கேப்பாப்புலவு மக்களின் காணிகள் இன்று கையளிப்பு! ஜனாதிபதி உத்தரவு
முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதி மக்களின் காணிகள் இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு கையளிக்கப்படவுள்ளன.
மக்களின் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு வழங்கிய உத்தரவையடுத்து நேற்றைய தினம் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விமானப்படையினர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி அதிகாரிகள் இணைந்து மக்களின் காணிகளை அடையாளப்படுத்தியிருந்தனர்.
இன்றைய தினம் 11 மணிக்கு காணிகள் மக்களிடம் கையளிக்கப்படுமென கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி. குணபாலன் தெரிவித்தார். இதற்கு ஏதுவாகவே காணிகள் அளவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்பிக்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர்.
மக்களின் காணிகளை ஓரிரு தினங்களில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், முப்படையினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
மக்கள் விரும்பினால் தமது பழைய இடங்களில் சென்று குடியமர முடியும். இல்லாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுக் காணிகளில் தொடர்ந்தும் வசிக்க முடியும்.
இந்த நிலையிலேயே நேற்றைய தினம் கரைத்துறைபற்று பிரதேச செயலக காணி அதிகாரிகள் நேற்று குறித்த காணிகளுக்குச் சென்று அளவிடும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இன்று முற்பகல் 11 மணிக்கு காணிகள் வழங்கப்படுமென பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
விமானப் படையினரிடமுள்ள மக்களின் சொந்த காணிகள் விடுவிக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக வழங்கப்பட்ட மாதிரிக் கிராமம் அரசாங்கத்தினால் மீளப்பெறப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை வழங்குமாறு கோரி விமானப்படை முகாமுக்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என பலரும் குளிர், வெயில் என மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாது கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குள் அனுமதிக்கப்பட்டால் மாத்திரமே போராட்டத்தைக் கைவிடுவார்கள்.
எனவே போராட்டத்தை முடித்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தனர்.
எதிர்வரும் நான்காம் திகதி தான் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதால் அதற்கு முன்னர் இந்த மக்களின் காணிப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வந்து விடுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கும், படையினருக்கும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையிலேயே இன்று (01) காணிகள் விடுவிக்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேப்பாப்புலவு மக்களின் காணிகள் இன்று கையளிப்பு! ஜனாதிபதி உத்தரவு
Reviewed by Author
on
March 01, 2017
Rating:

No comments:
Post a Comment