அண்மைய செய்திகள்

recent
-

திருக்கார்த்திகை தீபம் - விளக்கீடு - 13.12.2016

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும்இ கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள் மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள் மீன்களில் ஒரு நாள் மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.


கார்த்திகை மாதத்தின் பண்டிகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். அதாவது தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும். அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களே பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார்.

 பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.


இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப் படுகிறது. கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.



இத்தீபத்திருநாள் திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில்இ தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

இத்திருநாள் முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து மாலை பூஜை முடிந்தபின்னர் அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். சிவன் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் ஆறு பொறிகளை தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்தைகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும்இ வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பானை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்க வைத்து வழிபடுவர்.

இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.



சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமான ஒன்று அர்த்தநாரீஸ்வர வடிவமும் ஒன்றாகும். சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்தி பிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார். உடலில் சக்தி இல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்ட சிவபெருமான் சிவனும் – சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள் மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியை விட்டு பிரிந்தார் ஈசன். சிவபக்தரை சோதித்துவிட்டோமே என வருந்திய சக்திதேவி தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாக இருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம் செய்தார்.

 தவத்தை ஏற்ற சிவபெருமான் சக்திதேவிக்கு காட்சி தந்து தனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். ஆகவே கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில் அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம் கிட்டும். திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.


கார்த்திகை தீபதன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள். இதனை ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சிவபெருமானே அனைத்து வடிவங்களிலும் இருக்கிறார் என்பதை இது தெரியப்படுத்துகிறது. மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில்விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஜோதி வடிவமாக காட்சி கொடுத்தது போல் நமக்கும் ஈசன் ஜோதிவடிவமாக காட்சி தருகிறார்.

 மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை. நம் இல்லத்தில் கார்த்திகை தீபதன்று அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன் படத்தை வைத்து கார்த்திகை தினத்தில் தோன்றிய முருகப்பெருமானையும் கார்த்திகை பெண்களையும் மனதால் நினைத்து ஆறு தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டும் . இந்த ஆறு தீபங்களை ஏற்றுவதற்கு முன்னதாக மஞ்சளில் விநாயகரை பிடித்து பூஜிக்க வேண்டும். பிறகு மாவிளக்கு தீபம் ஏற்றிய பிறகு வீட்டின் வெளிபுறத்திலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு அரிசிபொரியை வைத்து அர்த்தநாரீஸ்வரரை மனதால் நினைத்து வணங்க வேண்டும். இதனால் சிவ-சக்தியின் அருளாசி நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்து சகல நலங்களோடு சுபிச்சமான வாழ்க்கை அமையும்.


கார்திகை மாதம் முழுவதும் தீபம் வீடுகளில் தீபம் ஏற்றுவது. சிறப்பாகும். முடியாத பட்சத்தில் பரணி, கார்த்திகை, ரோகிணி மூன்று நாட்கள் மட்டுமாவது தீபமேற்றுவது சிறப்பாகும். அதாவது கார்த்திகை தீப நாளிற்கு முதல்நாள், கார்த்திகை தீபத்தன்று, கார்த்திகை தீபத்திற்கு அடுத்தநாள். வீட்டின் தலை வாசலில், கொல்லைபுற வாசலில், பூசை அறை வாசலில் என குறைந்த பட்சம் மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும். மற்றப்படி வீட்டில் உள்ள அறைகளின் வாசல்கள் மற்ற இடங்கள் எல்லாம் வீடு தீப ஒளியில் பிரகாசமாக இருக்கும் அளவிற்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.


முறைப்படி விரதமிருந்து தீபமேற்றி வழிபடும் அனைவரின வாழ்விலும் ஒளி பிறக்கும். பரிபூரண நம்பிக்கையுடன் கடைப்பிடியுங்கள் ஒளிமயமான எதிரகாலம் நிட்சயம்



திருக்கார்த்திகை தீபம் - விளக்கீடு - 13.12.2016 Reviewed by NEWMANNAR on December 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.