வினைத்திறனும் நேர்மைத்திறனும் வடக்கின் இன்றைய தேவை...
வடக்கு மாகாண அரசுக்கு நிறையவே பொறுப்புக்கள் உண்டு. யுத்தத்தின் பின்பான தமிழர் அரசு என்பதால் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் இன்னல்களைக் களைவது தொடக்கம் விவசாய மற்றும் கடற்றொழிலை வளப்படுத்தல், கைத்தொழில் துறைகளைக் கட்டியெழுப்புதல், சேவைத்துறையை விஸ்தரித்தல் இதனூடாக வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என்பவற்றை எட்டுதல்,
கல்வியில், சுகாதாரத்தில் முன்னேற்றத்தை காட்டுதல் யுத்தத்தில் சீரழிந்துபோன உட்கட்டுமானங்களை மீள்புனரமைப்புச் செய்தல், யுத்த காலத்தில் இழந்த நிலங்களை மீட்டல், உடைந்த வீட்டைக் கட்டிக் கொடுத்தல், யுத்தத்தில் அங்கவீன மக்களின் வாழ்வு மற்றும் குடும்பத் தலைவர்களை இழந்து பெண் தலை மைத்துவக் குடும்பங்களின் சீவனோபாயம் பற்றிச் சிந்தித்தல் என ஏகப்பட்ட வேலைகளை அமுலாக்கும் பணிகள் என ஏராளம் உண்டு.
கூடவே யுத்தத்தின் பின்பான சமூகப் பிறழ்வுகள், களவு, கொள்ளை, கொலை, போதைவஸ்து, பெண்கள் மீதான வன்மங்கள் உள்ளிட்ட சமூக சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துதல், இளம் சமூகத்தை வழிப்படுத்தல், கலாசாரம் பண்பாட்டைப் பேணுதல் என பல விடயங்கள் மீது வடக்கு மாகாண அரசு கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு இருக்கக்கூடிய மேலதிக பொறுப்புக்கள் ஏனைய மாகாண சபைகளுக்கு இல்லை என்பதும் இங்கு கவனத்துக்குரியது.
ஆக, ஏனைய மாகாண சபைகளுக்கு இல்லாத மேலதிக பொறுப்புக்கள் யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட மத்திய அரசின் பங்களிப்புக்கள் பல மடங்கு உயர்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளை நிவர்த்திக்க முடியும்.
அதேநேரம் வடக்கு மாகாண அரசு அதன் உறுப்பினர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தமது பொறுப்புக்களை உணர்ந்து வடக்கு மாகாண சபையின் ஒவ்வொரு அமர்வுகளையும் தீர்மானங்களையும் அதற்கான நேரங்களையும் மிக உச்சமாக பயன்படுத்த வேண்டும்.
தேவையற்ற விடயங்களைக் கைவிட்டு எங்கள் மக்களின் வாழ்வுக்கான திட்டமிடல்களாக, பணிகளாக தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும்.
கூடவே வடக்கு மாகாண சபைக்குட்பட்ட அனைத்து தீர்மானங்கள் அரச அமைப்புக்களின் உச்சமான செயற்பாட்டு வகிபங்கை உறுதி செய்வதுடன் எங்கும் எதிலும் நேர்மை, நீதி, ஊழலின்மை, பக்கச்சார்பின்மை என்பனவும் நிலைநிறுத்தப்படுவது அவசியமாகும்.
அப்போதுதான் வடக்கு மற்றும் கிழக்கு மக் களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும். இதைச் செய்வது ஒவ்வொருவரதும் கடமை என்றுணர்வதும் தலையாய பொறுப்பாகும்.
-நன்றி-வலம்புரி-
வினைத்திறனும் நேர்மைத்திறனும் வடக்கின் இன்றைய தேவை...
Reviewed by Author
on
May 01, 2017
Rating:

No comments:
Post a Comment