மன்னாரில் 5வது நாளாக தொடரும் முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டம்
மன்னாரில் நில மீட்புக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 5வது நாளாக இன்றும் அமைதியான முறையில் தொடர்கிறது.
முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டம், கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள நிலங்களை மீட்டு தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவிக்கையில்,
எங்களது இந்த போராட்டம் குறித்து முசலி பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் வந்து பார்வையிட்டுச் சென்றதை தவிர எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டங்களின் காரணமாக பல்வேறு காணிகள் வடக்கில் விடுவிக்கப்பட்டு வருகின்றது.
எனவே போராட்டத்தை மேற்கொண்டே எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதினால் எமது நிலம் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்.
உரிய பதில் கிடைக்காது விட்டால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிராம இருந்தும் மக்கள் முள்ளிக்குளம் மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
மேலும், குறித்த போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், அருட்தந்தையர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள், தொண்டு அமைப்புக்களின் பிரதி நிதிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 5வது நாளாக தொடரும் முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டம்
Reviewed by Author
on
March 27, 2017
Rating:

No comments:
Post a Comment