அண்மைய செய்திகள்

recent
-

கேப்பாப்பிலவு நில மீட்புக்காக பல வழிகளில் போராட முடிவு! எழுச்சி பாடல்கள், சித்திரங்கள், முற்றுகை என மாற்றம்


கேப்பாப்பிலவு நிலம் மீட்புக்கான போராட்டம் நேற்று இருபதாவது நாளாக தொடர்ந்த நிலையில் மக்கள் தமது போராட்ட வடிவத்தை மேலும் உறுதியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இனியும் தமது போராட்டத்திற்கு அரசும் உலக நாடுகளும் செவி சாய்க்காவிட்டால் விமானப்படையினரை எங்களது காணிக்குள் செல்லவிடாமல் முற்றுகை போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அவர்கள் எச்சரித்துள் ளனர். இதன் ஆரம்ப கட்டமாக நேற்றையதினம் விமானப்படை முகாம் முன்பாக எழுச்சி பாடல்களை பாடி போராட்டம் ஒன்றையும் அவர்கள் நேற்று முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவின் பிலவுக் குடியிருப்பு மக்கள், விமானப்படை பிடித்து வைத்துள்ள தமது காணியை விடுவிக்ககோரி கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கடும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். எரிக்கும் வெயிலிலும் கொட்டும் பனியிலும் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் பலர் சுகவீனமடைந்துள்ளனர்.

மக்களுடைய போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், விமானப்படையும் தமது முன்னரங்குகளை பலப்படுத்தி வருகின்றது. எனினும் மக்கள் விமானப்படையின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் சில தினங்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் தமது போராட்டம் வேறு திசைக்கு திரும்பும் எனவும் அந்த மக்கள் எச்சரித்துள்ளனர். அரசு தரப்பு பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமது போராட்டத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் இராணுவ முகாம் முன்பாக எழுச்சி பாடல்களை பாடி இராணுவமே வெளியேறு, எங்கள் காணிகளை எம்மிடமே தா, இது எங்கள் நிலம் உங் களுக்கு இங்கு இடமில்லை என்ற எழுச்சி வசனங்களையும் உரக்க ஒலித்திருந்தனர்.

நேற்றைய போராட்டத்தின் போது பிரித்தானிய தமிழர்களின் பங்களிப்புடன் போராட்டத்திலிடுபடும் பாடசாலை மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துகை நிகழ்வொன்றும் ஊடகவியலார்களின் ஏற்பாட்டில் நடை பெற்றது, இதன் போது மாணவர்கள் தமது காணிகளுக்குள் இராணுவம் நிலை கொண்டுள்ளது போன்றும், தமது வீடுகளை சுற்றி முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளமை போன்றும், சித்திரங்களை வரைந்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதனை பார்வையிட்ட அவர்களது பெற்றோர்கள் எமது பிள்ளைகள் உள ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமையை இந்த சித்திரங்கள் மூலம் காண முடிகின்றது என்றனர். இந்த நிலையில் எமது கோரிக்கையை ஏற்று உடனடியாக எமது காணிகளை விடுவித்து எமது போராட்டங்களுக்கு முடிவு தர வேண்டும். இனியும் காலதாமதம் ஏற்பட்டால் இராணுவம் எமது காணிகளுக்குள் செல்ல முடியாதவாறு முற்றுகையிட்டு போராடுவோம் என அந்த மக்கள் எச்சரித்துள்ளனர்.
 நன்றி -வலம்புரி-

கேப்பாப்பிலவு நில மீட்புக்காக பல வழிகளில் போராட முடிவு! எழுச்சி பாடல்கள், சித்திரங்கள், முற்றுகை என மாற்றம் Reviewed by Author on February 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.