான காணி என்று மன்னார் பிரதேச சபையிடம் முறையிடப்பட்டது.
இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் மன்னாரில் காணி அபகரிப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. மன்னார் தல்லாடி பகுதி போர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இங்கு ஏற்கனவே இராணுவமுகாங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் மேலும் 50 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் இராணுவத்திற்குச் சொந்தமான காணி என்ற பெயர் பலகையை வைத்துள்ளனர். அத்துடன் தள்ளாடி கோவிலடியில் தனியார் காணி 15 ஏக்கருக்கு மேல் அபகரிக்கப்பட்டுள்ளன. இவைகளை சிங்களக் குடியேற்றத்திற்காகவே இராணுவத்தினர் அபகரிக்க முற்படுகின்றனர் என்று தல்லாடிப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தார்கள்.
நல்லாட்சியில் 4000 ஏக்கர் அபகரிப்பு முயற்சி
இதேவேளை ஆட்சி மாற்றத்தின் பின்னர் மன்னாரின் சன்னார் பகுதிகளில் சுமார் நாலாயிரம் ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்க முயன்றுள்ளனர். மக்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் காணிகளே இவ்வாறு அபகரிக்க துணியப்பட்டுள்ளது. கோயில்குளம், சாவேரியர் புரம் குளம் முதலிய மக்கள் புழங்கும் காணிகளும் உள்ளடங்குகின்றன. இக் காணிகளை சட்ட ரீதியாக பெற்றுக் கொள்ளும் வகையில் அரசும் இராணுவமும் செயற்படுவதாக மன்னார் மாவட்ட பொதுமக்கள் குற்றம் சுமத்தின. வடக்கில் பல்லாயிரம் ஏக்கர் காணிகளை அபகரித்துள்ள நிலையில் மன்னாரில் பல ஆயிரம் ஏக்கரை சுவீகரித்துள்ள நிலையில் மீண்டும் நாலாயிரம் ஏக்கர் காணி சுவீகரிப்பா என்றும் மன்னார் மாவட்ட மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
மன்னாரின் தலை நகரமான தலை மன்னார் பகுதியில் உள்ள சிறுதோப்பு பகுதியில் ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் கடற்படையினர் பதின்மூன்று வருடங்களாக முகாமிட்டுள்ளனர். தென்னைமரங்களும், பனைமரங்களும் நிறைந்த குறித்த ஆலயக் காணியில் போரால் பாதிக்கப்பட்டவர்கள், விதவைகள் பராமரிப்புத் தொழிலில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து வந்த நிலையில் குறித்த காணிகளை தற்போது படையினர் அபகரித்துள்ளனர். இதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் இலங்கை கஜபா கடற்படை அணிக்கு இக் காணிகளை சுவீகரிக்கும் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு அவை மக்களை பெரும் அதிரச்சிக்கு உள்ளாக்கின.
மன்னாரில் தொடர்ந்தும் காணி அபகரிப்புக்களும் பிரச்சினைகளும் தொடர்கின்றன. மன்னாா் பள்ளிமுனைக் கிராமத்தில் ஆலயசுருபம் அமைந்துள்ள காணியை பிரதேசத்தை சேராத தனி ஒருவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்து கடந்த மாதம் பள்ளிமுனை மக்கள் கண்டன ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள்.
ஊ ரெங்கும் இராணுவ முகாங்கள்
மன்னார் பிரதேசசெயலளார் பிரிவு பகுதியில் கோந்தைப் பிட்டி துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான 09 ஏக்கருக்கு மேலான காணி இராணுவமும் காவல்துறையும் அபகரிக்க தலை மன்னார் வீதி-தொழிநுட்பக் கல்லூரி காணிகளில் ஐந்து ஏக்கரை விசேட அதிரடிப் படையும் சௌத்பார் தனியார் காணியில் 5 ஏக்கரில் இராணுவமுகாமும் பள்ளி முனை 25 வீட்டுத் திட்டத்தில் 06 வீடுகள் இராணுவமுகாமாக உள்ளன. அத்துடன் மன்னார் நுளை வாயிலும், கூட்டுறவு சங்க சமாச கட்டட வளாகத்தில் 20 வருடங்களுக்கு மேல் இராணு வமுகாம் காணப்படுகின்றது.
