காணாமல்போனவர்களின் உறவுகள் படும் துயர் பாரீரோ!
காணாமல்போன எங்கள் பிள்ளைகள், உறவுகள் எங்கே? அவர்களை மீட்டுத் தாருங்கள் என்று கெஞ்சி அழுகின்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம் வயிறு பற்றி எரியும்.
அந்தளவுக்கு அவர்கள் படும் பரிதவிப்பு தாங்க முடியாதது.
இருந்தும் இத்துயர் குறித்து ஆட்சித் தலைவர்களோ படைத் தரப்பினரோ இன்னமும் மெளனமாக இருப்பது ஏன் என்பது புரியாமலே உள்ளது.
என் மகன் வருவான் என்று ஏங்கி அழும் தாயின் பரிதாப நிலையை உணர்ந்து கொள்வதற்கு இந்த நாட்டில் எவரும் இல்லை என்றாயிற்று.
காணாமல்போன பிள்ளையின் - தந்தையின் - குடும்பத் தலைவனின் புகைப்படங்களை ஏந்தியவாறு நம் உறவுகள் கண்ணீர் விடுகின்ற துன்பம் இந்த நாட்டை நிர்மூலமாக்க வல்லது.
எனினும் இதுபற்றி எவரும் உணராமல் தங்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல நடந்து கொள்கின்றனர்.
வருடக் கணக்காக கண்ணீர் விட்டு தங்கள் உறவுகளைத் தேடியழும் மக்கள் இனியும் பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் தங்களை வருத்தி தொடர் போராட்டம் நடத்துவதே ஒரே வழி என முடிவு செய்தனர்.
ஐம்பது நாட்கள், அறுபது நாட்கள், எழுபது நாட்கள் என தொடர் போராட்டம் நீடிக்கிறது. இருந்தும் ஜனநாயக போராட்டத்தை மதித்து அந்த மக்களைச் சந்தித்து அவர்களின் துயருக்கு முடிவு கட்ட ஆட்சியாளர்கள் மனம் கொள்ளவில்லை.
நீங்கள் தமிழர்கள், சிறுபான்மை இனத்தவர்கள் உங்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் இழப்புக்களே அல்ல.
எங்களுக்கு இழப்பு ஏற்பட்டால்தான் அது இழப்பு என்பதாக ஆட்சிப்பீடம் கருதுகிறது.
இத்தகைய நிலையில் காணாமல்போன உறவுகளுக்கு நாங்கள் உறவுகள், ஆகையால் காணாமல்போனவர்கள் எங்கள் உறவுகள்.
எனவே அவர்களின் மீட்புக்காக; அவர்கள் பற்றிய தகவலை அறிவதற்காக நாங்களும் போராட்டத்தில் பங்கெடுக்கிறோம் என்பதாக, ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
இவை யாவற்றுக்கும் மேலாக காணாமல் போனவர்களுக்கு நடந்தது என்ன என்பது பற்றி அரசு விளக்கம் கொடுக்க வேண்டும்.
காணாமல்போனவர்களைக் கண்டறிதல் என்ற தனது தார்மீகக் கடமையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் தங்களின் ஆதரவை மனிதாபிமான அடிப்படையில் வழங்க வேண்டும்.
தான் பெற்ற பிள்ளையை காணவில்லை என்று ஆற்றாது அழுது கண்ணீர் விடும் ஒரு தாயிடம் இனம், மதம், மொழி என்ற அடையாளங்கள் தெரிவதில்லை. அங்கு தாய்ப் பாசம் மட்டுமே வெளிப்படும்.
எனவே இலங்கை வாழ் சிங்கள முஸ்லிம் சகோதரர்கள் தமிழ் மக்கள் படும் அவலத்தை மனிதநேயத்தோடு பார்க்க வேண்டும் - நோக்க வேண்டும்.
அவர்களின் நியாயபூர்வமான போராட்டத்துக்கு உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
அதேநேரம் காணாமல்போன உறவுகளின் அவலத்தை சர்வதேச சமூகம் ஒருகணம் திரும்பிப் பார்க்கும் வண்ணம் ஒட்டுமொத்த மக்கள் ஆதரவு பெருக வேண்டும்.
நன்றி-வலம்புரி-
காணாமல்போனவர்களின் உறவுகள் படும் துயர் பாரீரோ!
Reviewed by Author
on
April 26, 2017
Rating:

No comments:
Post a Comment