வீடுகளை கூட விட்டு வைக்காத இராணுவம்! கண்ணீர் விட்டழும் புதுக்குடியிருப்பு மக்கள்...
எங்கள் வீட்டில் மனிதாபிமானமற்ற வகையில் சமைப்பதற்கான சமயலறை கூட இல்லாத அளவிற்கு வீட்டினை சிதைத்துள்ளனர்.
இதுதான் நல்லாட்சி அரசு மற்றும் இராணுவத்தின் செயற்பாடா என புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மூதாட்டியொருவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட தனது வீட்டை இன்று (04) பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக உடைக்கப்படுகின்ற சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்.
நாங்கள் எங்கள் வீடுகளை விடும்படி கேட்கும் போதெல்லாம் மேலிடத்து உத்தரவு கிடைத்தால் உங்கள் வீடுகளை அப்படியே தருவோம் என்று சொன்ன இராணுவம் வீடு கூரை கதவு யன்னல்கள் எல்லாவற்றையும் உடைத்து சென்று விட்டார்கள்.
சிறிது சிறிதாக காசு சேர்த்து எனது மகள் உருவாக்கிய வீட்டில் நாங்கள் நிம்மதியாக இருக்கவில்லை. வீட்டை நினைத்து நினைத்து கவலைப்பட்ட மகள் இன்று இல்லை.
எனது கணவர் இல்லை. இன்று தனியாக வந்திருக்கின்றேன். என் அழகான வீட்டில் அடுப்பைக்கூட இன்று உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதுதான் இலங்கையின் நல்லாட்சி அரசா அல்லது இராணுவமா? என தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற மக்களை கடந்த 2012ஆம் ஆண்டு மீள்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால் புதுக்குடியிருப்பு பகுதியில் 49 குடும்பங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணி இராணுவத்தினரின் 682 படைப்பிரிவினரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
குறித்த காணிகள் படையினரின் தேவைக்கென கடந்த 2014அம் ஆண்டு சுவிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த காணிகளை விடுவிக்குமாறு கோரி புதுக்குடியிருப்புப்பகுதியில் மக்கள் பல்வேறு போரட்டங்களை முன்னெடுத்ததுடன் கடந்த மாதம் 2ஆம் திகதி முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக ஒரு மாத காலமாக சுழற்சி முறையிலன உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
எதிர்கட்சித்தலைவர்; இரா சம்பந்தன் கடந்த வாரம் ஜனாதிபதியுடன் சந்தித்துக் கலந்துரையாடியதையடுத்து 29 பேருக்கு 7.5 ஏக்கர் காணிகளை ஒப்படைப்பதற்கும் பத்து ஏக்கர் காணியை மூன்று மாத காலத்திலும் 2 ஏக்கர் காணியை ஆறுமாத காலத்திலும் விடுவிப்பதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (04) காலை 8.30 மணிக்கு 29 குடும்பங்களுக்குச் சொந்தமான 7.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ம.பிரதீபன் ஆகியோர் இன்று காலை 8.30 மணிக்கு படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை சென்று பார்வையிட்டனர்.
காணி உரிமையாளர்கள் ஒரு மாத காலம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு தமது காணிகளுக்கு விரைவில் செல்வதற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர்.
இருப்பினும் இன்றைய தினம் தங்களது காணிகளுக்கு போரின்போது பறிகொடுத்த தங்களின் உறவுகளின் படங்களுடன் சென்று தங்கள் வீடுகளை பார்த்து கண்ணீர் விட்டுக் கதறியுள்ளனர்.
அழகினை இழந்து காட்சிதரும் வீடுகள் குறித்த வீடுகளில் பெரும்பாலான வீடுகள் அண்மை நாட்களுக்குள் உடைக்கப்பட்டு தேசப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
அத்துடன் குறித்த காணிகளில் உள்ள வீடுகள் கிணறுகள் மலசலகூடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் காட்சியளிக்கின்றன.
இதுவேளை குறித்த காணி விடுவிக்கப்பட்டதையடுத்து இன்று புதுக்குடியிருப்|பு பிரதேச செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த கவனயீர்ப்பு போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வீடுகளை கூட விட்டு வைக்காத இராணுவம்! கண்ணீர் விட்டழும் புதுக்குடியிருப்பு மக்கள்...
Reviewed by Author
on
March 04, 2017
Rating:

No comments:
Post a Comment