மன்னார் பிரதேசத்திற்கு உட்பட்டபகுதியில் தலை மன்னார் கிராமத்தில் கடற் படையினர் 5 ஏக்கரையும் குருசுப்பாடு பகுதியில் கடற்படையினர் 5 ஏக்கரையும் கட்டுக்காரன் குடியிருப்பில் இராணுவம் 2 ஏக்கரையும் செல்வபுரம் பகுதியில் இராணுவம் 12 ஏக்கரையும் நடுக்குடாவில் கடற் படையினர் 10 ஏக்கரையும் பேசாலையில் இராணுவம் 20 ஏக்கரையும் பேசாலை வெற்றி மக்கள் குடியிருப்பபில் கடற்படை யினர் 10 ஏக்கரையும் பேசாலை 4ம் வட்டாரத்தில் கடற் படையினர் 5 ஏக்கரையும் பேசாலை பிரதான வீதி பொலிஸார் 2 ஏக்கரையும் கீரிசனிவிலேச்சில் கடற்படையினர் 8 ஏக்கரையும் அபகரித்துள்ளனர்.
இதேவேளை மாந்தைமேற்கில் பரப்புக்கடந்தானில் இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ள 3 ஏக்கர் நிலப்பகுதியையும் ஆண்டாங் குளத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கத்தின் காணி 01 ஏக்கரையும் சாளம்பன் சந்தியில் இராணுவமுகாம் அமைந்துள்ள அரை ஏக்கர் காணியையும் கள்ளியடியில் 25 ஏக்கரையும் 542 படைத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ள மூன்று ஏக்கரையும் கூராய் நீர்ப்பாசனத் திணைக்களக் காணியில் 05 ஏக்கரையும் படகுதுறையில் கடற்படை 3 ஏக்கரையும் நாயாற்றுவெளியில் 2 ஏக்கரையும் மூன்றாம்பிட்டியில் இராணுவம் - 3 ஏக்கரையும் அபகரித்துள்ளது.
இதேவேளை நானாட்டானுக்கு உட்பட்ட பகுதியில் பரிகாரிகண்டல் பகுதியில் 5 ஏக்கரையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். அத்துடன் அருவியாறு, அச்சங்குளத்தில் 2 ஏக்கரையும் செ. ம. க. அடம்பனில் 1 ஏக்கரையும் முருங்கனில் 4 ஏக்கரையும் பெரிச்சார்கட்டில் 4 ஏக்கரையும் மடுக்கரையில் 4 ஏக்கரையும் நறுவிலிக்குளத்தில் 4 ஏக்கரையும் அபகரிக்க கோரியிருந்தனர். அத்துடன் அச்சங்குளத்தில் 1 ஏக்கரையும் கடற்படைமுகாமுக்காய் பஸ்ரிபுரியில் 10 ஏக்கரையும் நறுவிலிக்குளத்தில் 2 ஏக்கரையும் அச்சங்குளத்தில் 1 ஏக்கரையும் எருவிட்டானில் ½ஏக்கரையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதேவேளை மன்னாரில் தனியாருக்குச் சொந்தமான பல காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன. K.S மொறாய்ஸின் ¾ஏக்கரும், பொலிஸ் தேவைக்காக வங்காலையில் ஸ்ரனிஸ்லஸ் டலிமாவின் 20 பேர்ஜ்சும் ஏக்கரும், யூஜின் டலிமாவின் 20P, தாசன் லெம்பேட்டின் 20P, றோபட் லெம்பேட் 20P, டேவிற் பீரிஸ் 20P, முருங்கன்- தபுலிங்கம் ¼ ஏக்கரும் இரட்டைக் குளத்தில் பெணாண்டோவின் முக்கால் ஏக்கர் காணியும் அபகரிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மடுபிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினர் பாலம்பிட்டியில் 14 ஏக்கரையும் குஞ்சுக்குளத்தில் 600 ஏக்கரையும் இரணை இலுப்பைக்குளத்தில் சுமார் 10 ஏக்கரையும் மண்கிண்டியலில் சுமார் 4 ஏக்கரையும் ஆக்கிரமித்துள்ளனர்.
