யாழ்ப்பாணம் குறித்து இந்தியத் துணைத் தூதுவர் கூறுவது இது தான்!
தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்பில் பேசினால் அதிக பட்சம் அது யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியதாகவேயிருக்கும் என யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமாதியடைந்த தினமான நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீசத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீ சத்தியசாயி ஆராதனா மஹோற்சவம் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திலுள்ள சத்திய சாயி பாபா நிலையங்களில் நான் வாகனத்தில் செல்லும் போது அவதானித்த போது அவருக்குப் பூஜை இடம்பெறாத நாட்களே கிடையாது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூடி அவரைத் தொழுது பஜனைகள் பாடி வழிபடுகின்ற காட்சிகளைக் காண முடிகிறது.
இங்குள்ள சாயி பாபா நிலையங்களில் பல்வேறு சேவைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான சேவைகள் காலத்தின் தேவை. நாம் இவ்வாறான வழிபாடுகளை மேற்கொள்வதால் எமக்கு மன அமைதி பெருகும்.
வடக்கு மாகாணத்தை நாங்கள் பிரித்துப் பார்ப்பதே கிடையாது. அந்த வகையில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவிற்கு யாழ்ப்பாணத்தில் விழா இடம்பெறுவதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. எப்பொழுதும் இவ்வாறான விழாக்கள் இங்கு இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.
நாங்கள் வாழ்க்கையில் நிம்மதியாகவிருக்க வேண்டுமானால் சந்தோசமாகவுமிருக்க வேண்டும். சிலர் எப்போதும் கவலையுடனும், சிலர் எப்போதும் சந்தோஷத்துடனும் காணப்படுவார்கள். சந்தோஷத்தை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. சந்தோஷம் எமது மனதுக்குள் தானிருக்கிறது.
ஓர் ஊரிலே ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவரிடமில்லாத பொருட்களே கிடையாது. ஆனால்,சந்தோஷம் மட்டும் கிடையாது. சந்தோஷமில்லாத காரணத்தால் தன்னிடமுள்ள அனைத்துப் பொருட்களையும் யாரிடமாவது வழங்கி விட்டுத் துறவியாக மாறுவதற்கு எண்ணினார்.
வீட்டிலுள்ள தங்கம், பணம் அனைத்தையும் மூட்டையிலே கட்டிக் கொண்டு தெருவிலே போய்க் கொண்டிருந்தார். இவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது எதிர்ப்புறமாக ஊரிலுள்ள பூசாரி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பூசாரியார் பணக்காரனை நோக்கி ஐயா, நீங்கள் இவ்வளவு மூட்டைகளையும் சுமந்து கொண்டு எங்கே செல்கிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அந்தப் பணக்காரர் சுவாமிகள் இந்த ஊரிலேயே நான் தான் பணக்காரர் என்பது உங்களுக்குத் தெரியும்.
என்னிடம் பணம், பொருளெல்லாம் இருக்கிறது. ஆனால்,இரவானால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்று கூறுகிறார். இதனால் நான் துறவியாக ஆகலாம் என யோசிக்கிறேன் எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே அவரது வேட்டி அவிழ்கிறது.
அப்போது பணக்காரன் பூசாரியைப் பார்த்து ஐயா, இந்த மூட்டையை வைத்திருங்கள். நான் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்கிறேன் என்று கூறுகிறார். அந்த மூட்டையைப் பெற்றுக் கொண்டவுடனேயே அதனை எடுத்துக் கொண்டு ஊர்ப் பூசாரி ஓடத் தொடங்குகிறார். அவ்வாறு அவர் ஓடுவதைக் கண்ணுற்ற பணக்காரருக்கு கோபமும், பயமும் ஒரு சேர உருவாகிறது.
நாங்கள் எப்படியெல்லாம் அவனை நம்பினோம். என்னை ஏமாற்றி விட்டானே! என நினைத்தவாறு விரட்டிச் செல்கிறார். அது ஒரு சிறிய கிராமம் என்பதால் எங்கே விரட்ட ஆரம்பித்தாரோ அதேயிடத்தில் மீண்டும் இருவரும் வந்து நிற்கிறார்கள். இருவரும் பெரு மூச்சு விடுகிறார்கள்.
இந்தச் சமயத்தில் பூசாரி பணக்காரனிடம் மீண்டும் மூட்டையைக் கொடுக்கிறார். மூட்டையைத் திருப்பிக் கொடுத்த பின்னர் பணக்காரனிற்குச் சந்தோசம். அப்போது ஐயா, இப்போது நீங்கள் சந்தோசமாகவிருக்கிறீர்களா? எனப் பணக்காரனை நோக்கிப் பூசாரி வினாவினார்.
அப்போது அந்தப் பணக்காரன் ஆம். நான் இப்போது சந்தோசமாகவிருக்கிறேன். ஒரு வேளை நீ என்னை ஏமாற்றி விட்டு இந்த மூட்டையையும் கொண்டு செல்வாய் என நினைத்தேன் என்று கூறுகிறார். அதற்கு அந்தப் பூசாரி முதலிலேயே இது உங்கள் செல்வம் தான். ஆனால், சந்தோசமாகவில்லை எனக் கூறினீர்கள்.
ஆனால், தற்போதும் இது உங்கள் செல்வம் தான். இப்போது மாத்திரம் உங்களால் எவ்வாறு சந்தோசமாகவிருக்க முடிகிறது? எனக் கேட்டார்.
இது ஒரு சிறிய சம்பவமாகவிருந்த போதும் இவ்வாறான கதைகளுக்குள் எவ்வளவு அர்த்தமிருக்கிறது.
எனது சட்டைப் பையில் ஆயிரம் ரூபா பணமிருந்தால் எனக்கு நிம்மதியிருக்காது. அதனை எப்போது தான் செலவழிப்போம் எனத் தான் சிந்திப்பேன்.
அந்தப் பணம் ஊடாக யாருக்காவது உதவி புரிய வேண்டும் அல்லது செலவு செய்திட வேண்டும் என்று தான் சிந்திப்பேன். அடுத்தவருக்கு உதவி புரிவது எமக்குச் சந்தோஷத்தையும், நிம்மதியையும் தருகிறது என்றார்.
இதேவேளை, இலங்கையில் தமிழர்கள் அனைத்து இடங்களிலுமிருக்கிறார்கள். கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம், மலையகம் மாத்திரமல்லாமல் கொழும்பிலும் பல தமிழர்கள் வசிக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்பில் பேசினால் அதிக பட்சம் அது யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியதாகவேயிருக்கும். இந்த மண்ணிற்கு வருகை தந்த பின்னர் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் அவ்வாறான பற்று, பாசம், அக்கறை காணப்படுகிறது என்பது புலப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் குறித்து இந்தியத் துணைத் தூதுவர் கூறுவது இது தான்!
Reviewed by Author
on
April 26, 2017
Rating:

No comments:
Post a Comment