சிந்தனை மாற்றங்களை உருவாக்கியுள்ளது தமிழ் மக்கள் பேரவை...! வடக்கு முதல்வர்
அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள் என்றிருந்த சூழலை மாற்றி, “இது தந்தால்த்தான் எம் மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் எம்மைப் புறக்கணித்து விடுவார்கள்” என்று கூறக்கூடிய சிந்தனை மாற்றங்களை உருவாக்கியுள்ளது தமிழ் மக்கள் பேரவை.
வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று பிற்பகல் தமிழ் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சியின் உபகுழுவினர்கள் அடங்கிய குழுவினர்கள் யாழ். பொதுநூலக மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர்.
இதன் போது கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில், பாரம்பரியமாகத் தமிழ் பேசும் மக்கள் காலாதி காலமாக வாழ்ந்து வரும் இடங்களை அவ்வாறே தொடர்ந்தும் அடையாளப்படுத்தும் விதத்தில் சட்ட ரீதியான அங்கீகாரத்துடன்,
நம்மை நாமே ஆளும் உரிமையுடன் நாம் வாழ வேண்டும் என்ற எண்ணக் கருவை மையமாக வைத்தே நாங்கள் எமது அரசியலமைப்பு ரீதியான முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் கையளித்தோம்.
முதன் முதலாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிமட்ட அபிலாஷைகளை அவையறிய நாம் அறிவித்தது இந்தத் தருணத்தில் தான்.
அந்தக் கணம் தொடக்கம் அடிமட்டத் தமிழ் மக்களின் கரிசனைகளை அரசாங்கம் அசட்டை செய்ய முடியாது என்ற கருத்தை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
போரின் பின்னர் தமிழ் மக்கட் பிரதிநிதிகளின் குரல்கள் சில காலம் ஓங்கி ஒலிக்கத் தவறிவிட்டன. போரில் தோற்று விட்டோமே நாம் எப்படி எமது உரித்துக்களைக் கேட்க முடியும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகியிருந்தார்களோ நானறியேன்.
ஆனால் மக்களின் மனோநிலை என்ன? அவற்றைப் பிரதிபலிப்பது எமது கடமையல்லவா என்ற எண்ணத்தை அவர்கள் பலர் அடியோடு மறந்திருந்ததாகவே நான் உணர்ந்தேன்.
ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் பெரும்பான்மையின மக்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய எமது மக்களின் அவலங்களை, அபிலாஷைகளை, அங்கலாய்ப்புக்களைப் பாராளுமன்றத்தில் எம் பிரதிநிதிகள் தமிழில் பேசி விட்டு வர அவர்கள் கூறியதை எவருமே கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை.
தாம் பேசியதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் இடம் பெறச் செய்தால் அதுவே போதும், அரசில் தீர்வுகள் எது கிடைத்தாலும் அதனை ஏற்கலாம்,
எங்களுக்குத் திருப்பிக் கேட்கும் உரித்து இல்லை என்ற எண்ணத்திலேயே தமிழ் மக்கள் பேரவை ஜனனமாகும் வரையில் எமது தலைமைத்துவங்கள் இருந்து வந்ததாகத் தெரிகின்றது.
தற்போது எமது தலைமைத்துவங்கள் விழித்துக் கொள்ளவும் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் நீங்கள் வழி அமைத்துக் கொடுத்துள்ளீர்கள்.
இந்த ஒரு வருடத்தினுள் எமது தமிழ்த் தலைமைத்துவங்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேற நீங்கள் அடிகோலியுள்ளீர்கள்.
நாங்கள் எமது தலைமைத்துவங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்குப் பக்க பலமாக நின்று மக்கட் பணியில் ஈடுபட்டு வருகின்றவர்களே நாங்கள் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்.
நாங்கள் இராணுவத்திற்குப் பயந்து, அரசாங்கத்திற்குப் பயந்து, பொலிசாருக்குப் பயந்து எமது எண்ணக்கருத்துக்களை எடுத்துரைக்க முடியாது.
பேசாமடந்தைகளாக இருந்த காலத்தை மாற்றி தமிழ் மக்களின் அவலங்களை, ஆசைகளை அகிலமறியப் பொங்கியெழுந்து ஆனால் பொறுமையாக எடுத்துரைத்தமையால் எமது மக்களின் தன்னம்பிக்கையை தளிர்த்தெழச் செய்துள்ளீர்கள்.
குட்டக் குட்டக் குனியும் மக்கள் அல்ல நாங்கள். குடியுரிமை கேட்டால் குட்டவா பார்க்கின்றீர்கள் என்று குட்டியவனையே குறைகூறும் அளவிற்கு எம் மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டியவர்களும் நீங்கள் தான். தமிழ் மக்கள் பேரவை அதன் பொருட்டுப் பெருமைப்படலாம்.
வடக்கு கிழக்கு மக்களை ஒன்று கூட்டும் வகையில் முத்தமிழ் விழாவென்றினை மட்டக்களப்பில் நடத்தி தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்களின் அடுத்திருக்கும் அண்மைத்துவத்தை உலகம் பூராகவும் பறைசாற்றியுள்ளீர்கள்.
வடக்கு கிழக்கில் எத்தனை சிங்களவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அல்ல முக்கியம். வடக்கு கிழக்கு பாரம்பரியமாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த, வாழ்ந்து வரும் இடங்கள் என்பதையே நாம் யாவருக்கும் உணர்த்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
சிங்களவர்களிடையே இருக்கும் தமிழர்கள் சிங்களம் பேசுவதும் தமிழ் பேசும் மக்களிடையே வாழும் சிங்களவர்கள் தமிழ் பேசுவதும் நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயம் தான். ஆனால் அடிப்படைகளில் நாங்கள் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும்.
அதாவது தமிழ் பேசும் மக்களைச் சிங்களம் பேசும் மக்களாக வேண்டுமென்றே மாற்ற எத்தனிப்பதும் அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களைப் பெயர்மாற்றம் செய்ய முற்படுவதும் இன அழிப்புக்குச் சமமானது என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்த வேண்டும்.
இதன் காரணத்தினால் தான் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் கலை கலாச்சார ஒற்றுமைப்பாட்டை மக்களுக்கு உணர்த்துவிக்க முத்தமிழ் விழா ஒன்றை நடத்தி அதில் வெற்றியும் கண்டீர்கள்.
தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாட்களில் எம்மிடையே இருந்த ஒருவித சந்தேக நிலை, மயக்க நிலை, மந்த நிலை, குழப்ப நிலை ஆகியன தற்போது மலையேறிவிட்டது என்றே கூறவேண்டும்.
எமது இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சிகளைக் கூடிய வலுவுடன் வீறு கொண்டு செயற்படுத்த வேண்டிய ஒரு தருணத்தை அடைந்துள்ளோம் என்றார்.
சிந்தனை மாற்றங்களை உருவாக்கியுள்ளது தமிழ் மக்கள் பேரவை...! வடக்கு முதல்வர்
Reviewed by Author
on
December 20, 2016
Rating:
Reviewed by Author
on
December 20, 2016
Rating:


No comments:
Post a Comment