இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க இலங்கை அரசின் திட்டம்! ஐ.நாவில் குமுறல்
இலங்கை விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் நடந்த உள்நாட்டுச் சண்டையில், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.
கொத்துக் குண்டுகளை எறிந்து, தமிழினத்தைக் கூண்டோடு அழித்த இலங்கை இராணுவத்தின் 'மனித உரிமை மீறலை' சர்வதேச நாடுகள் கண்டித்தன.
2009-ல் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இனப்படுகொலை குறித்த விசாரணை ஐ. நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.
அதில், 'சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு இலங்கையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்' என்று 2015-ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தை இதுவரை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.
அதுமட்டுமன்றி, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்' என்ற தீர்மானத்தின் கால அவகாசமும் இந்த மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 34-வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், மறுவாழ்வு மற்றும் உரிமைகள் குறித்த தீர்மானத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோரும் தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டு வந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ் ஈழ ஆதரவாளர் என்ற முறையில் இயக்குநர் கௌதமனுக்கு ஐ.நா அழைப்பு விடுத்திருந்தது.
ஐ.நா-வின் அழைப்பை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்றுள்ள கௌதமனை தொடர்பு கொண்டு பேசினோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தில் என்ன நடந்து வருகிறது? யார் யார் பங்கேற்றுள்ளார்கள்?
உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைப்பதற்கு, 2015 -ல் இருந்து 2017-வரையிலான கால அவகாசத்தை இலங்கைக்குக் கொடுத்தது ஐ.நா மன்றம்.
ஆனால், அவற்றை செய்யாமல் இருக்கிற இலங்கையின் நடவடிக்கை குறித்து, மனித உரிமைகள் ஆணையம் பொதுச் சபைக்கு முதலில் எடுத்துச் செல்ல வேண்டும்.
பிறகு பாதுகாப்பு சபைக்கு சென்றவுடன் வாக்கெடுப்பு நடைபெறும். அப்படி நடக்கும்போது, நமது தமிழ் இனத்துக்கு நீதி கிடைக்கும் சூழல் உருவாகும்.
ஆனால், அப்படியான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கவே இலங்கைக்கு ஆதரவாக அவகாசம் கோரும் தீர்மானத்தை பிரிட்டனும், அமெரிக்காவும் கொண்டு வந்துள்ளன.
இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கை அரசு அவர்களுக்கு சாதகமாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து கொள்ளும்.
அமெரிக்காவும் பிரிட்டனும் மிகப்பெரிய திட்டத்தோடுதான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த கால அவகாசம் மூலம் தனக்கெதிரான ஆதாரங்களை அழித்துக்கொள்ளும் இலங்கை அரசு.
மேலும், தமிழர்களை ஒடுக்குவதற்கும் இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தில் நீங்கள் பேசிய அம்சம் என்ன?
இலங்கையில் இதுவரை நடந்த இனப்படுகொலைகள் மற்றும் தமிழ் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் பேசினேன்.
அதில், ஐ.நா-வின் உள்ளக விசாரணை அறிக்கையின் படி பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டது நிரூபணமாகி இருப்பதை சுட்டிக்காட்டினேன்.
இனப் படுகொலைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், இலங்கையிடம் இருந்து தமிழர் வாழும் பகுதிகள் பிரிந்து சென்றால் மட்டுமே சாத்தியமாகும். அப்படி பிரிந்து செல்வதே சரியான தீர்வாகவும் இருக்கும்.
ஏற்கெனவே, போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை நியமிக்காமல் தவிர்த்து வருகிறது இலங்கை அரசு. இந்த நிலையில் மேலும் கால அவகாசம் கொடுப்பது நல்லதல்ல என்றேன்.
இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் ஏதாவது பேசினார்களா?
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தப் போரை இந்தியா தான் நடத்தியது' என்று சொன்னபோது மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி இருவரும் மௌனியாக இருந்தனர்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதும், 'இந்தப் போரை நடத்தியது இந்தியாதான்' என்று சொன்னார்.
அப்போதும்கூட சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூவரும் அமைதியாகவே இருந்தனர்.
'இலங்கைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரவேண்டும்' என்று தமிழக அரசு சொன்ன போதும் அப்போதைய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது இந்தியப் பிரதிநிதியாக இங்கே வந்துள்ளவர்கள் இந்த கால அவகாசம் கோரும் தீர்மானத்துக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை..
இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொண்டு வரப்பட்டதற்கான எந்த மாற்றுக் கருத்தும் சொல்லப்படவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஆனால் ஈழத்தில் இருந்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே கடுமையாக எதிர்த்தனர்.
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதன் விளைவு என்னவாக இருக்கும்?
இனப்படுகொலை விசாரணையை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலைகளை நெட்வொர்க் அமைத்து செய்து வருகிறது இலங்கை அரசு.
இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்திருப்பது இலங்கை அரசு செய்துள்ள அனைத்துக் குற்றங்களுக்கான ஆதாரங்களையும் அழிப்பதற்கான அவகாசமாக அமைந்துவிடும்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்கான வழிவகைகள் இதுவரை செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
அதுமட்டுமின்றி எஞ்சிய தமிழர்களை அழிப்பதற்கான அவகாசமாக இலங்கை அரசு இதனைப் பயன்படுத்தும்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை தமிழ் எம்.பி தலைவரான சுமந்திரன், 'எங்களுக்கு தனி நாடு தேவையில்லை. இந்தக் கால அவகாசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்' என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி சம்பந்தன், சேனாதிராஜா போன்றோர் சிறிசேன அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழ உணர்வாளர்கள் ஒற்றுமையில்லாமல் செயல்பட்டு வருவதும் இனப்படுகொலையில் நீதி கிடைப்பதில் பின்னடைவு ஏற்படக் காரணம்.
ஐ. நா மன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்து?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை மனிதத்தை கொல்கிறது. அநீதிக்கு ஆதரவாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இது கண்டனத்துக்கு உரியது.
மனித குலம் மன்னிக்கவே முடியாத வேலைகளையும் ஐ.நா செய்து வருகிறது. இந்த கருத்தை அவையிலேயே பதிவு செய்துள்ளேன்.
ஜல்லிக்கட்டு அனுமதி கோரி எழுந்த எழுச்சியைப் போன்று இனப்படுகொலைக்கு எதிரான எழுச்சியை மாணவர்களையும், ஈழ உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து நடத்துவேன்.
இந்த எழுச்சி அலை என்பது தமிழனின் வீரத்தையும் அறத்தையும் பறைசாற்றும் வகையில்அமையும். என்றார்.
இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க இலங்கை அரசின் திட்டம்! ஐ.நாவில் குமுறல்
Reviewed by NEWMANNAR
on
March 24, 2017
Rating:

No comments:
Post a Comment