மே 18இல் ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை
ஜனாதிபதி மே 18 இல் முல்லைத்தீவிற்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கில் கருவறுக்கப்பட்ட நாளான மே 18ஐ தமிழ் மக்கள் ஆறாத வடுவாக எண்ணி நினைவுகூரும் நிலையில் அதே தினத்தில் முல்லைத்தீவுக்கு வருவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவிர்க்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்திக்காக மாவட்டங்கள் தோறும் ஜனாதிபதி வருவதை வரவேற்கிறோம்.
அதேபோல் நாட்டின் வறட்சியைப் போக்க தேசிய நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதையும், அதற்காக அதிக வறட்சி மாவட்டமான முல்லைத்தீவைத் தெரிவு செய்து அங்கிருந்து நிகழ்வை ஆரம்பிப்பதையும் வரவேற்கின்றோம்.
ஆயினும், குறித்த திகதியில் இந்த நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெறுவதையே கண்டிக்கின்றோம்.
ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஆறாத துயருக்குள் தள்ளிய அந்த முள்ளிவாய்க்கால் துயரம் தமிழினம் உள்ளவரை நெஞ்சை விட்டு அகலாது. இது ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் நினைவுகூரும் நாள்.
இதற்காக முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அங்கு ஒன்றுகூடி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செய்வதைக் கடைப்பிடிக்கும் நிலையில் அதே தினத்தில் ஜனாதிபதி முல்லைத்தீவு வருவது எமது இனத்தை மேலும் வேதனைப்படுத்தவே செய்யும் என தெரிவித்தார்.
மே 18இல் ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை
Reviewed by Author
on
May 07, 2017
Rating:
Reviewed by Author
on
May 07, 2017
Rating:


No comments:
Post a Comment