அகிம்சைப் போராட்டங்களை மதிக்கப் பழகுங்கள்.....
இந்திய தேசத்தின் விடுதலைக்காக மகாத்மா காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
அகிம்சை வழியில் அவர் நடத்திய போராட்டத்தை அன்றைய பிரித்தானிய வல்லரசு மனிதநேயத்தோடு பார்த்தது.
ஒரு மனிதன் தன்னை வருத்தி; உண வொறுப்புச் செய்து நடத்துகின்ற போராட்டம் கண்டு திணுக்குற்றது.
உண்ணாவிரதத்தால் காந்தி உயிரிழந்தால், அந்தப் பாவமும் பழியும் தம் மீது வந்து சேருமே என்று பிரித்தானிய ஆட்சியாளர்கள் அஞ்சினர்.
அதனால் இந்திய தேசத்துக்கு சுதந்திரத்தை வழங்கிவிட்டு மூட்டை முடிச்சைக்கட்ட முடிவு செய்தனர்.
ஆக, காந்தி நடத்திய உண்ணாவிரதத்துக்கு பிரித்தானியர்கள் கொடுத்த மதிப்பே இந்தியாவின் சுதந்திரமாயிற்று.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததால் தான் இலங்கையும் கத்தியின்றி இரத்தமின்றி சுதந்திரமடைந்தது.
அந்நேரத்தில் கூட தமிழ்த் தலைமை நினைத்திருந்தால், தமிழர் தாயகத்தைப் பிரித்து எங்கள் கையில் தந்துவிட்டு போ என்றால் பிரித்தானியா இல்லை என்று ஒருபோதும் சொல்லியிருக்காது.
முதலில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கட்டும். தமிழர் தாயகத்தைப் பிரித்துத்தா என்று கேட்டு பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணாமல் சிங்கள ஆட்சியாளர்களோடு சேர்ந்து பேசி, எங்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம் என்று தமிழ்த் தலைமை நினைத்தது.
அந்த நினைப்பு நல்ல நோக்கம் கொண்டது. எனினும் சிங்கள ஆட்சியாளர்கள் அதனை வேறுவிதமாக அணுகினர். தமிழ் மக்களை சிறுபான்மையாக்கி இலங்கையைத் தமதாக்கத் திட்டம் தீட்டினர்.
சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகள் கூட அவர்களால் பொறுமை காக்க முடியாமல், 1958இலேயே தமிழர்கள் மீதான கலகத்தை ஏற்படுத்தினர்.
1958இல் நடந்த கலவரம் சிங்கள ஆட்சியாளர்களின் கெட்ட நினைப்பின் வெளிப்பாடு. அந்த கெட்ட சிந்தனை இன்றுவரை அழிவாக; அக்கிரமமாக; மனிதப் படுகொலைகளாக; இன அழிப்பாக; மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் அநீதியாக நீண்டு செல்கிறது.
தமிழர்கள் என்றால் அவர்களை எப்படியும் வதைக்கலாம் என்பதே சிங்களத் தரப்பின் நினைப்பும் செயலுமாயிற்று.
இல்லையயன்றால் காணாமல்போன உறவுகளுக்காக - நில மீட்புக்காக - தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக - தமிழ் மக்கள் இத்துணை தூரம் தங்களை வருத்திப் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது.
மகாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை பிரித்தானியர்கள் மதிக்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் இரத்தாறு ஓடியிருக்கும்.
சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவை எந்த இனம் உரிமை கோரியிருந்தாலும் இந்தியா அழிந்திருக்கும்.
குறித்த இரண்டு விடயமும் நடக்காததால் உலகின் முதல் வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது.
ஆனால் அண்டை நாடான எங்கள் இலங்கையோ இனவாதம் பேசி நாட்டை அழித்து நரபலி எடுக்கிறது.
ஆகையால் நேற்று தமிழர் தாயகத்தில் நடந்த பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை அரசும் சிங்கள மக்களும் மதிப்பளிக்க வேண்டும். இதுவே நாட்டைக் காக்கும்.
-நன்றி-வலம்புரி-
அகிம்சைப் போராட்டங்களை மதிக்கப் பழகுங்கள்.....
Reviewed by Author
on
April 28, 2017
Rating:

No comments:
Post a Comment