மன்னார் நாயாறு பகுதியில் இராணுவ முகாம் அகற்றப்பட்டது .
மன்னார் மாவட்டத்தில் உள்ள நாயாறு பகுதியில் மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தின் முகாமொன்று அங்கிருந்து முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
முகாம் அமைந்திருந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த அனைத்துக் கட்டடங்களும் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், போர் முடிவடைந்த பின்னரும் அங்கு இடம்பெற்று வந்த இராணுவ சோதனைகளும் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளன.
யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியிலுள்ள நாயாறு பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சுமார் நான்கு ஏக்கர் காணியில் இராணுவத்தினர் தமது முகாமொன்றை அமைத்திருந்தனர்.
குறித்த முகாமுடன் உள்ள சோதனை சாவடியில் கடந்த 2016ம் ஆண்டு வரை தொடர்ச்சியான வீதிச் சோதனை நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தனர்.
எனினும் அண்மைக்காலமாக குறித்த சோதனைச் சாவடியில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு திடீரென சோதனை நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த முகாமில் 70க்கும் அதிகமான இராணுவத்தினர் நிலை கொண்டிருந்ததாகவும் அவர்கள் தற்போது அந்த முகாமில் இருந்து தமது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த முகாமானது தமது மாடுகளின் மேய்ச்சல் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைவதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் அடம்பன் பகுதியிலுள்ள பண்ணையாளர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த முகாம் அங்கிருந்து முற்றுமுழுதாக அகற்றப்பட்டுள்ளது.
மன்னார் நாயாறு பகுதியில் இராணுவ முகாம் அகற்றப்பட்டது .
Reviewed by NEWMANNAR
on
April 17, 2017
Rating:

No comments:
Post a Comment