மன்னாரில் ஈச்சவலக்கைக்கு பொதுமக்களின் பிரச்சினைகளை ஆராயும் பயணம் ஒன்றை மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் மக்களுக்கு சொந்தமானவை என்று தெரிவித்தார். ஈச்சவலக்கையில் இராணுவத்தினர் குளத்தை கைப்பற்றியுள்ளமையால் அங்கு விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளதாகவும் கூறினார். அத்துடன் 2000 ஏக்கர் காணிகளை கைப்பற்றியுள்ள இராணுவமுகாம் ஒன்று தேவைதானா என்றும் விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பினார். இராணுவத்தை வடக்கு மாகாணத்தில் நிலைநிறுத்தி அரசு எங்கோ ஒரு மாகாணத்தில் வாக்குபெற முயற்சிக்கிறது என்றும் மன்னாரில் அரசு காணிப் படிவங்களை வழங்கும் நடவடிக்கையில் சிலர் அரசியலை பயன்படுத்தி காணி பெறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
திருக்கேதீச்சரம்மீதான அபகரிப்பு
அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வங்கம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில்
பங்கஞ்செய்த மடவாளடு பாலாவியின் கரைமேல்
தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே"
மன்னார் மண்ணுக்கு மாத்திரமின்றி, வடக்கு மண்ணுக்கு மாத்திமின்றி, வடகிழக்கு மண்ணுக்கும் இலங்கைத் தீவுக்கும் மிக மிக முக்கியமான தமிழர் தொன்மச் சின்னமாக விளங்கும் மன்னார் பலாவி, மாதோட்ட திருக்கேதீஸ்வரம் முன்பாகவும் புத்தர் சிலையை நிறுவிட வேண்டும் என்பது எத்தகைய மனநிலையின் வெளிப்பாடு? அதுவும் ஆட்சி மாற்றத்தின் பின்னர், மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் இலங்கை இராணுவத்தால் புத்தர் குடியேற்றப்பட்டுள்ளார். ஈழத்தின், தமிழின், சைவத்தின் தொன்மையை சிதைக்கும் இந்தச் செயலை யார் தடுப்பது?
திருக்கேதீஸ்வரம் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் காணியை அபகரித்து, அங்கு இராணுவமுகாமை அமைத்து, சட்விரோதமாக விகாரை அமைத்து, அதனை ஒரு புரதான பௌத்த இடம்போல தோற்றம் காட்டும் வகையில் பெயர் பலகைகளையும் கற்களையும் கொடிகளையும் வைத்துள்ளனர. பொதுமக்களு்ககுரிய இந்தக் காணிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் இராணுவத்தினர் சுவீகரித்துள்ளனர் என்பதுதான் இன்னும் அதிர்ச்சிகரமான செய்தி. மனித புதை குழி காணப்பட்டதால் மக்கள் நடமாட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட அப் பகுதியில் இராணுவத்தினர் சுதந்திரமாக நடமாடி மக்களின்காணிகளில் புத்தர் சிலை வைத்துள்ளனர்.
குறித்த காணிகளில் வசித்தபடி, திருக்கேதீஸ்வரத்திற்கு தொண்டுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் மக்கள் தாம் காலம் காலமாக வசித்த காணி என்பதற்கு அடையாளமாக அங்கு ஆலயக் கல் மற்றும் மணி காணப்படுதாகவும் குறிப்பிடுகின்றனர். இதேவேளை பௌத்த பிக்கு ஒருவர் வந்து குடியேறி, பௌத்த புத்தர் சிலையை நிறுவி ஆலய வரலாற்றை சீர்ககுலைக்க, கிறீஸ்தவரை்களும் அங்கு தமது மத சொருபம் ஒன்றை அமைக்க முற்பட்டுள்ளனர். இதனையடுத்து அப் பகுதி இந்துக்களை இதனை எதிர்தது அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். புத்தர்சிலையால் இவ்வாறு மத அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து புத்தர் சிலையை அகற்ற வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
இதனால் தமது தலம் அவமதிக்கப்படுவதாகவும் அப் பகுதி இந்துக்களும் திருக்கேதீச்சரப் பக்கதர்களும் கூறுகின்றனர். அண்மையில் அபக் பகுதிக்குச் சென்றபோது புரதானப் பலாவித் தீர்த்தத்தில் பிக்கு ஒருவர் அமர்ந்து மொட்டை வழிந்துகொண்டிருந்தார். இந்து ஆலயத்தையும் அதன் தீர்தத்க் கடலையும் இந்து மக்களையும் மிக மிக இழிவுபடுத்தும் இச்செயல்கள் எதிர்காலத்தில் மத முரண்பாடுகளுக்கு வழிகோலுகின்றன. எனவே திருக்கேதீச்சரம் மீதான மத ஆக்கிரமிப்பு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
றிசாட் பதியூதீனின் நில ஆக்கிரமிப்பு அரசியல்கள்
மன்னாரிலிருந்து வில்பத்து வரையான பகுதிகளில் அமைச்சர் றிசாட் பதியுதீன் காடுகளை அழித்தும் காணிகளை அபகரிப்பதாக பலராலும் குற்றம் சுமத்தப்பட்டது. ராஜபக்சவை விட்டு றிசாட்பதியுதீன் விலகியபோது அவர் நூற்றுக் கணக்கான தமிழர் காணிகளை கோரியதாக ராஜபக்ச குற்றம் சுமத்தினார். மன்னாரில் மாத்திரமின்றி முல்லைத்தீவிலும் அமைச்சர் றிசாட்பதியுதீன் காணிகளை அபகரித்து திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றங்களை உருவாக்குகிறார் என்றும் சொல்லப்பட்டது. இதனையடுத்தே முள்ளிக்குளம் மற்றும் மறிச்சுக்கட்டிப் பிரதேசங்களில் தமிழ் மக்களின் காணிகள் 700 ஏக்கரை கடற்படையினர் அபகரித்துள்ளனர் என்று றிசாட்பதியுதீன் கூறினார். மாந்தை மேற்கில், கன்னாட்டி, சாலம்பன் கிராமத்திலும் இவர் குடியேற்றங்களை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மன்னாரில் சிங்களவர்களும் இராணுவத்தினரும் காணிகளை ஒரு புறத்தில் அபகரிக்க மறுபுறத்தில், முஸ்லீம் மக்களும், முஸ்லீம் மக்களின் பெயரில் சில அரசியல்வாதிகளும் தமிழர் நிலத்தை துண்டாடுகின்றனர். முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் சட்டவிரோதமான முறையில் சுமார் 18000 ஏக்கர் காணிகளை அமைச்சர் ரிசாட்பதியுதீன் முஸ்லீம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக சுற்றாடல் நீதிக்கான மையம்- சுற்றாடல் பாதுகாப்பு அறக்கட்டளை நிலையம்- இயற்கை வளங்களுக்கான பௌத்த பேரவை- இலங்கை சுற்றாடல் காங்கிரஸ் ஆகிய அமைப்புக்கள் குற்றம் சுமத்தின.
