நல்லாட்சியின் நகர்வு நல்லதாகவே இல்லை! வியாழேந்திரன் எம்.பி. கடும் விசனம்
மைத்திரி-ரணில் தலைமையிலான இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நகர்வுகள் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று நல்லதாக அமையவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றிய வியாழேந்திரன்,
ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து தெருவோரத்திலே குளிரிலும் வெயிலிலும் வேதனையுடன் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தை முல்லைத்தீவு மக்கள் நடத்தி வருகின்றனர்.
கேப்பாப்பிலவு மக்கள் இறுதி யுத்தத்திலே 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்று மிகப்பெரிய பாதிப்புக்களையும் இழப்புக்களையும் சந்தித்து இப்பொழுது பெருந்துயரோடு வீதியோரத்தில் வந்து தமது துன்ப துயரத்திற்கு முடிவு வேண்டித்தவம் கிடக்கின்றார்கள்.செட்டிகுளம் முகாம் தொடக்கம் இன்று வரை அவர்கள் வேதனைகளைச் சுமந்து கொண்டு தான் காலங்கழிக்கின்றார்கள்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மீள்குடியேற்றம் என்ற பெயரிலே அவர்கள் குடியேற்றப்பட்டாலும் அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் அங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
நல்லாட்சியிலே தமது நிலபுலன்கள் மீளக்கிடைக்கும் என்கின்ற பாரிய எதிர்பார்ப்பு அவர்களுக்கிருந்தது.
ஆனால் நல்லாட்சி கடந்து மூன்று வருட ங்கள் கழிந்து விட்ட போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை தீர்வில்லை.
ஜனாதிபதி; வரை கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினை ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை உரிய நடவடிக்கைகளை நல்லாட்சியின் ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கமும் எடுக்காதது கவலையளிக்கின்றது.விமானப்படைக்கு கையகப்படுத்தப்பட்டிருக்கும் 534 ஏக்கர் பொதுமக்களின் காணி விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகப் போராடுகின்றோம்.
சூரபுரத்தில் 59 குடும்பங்களினுடைய காணிகள், தினக்குடியிருப்பில் 84 குடும்பங்களினுடைய காணிகள், கேப்பாப்பிலவில் 145 குடும்பங்களினுடைய காணிகள் இவ்வாறு பொது மக்களின் காணிகள் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.அங்கு போராட்டம் நடத்தும் வயோதிபர் சிறு வர், தாய்மாருக்காக ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்தை கிழக்கிலுள்ள நாங்களும் முன்னெடுத்துள்ளோம்.
நல்லாட்சி அரசு இந்தப் பிரச்சினைக்கு காலத்தை இழுத்தடிக்காமல் நல்ல தீர்வைத் தரவேண்டும்.
பால்குடிக்கும் பச்சிளம் குழந்தைகளோடு பனியிலும் வெயிலிலும் படுத்துறங்கும் தாய்மாரின் துயரங்களை இந்த நல்லாட்சி அரசு ஏறெடுத்துப் பார்க்க வேண்டும்.
குடிமக்களை தெருவில் பதைபதைக்க வைப்பதா நல்லாட்சியின் நகர்வு? மக்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குவதுதானா நல்லாட்சியின் நகர்வு? இது பற்றி ஆட்சியா ளர்கள் சிந்திக்க வேண்டும்.
வடக்கு தமிழ் மக்களின் துயரம் நிறைந்த போராட்டத்திற்கு தென்னிலங்கையிலுள்ள சிங்கள மனிதாபிமானிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள் என்பது ஒரு நிம்மதி தரும் செய்தி. தமிழர், சிங்களவர்,முஸ்லிம் என்ற பாகுபாடில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டுப் போராடுவதில் நாம் ஒன்றிணைந்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நல்லாட்சியின் நகர்வு நல்லதாகவே இல்லை! வியாழேந்திரன் எம்.பி. கடும் விசனம்
Reviewed by Author
on
February 13, 2017
Rating:
Reviewed by Author
on
February 13, 2017
Rating:


No comments:
Post a Comment