தமிழன் வீழ்ந்தான் என்று நினைத்தாயோ!
தமிழ் மீது, தமிழ் மண் மீது, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் இன்னும் இன்னும் உயர்ந்து கொண்டு செல்கிறதே தவிர அதில் எந்தக் குறையும் இல்லை. இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொண்டாக வேண்டும்.
தமிழ் அரசியல் தலைமையின் பித்தலாட்டம் கண்டு தமிழினம் வீழ்ந்து விட்டது என்று யாரேனும் நினைத்தால் அதுதான் மிகப்பெரும் மடமைத்தனம்.
தவிர, போர்க்குற்றம் நடைபெறவில்லை. போர்க் குற்றம் செய்யாத படையினரை எப்படி விசாரணை செய்ய முடியும்? என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்புகிறார்.
இத்தகைய கேள்விகளால் தமிழ் மக்களின் மனங்களை வெல்லவோ, வசீகரிக்கவோ முடியாது.
மாறாக எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்பதை அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அதில் உயிர்த்தியாகம் செய்த இளைஞர், யுவதிகள் இதுபற்றியெ ல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நடந்தது போர்க்குற்றம் என்று கூறப்பட்டால், அது உண்மையா? இல்லையா? என்பதை சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தி கண்டறிவதே நீதியானது.
போர்க்குற்றம் என்பது இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்டது என்பதே குற்றச்சாட்டு.
போர்க்குற்றத்தை - தமிழின அழிப்பைச் செய்தவர்கள் படைத்தரப்பும் அப்போதைய ஆட்சியாளர்களும் என்று கூறப்படுகிறது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடும் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுபற்றி பக்கச்சார்பின்றி விசாரணை நடத்தி தீர்ப்பை வெளிப்படுத்துவதே தர்மமும் நீதியுமாகும்.
இதனை உள்ளூர் நீதிபதிகளே விசாரணை செய்வது பொருத்தமற்றதும் நம்பகத்தன்மை இல்லாததுமாகும்.
ஆகையால் சர்வதேச நீதிபதிகளே போர்க்குற்ற விசாரணையைச் செய்ய வேண்டும்.
இதைவிடுத்து படையினர் போர்க்குற்றம் புரியவில்லை என்றால், வன்னிப் பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லையா? அல்லது போர்தான் நடக்கவில்லையா? என்ற கேள்விகள் எழும்.
இலங்கையில் சமாதானம், அமைதி ஏற்படவேண்டுமாயின் தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும்.
இதற்கு அமைச்சர் ராஜித போன்றவர்களின் கருத்துக்கள் பெருந்தடையாகவே அமையும்.
தமிழ் மக்கள் இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து போனாலும் அவர்கள் இன்றுவரை இன உணர்வோடு இருக்கிறார்கள். இதற்கு நல்லதோர் உதாரணம் நேற்று முன்தினம் தமிழகத்தில் நடந்துள்ளது.
சீ (zee) தமிழ் தொலைக்காட்சி சேவையில் ஸரிகம என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சிறுவர்கள் பாடுகின்ற ஒரு போட்டி நிகழ்ச்சி இது. உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ள இந் நிகழ்ச்சியில் எங்கள் ஈழத்து மண்ணைச் சேர்ந்த நிசாதனா என்ற பிள்ளை ஒருவர் பாடுகிறார்.
எங்கள் மண்ணில் இருந்து தமிழகத்துக்குச் சென்று முகாமில் வாழும் நிசாதனாவின் பாடல் கோடிக்கணக்கானவர்களை ஈர்த்துள்ளது.
நேற்று முன்தினம் நிசாதனா கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் வரும் விடைகொடு எங்கள் நாடே... என்ற பாடலைப்பாடி பார்த்திருந்த கோடிக்கணக்கான மக்களை அழ வைத்தார்.
இதன்போது அவர் இருக்கக்கூடிய முகாம் மக்கள் அங்கு வந்து அவரைப் பாராட்டினர். யாராலும் முடியாத ஒரு பரிசை வழங்கப் போவதாக அறிவித்து ஈழத்து தமிழ் மண்ணை பரிசாகக் கொடுத்தனர்.
இந்த நிகழ்வு பலரையும் நெகிழ வைத்தது. ஈழத் தமிழ் மண் மீது தமிழர்கள் கொண்ட பாசத்தை உலகுக்கு பரப்பி நின்றது. இதன் தாற் பரியத்தை அனைவரும் அறிவது நல்லதே.
தமிழன் வீழ்ந்தான் என்று நினைத்தாயோ!
Reviewed by Author
on
April 07, 2017
Rating:

No comments:
Post a Comment