உண்ணாவிரதமிருக்கும் காணாமல்போனோரின்...சந்திக்க அமைச்சர் சுவாமிநாதன் இன்று வவுனியா செல்கிறார்!
காணாமல் போனோர் தொடர்பான எந்தத் தகவலையும் இலங்கையிலிருந்து பெற முடியாதுள்ளதுடன் அவர்கள் சட்டபூர்வமாக வெளிநாடு சென்றதாக தகவல்கள் எதுவும் கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து தெரிந்த சகல தகவல்களையும் வழங்கத் தயார் என பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அமைச்சர் சுவாமிநாதன் இன்று (26) வவுனியா செல்லவுள்ளதாகவும் கூறினார்.
வவுனியாவில் உண்ணாவிரதமிருக்கும் காணாமல்போனோரின் உறவினர்கள் குறித்து ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், வவுனியாவில் உண்ணாவிரதமிருப்பது குறித்து சிவசக்தி ஆனந்தன் எம்.பி எமக்கு அறிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக தெரிந்த சகல தகவல்களையும் தரத்தயாராக இருப்பதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
இந்த மக்களை சந்திப்பதற்காக நாளை (இன்று 26) அமைச்சர் சுவாமிநாதன் வவுனியா செல்லவுள்ளார்.
காணாமல் போனவர்கள் இலங்கையில் உள்ளனரா என்பது குறித்து எந்தத் தகவலையும் பெற முடியாதுள்ளது. அவர்கள் சட்டபூர்வமாக வெளிநாடு சென்றதற்கான தகவல் எதுவும் கிடையாது.
திருட்டுத்தனமாக படகில் சென்றனரா அல்லது இறந்தார்களா என்று தெரியவில்லை. அவர்கள் சென்றிருக்கலாமென சிலர் கருதுவதோடு இறந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
சாட்சிகள் இல்லாது இத்தகையோருக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும். இவர்கள் சட்டபூர்வமாக வெளியேறவில்லை.
எனவே இவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காணாமல் போனோர் தொடர்பான சட்டம் தொடர்பில் ஜே.வி.பி முன்வைத்துள்ள திருத்தங்கள் கிடைக்கவில்லை. அது குறித்து ஆராயத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அநுரகுமார திசாநாயக்க (எம்.பி)
யுத்தத்தின் போது காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியாவில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். காணாமல்போன தமது பிள்ளைகள், கணவன்மாருக்காக போராட அவர்களுக்கு உரிமையுள்ளது.
இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறிவிட்டோம்.காணாமல்போனோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது.
இவர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை குறித்து அறிவிக்க வேண்டும்.
காணாமல்போனோர் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் செய்ய சில யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உண்ணாவிரதமிருக்கும் காணாமல்போனோரின்...சந்திக்க அமைச்சர் சுவாமிநாதன் இன்று வவுனியா செல்கிறார்!
Reviewed by Author
on
January 26, 2017
Rating:

No comments:
Post a Comment