அண்மைய செய்திகள்

recent
-

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார் : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா (68) மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அப்பல்லோ மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 5ம் தேதி அதாவது திங்கட்கிழமையான நேற்று இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவிற்கு இதய நோய் மருத்துவர்கள், சுவாசயியல் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் மருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணியளவில் பிரிந்தது.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதா நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் வெறும் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணி போல் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடுவார் என்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்பல்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது.


பின் நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம் என ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சனை மற்றும் சிகிச்சையை பற்றிய அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. மருத்துவர் சிவக்குமார் தலைமையில், கார்டியாலஜி, நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். மேலும் அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பியால் சென்னைக்கு வந்து சிறப்பு சிகிச்சை அளித்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர் என பல்வேறு அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. இதில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் சென்னை வந்து சிகிச்சை அளித்தது, நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம், எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது ஆகியவை மிக முக்கியமானது. பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லண்டன் மருத்துவர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் திரும்பிச் சென்றனர். அதன் பின்னர், சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவ நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோர் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அதிர்ச்சி அளித்த அப்பல்லோவின் 12-வது அறிக்கை:

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து நீண்ட நாட்களாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை எதனையும் வெளியிடாமல் இருந்த நிலையில், 11-வது அறிக்கையை கடந்த நவம்பர் 21-ம் தேதி வெளியிட்டது. இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் மருத்துவர்களுடன் பேசி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அ.தி.மு.க-வினரிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில் ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் கடந்த சனியன்று மீண்டும் சென்னை வந்தனர். அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவர் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் அப்பல்லோ டாக்டர்கள் குழுவினருடன் கலந்து ஆலோசித்தனர். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12-வது அறிக்கையை அன்று இரவு வெளியிட்டது. இந்த அறிக்கையால் தமிழகத்தில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

முன்னதாக திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதயநாளத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய் இந்த ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சை இன்றி சரி செய்யக் கூடிய மருத்துவ முறை ஆஞ்ஜியோ சிகிச்சை ஆகும். ஆஞ்ஜியோ சிகிச்சை முடிந்த நிலையில் 24 மணி நேம் தீவிர கண்காணிப்பில் வைத்த பிறகே எதுவும் கூற முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியாக அனைத்து நவீன சிகிச்சைகளும் பலனளி பலனின்றி தற்போது முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

விரைவில் குணமாகி அரசு பணிகளை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திங்கள் கிழமை மாலை 5.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக செய்திகள் காட்டுத் தீ போல பரவியது. இதனால் தமிழகத்தில் உச்சக்கட்ட பதற்றமான சூழல் நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் பேருந்துகள் கல் வீசி தாக்கப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். ஆனால் ஜெயலலிதா காலமானதாக வெளியான தகவல் தவறு என அப்போலோ மருத்துவமனை மாலை 5.49 மணிக்கே அறிவித்தது. முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது. உயிர் காக்கும் கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை என அப்போலோ அறிக்கை வெளியிட்டது. எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று மதியம் முதல் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் திங்கட் கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர். மேலும் அவர் உயிரிழந்ததாக அறிவிப்பதற்கு முன்னதாக ஜெயலலிதாவின் இல்லத்தை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனை அமைந்துள்ள கிரீம்ஸ் சாலை மற்றும் கதீட்ரல் சாலையில் 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் வரை போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:

* ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ம் தேதி பிறந்தார்.

* ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.

* 10ம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.

* தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.

* தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாக பேசுவார்.

* 1972ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது

* தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறு முறை பதவி வகித்துள்ளார்.

* 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சர் ஆனார்.

* 2001ம் ஆண்டு 2வது முறையாக முதலமைச்சர் ஆனார்.

* 2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று முதல்வரானார்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார் : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Reviewed by NEWMANNAR on December 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.