உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய அறிஞர்கள்-யாழ் இலக்கியவாதிகள் சந்திப்பு
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாட்டு அறிஞர்களுடனான இலக்கிய சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் யாழ் கம்பன் கோட்டத்தில் நடைபெற்றது.
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு டிசம்பர் மாதம் 11ம் 12ம் 13ம் திகதிகளில் கொழும்பில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட அறிஞர்கள் யாழ் வருகை தந்து யாழ்ப்பாண கலைஞர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை உப அதிபர் லலீசன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் கொழும்பு தமிழ்ச் சங்க தலைவர் பாஸ்கரா, பேராசிரியர் சிவலிங்கராஜா,யாழ்ப்பாண தமிழ்ச் சங்க தலைவர் மனோன்மணி சண்முகதாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் உட்பட இலக்கியவாதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கருத்துரைத்த பேராசிரியர் சிவலிங்கராஜா நாம் இனத்தால், மதத்தால், தேசத்தால் வேறுபட்டிருப்பினும் தமிழால் இணைந்திருக்கின்றோம். தமிழின் பெயரால் நாம் ஒற்றுமையாக வாழ்வோம்
மேலும் எங்கள் மண்ணின் தாகங்களை ஏக்கங்களைச் சுமந்து செல்லுங்கள். உங்கள் ஊர்களில் எங்கள் கதைகளைச் சொல்லுங்கள். இங்கு தமிழ் வாழ்வு பெற்றால் உலகில் தமிழ் உன்னத நிலையில் வாழும்.
சீறாப்புராணம் எழுதுவதற்கு எழுத்தாணி வழங்கியது யாழ்ப்பாணமே என்று தெரிவித்ததுடன் கடந்த காலங்களில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் இலங்கையில் உள்ள கவிதைகள் பற்றியும் கவிஞர்கள் பற்றியும் கருத்துரைத்தார். இலங்கைக் கவிதைகள் பெருமை மிக்கவை எனத் தெரிவித்ததுடன் அவற்றுள் கிழக்கிலங்கை இஸ்லாமியக் கவிஞர்களின் கவிதைகள் முக்கியமானவை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், உலகளாவிய நிலையில் தமிழை உயர்த்த வேண்டும் என்றும் உலக நிலையில் தமிழ் மொழி வாழ்த்து ஆக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழகத்தில் தமிழ் ஊடகங்கள் கட்சி சார்ந்து இயங்குகின்றன.அத்துடன் அவற்றின் மொழிப்பிரயோகம் தமிழைத் தரம் தாழ்த்துவதாக அமைகின்றது. இந்த ஊடகங்கள் எம்மவர்களிடையேயும் செல்வாக்குச் செலுத்துகின்றது.இவற்றிற்கெதிராகப் போராட வேண்டிய நிலையில் நாமிருக்கின்றோம் என்றார்.
இதே வேளை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாநாட்டு வருகையாளர் யாவரும் கருத்துக்களை வழங்கினர்.யாழ். மண்ணில் தாம் கால்மிதித்தமை தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டதுடன் இலக்கிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய அறிஞர்கள்-யாழ் இலக்கியவாதிகள் சந்திப்பு
Reviewed by NEWMANNAR
on
December 16, 2016
Rating:

No comments:
Post a Comment