வித்தியா படுகொலை வழக்கு தமிழ் மொழி பேசும் நீதிபதிகள் மூலம் 6 நாட்களுக்கு தொடர் விசாரணை
வித்தியா படுகொலை வழக்கின் தொடர்வழக்கு தமிழ் மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நாளை (28) முதல் எதிர்வரும் ஆறு நாட்களுக்கு தொடர் விசாரணைகளுக்கான திகதிகள் இடப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் பிரியசத் டெப்பினால் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழு முன்னிலையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் ஆகிய உறுப்பினர்களுடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் தலைமையில் இந்த தொடர் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
விசேட வழக்கு தொடுனரான சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகவுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி யாழ். புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். குடாநாட்டிலும், ஏனைய மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுப்பெற்றன.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் விசேட நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, அப்போதைய பிரமத நீதியரசர் கே.ஶ்ரீபவனும் யாழ்ப்பாணத்திற்கு சென்று சட்டதரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
இதன் விளைவாக பிரதம நீதியரசரின் கலந்துரையாடல் இடம்பெற்ற 48 மணித்தியாலங்களுக்குள் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணகளை ஊர்காவற்துறை நீதவான் லெனின்குமார் நடத்தியதுடன் இறுதிக்கட்ட விசாரணைகளை நீதவான் மொஹமட் றியாழ் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டதுடன், ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராகுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஏனைய ஒன்பது சந்தேகநபர்களுக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 41 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வித்தியா படுகொலை வழக்கு தமிழ் மொழி பேசும் நீதிபதிகள் மூலம் 6 நாட்களுக்கு தொடர் விசாரணை
Reviewed by Author
on
June 27, 2017
Rating:

No comments:
Post a Comment