பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள் - டக்ளஸின் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது சுரேஷ்
வடக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழ்வாதார உதவிகள் மற்றும் நிவாரண உதவிகளை கோரும் போது அரிதிகாரிகளால் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று(29) இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சு மீதான குழு விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றுகையில்,
மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இதன் காரணமாக எமது சமூகமானது பாரிய பாதிப்பினை எதிர்கொள்கின்றது.
இவ்வாறான குற்றத்தில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் தப்பி விடுவதும், இவர்களுக்கு உரிய முறையில் தண்டனை வழங்கப்படாததுமே காரணம்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் அன்றாட வாழ்க்கைக்கு போராடும் பெண்கள் வாழ்வாதார திட்டங்கள் மற்றும் நிவாரண உதவிகளை பெற செல்லும் வேளையில் சில அதிகாரிகளால் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான குற்ற செயற்பாடுகள் இடம்பெறாமல் இருக்க தனியான விசாரணை பொறிமுறை ஒன்று அவசியம். அதேபோல சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்களை விசாரணை செய்ய தனி நீதிமன்றமும் அவசியம்.
மேலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் போராளிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், வாழ்வாதார செயற்பாடுகளுக்குரிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களுக்கு நீதியை கோரும் டக்ளஸின் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் அந்த நேரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருந்துவிட்டு, ஊடகவியலாளர்களுக்கு நீதியை கோருவது வேடிக்கையான விடயமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வடக்கு கிழக்கில் பல ஊடகவியலாளர்கள் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்திலேயே படுகொலை செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அந்த படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் இன்றும் சுதந்திரமாக நடமாடுவதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க அந்த சந்தர்ப்பத்தில் டக்ளஸ் தேவானந்தா தவறியிருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் அடுத்து வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தின், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட ஆகியோர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளைப் போல் ஏனைய படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள் - டக்ளஸின் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது சுரேஷ்
Reviewed by NEWMANNAR
on
November 30, 2016
Rating:

No comments:
Post a Comment