மக்களை மீள்குடியேற்றுவது என்ற போர்வையில் சட்டவிரோதமாக குடியேற்றம் மற்றும் காடழிப்பில் அவர் ஈடுபடுவதாகவும் இவ் அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன. மன்னாரின் மடுவிலும் இவர் காணிகளை அபகரிக்க முயல்வதாக குற்றம் சுமத்தப்பட்டார். அத்துடன் மன்னாரின் கிறீஸ்வத அமைப்புக்கள் மற்றும் மத தலைவர்களாலும் இவர் காணி அபகரிப்பில் ஈடுபடுகிறார் என குற்றம் சுமத்தப்பட்டதையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு மன்னாரில் 3000ஏக்கர் காணிகள் இருப்பதாகவும், அவை அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்களின் பெயரில் இருப்பதாக ரிசாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த சட்டத்தரணி குவாதிர் கான் தெரிவித்தார்.
இதேவேளை முள்ளிக்குளம் பகுதியில் தாம் அபகரித்துள்ள காணிகளில் 500 ஏக்கரை விடுவிக்க கடற்படையினர் இணங்கியுள்ளனர். ஆனாலும் முள்ளிக்குளத்தில் தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் இராணுவம் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு என்றும் இராணுவம் முழுமையாக வெளியேறும் பட்சத்திலேயே முழு மீள்குடியேற்றம் சாத்தியம் என்றும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இதேவேளை மக்கள் குடியிருக்க முடியாத, காடு மற்றும் குளங்கள் காணப்பட்ட பகுதியையே கடற்படை விடுவிக்க இணங்கியுள்ளதாகவும் இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் சர்வதேச ஊடக செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
வளம்பொருந்திய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் மாவட்டம் அதன் தொல்லியல் முக்கியத்துவம் கருதி, அதன் தொன்மை கருதி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. இன்று அதை அழிக்கும் நோக்கில், அதை சிதைக்கும் நோக்கில் மன்னார் மாவட்டம் பல விதமான நில அபகரிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெருமளவான காணிகள் இராணுவத்தின் கீழ் உள்ளது. அத்துடன் 2009இற்குப் பின்னரான காலத்தில் பல காணிகள் அபகரிக்கப்பட்டு, காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கில் வரலாற்றுப் பிரசித்தம் கொண்ட மன்னார் மண் எதிர்கொண்டுள்ள நில ஆபத்துக்களை நீக்கி, இம் மண்ணின் தொன்மையை, இயல்பை, பாதுகாப்பது உடனடி அவசியமானது.
வீணையை மீட்டிக்கொண்டு பாடுபவர். பற்பலவான புராண வரலாறுகளைக் கொண்டவர். எருது உதைத்து அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர். அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர். அவருக்குரிய இடம், கரிய கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும் கேடில்லாத கேதீச்சரம் ஆகும். அதனைத் தொழ இடர்வினை கெடும் என்று சம்பந்தர் பாடினார். இன்று திருக்கேதீஸ்வரத்தை சூழ்ந்துள்ள வினைகள் கெடுமா?
நன்றி குளோபல் தமிழ்
கேதீச்சர மண்ணை சூழந்த இடர்வினை கெடுமா? தீபச்செல்வன்
Reviewed by NEWMANNAR
on
September 22, 2016
Rating:

No comments:
Post a Comment