பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை துரிதப்படுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது!
பிரித்தானியா மனித உரிமைப்பேரவையின் ஒரு அங்கத்துவ நாடு என்ற வகையிலும், 30/1 என்ற பிரேரணையின் இணை அனுசரணையாளர் என்ற வகையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சும், அட்வக்கேசி குழுவும் இணைந்து தமிழ் மக்களுக்கான நீதியை கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் தொடர் சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான நகுலேஸ்வரன் சிவதீபன் Harrow West இற்கான பாராளுமன்ற உறுப்பினர் Mr.Gareth Thomas ஐயும், லச்சுமன் தெய்வேந்திரன் Tooting இற்கான பாராளுமன்ற உறுப்பினர் Dr. Rosena Allin-Khan ஐயும், கிஷ்ணமூர்த்தி ஜனார்த்தனன் Enfield & Southgate இற்கான பாராளுமன்ற உறுப்பினர் Mr.David Burrowes ஐயும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
இச்சந்திப்பில், சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும் எனவும் உள்நாட்டு விசாரணை எல்லாவற்றையும் மூடி மறைக்கும் இலங்கை அரசின் ஒரு கண்துடைப்பு நிகழ்வே என்பதும் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் இலங்கை அரசாங்கம் தம்வசம் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை முழுமையாக விடுவிக்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.
வடகிழக்கில் நிலை பெற்றுள்ள இராணுவத்தினர் குறைக்கப்படவில்லை. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்துள்ள மக்களிற்கான மீள்குடியேற்றம் பூர்த்தியாக்கப்படவில்லை என்பனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் முன்னாள் போராளிகளுக்கும், அரசியல்கைதிகளுக்கும் புனர்வாழ்வு என்ற பெயரில் விச ஊசி ஏற்றியமை தொடர்பாகவும், மர்மமான மரணம் பற்றி ஒரு நீதி விசாரணையின் முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
நல்லாட்சி என்று தம்மை தாமே சொல்லுகின்ற அரசாங்கத்தின் ஆட்சியிலும் தொடர்கின்ற கைதுகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், சித்திரவதைகள், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் போர்க் கைதிகளின் விடுதலை போன்ற சமகால பிரச்சனைகளையும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக்கூறினார்கள்.
இந்த கலந்துரையாடலில் ஈடுபட்ட அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையடப்பட்ட விடயங்களை பிரித்தானிய பிரதமர், மற்றும் வெளிவிவகார அமைச்சரிடமும் கொண்டு சேர்ப்பதாக உறுதியளித்ததுடன் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது ஆதரவு எப்போதும் உண்டு என்பதையும் தெரிவித்தனர்.
அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த சந்திப்புகள் தெடர்ச்சியாக இடம்பெறும் என இந்த செயற்பாட்டை முன்னின்று நடாத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அட்வகேசி குழு உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை துரிதப்படுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Reviewed by NEWMANNAR
on
March 24, 2017
Rating:

No comments:
Post a Comment