அண்மைய செய்திகள்

recent
-

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் எங்கே? எழிலனின் ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை..

இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை மார்ச் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.எஸ் சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனுவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த வருடம் ஜுலை மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற சந்தர்ப்பத்தில் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் சானக்க குணவர்த்தனவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது.

குறித்த ஆவணத்தில் இறுதி யுத்தத்தில் 58ஆவது படைப்பிரிவினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாகவே நீதிமன்றம் இதை நிராகரித்திருந்தது.

எனினும் இன்றைய தினமும் குறித்த வழக்கு விசாரணையின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் இல்லை என ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் சானக்க குணவர்த்தன நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, “இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும்” அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறித்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காணப்படுவதாக அறிவித்துள்ள நீதிபதி, அனைத்து விபரங்களும் அடங்கிய முழுமையான ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட ஐந்துபேரின் இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் எங்கே? எழிலனின் ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை.. Reviewed by NEWMANNAR on January 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.