சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம்! விக்கியே வடக்கின் முதலமைச்சர்?
வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்களின் ஊழல் விவகாரத்தால் பிளவு பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள ஒன்றிணைக்கும் சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபை தொடர்ந்து இயங்குவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை விவகாரத்தால் முரண்பட்டுள்ள இரண்டு தரப்புகளையும் இணைப்பதற்கான சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
இதில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாக இரு தரப்பினரும் சமரசத் தீர்வுக்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்படாத இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் முதலமைச்சரின் முடிவு மாற்றப்பட வேண்டும் என்ற தமிழரசுக் கட்சியின் கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தபோது, அதற்கு முதலமைச்சர் இணக்கம் தெரிவித்தார் என்றும், குறித்த இரண்டு அமைச்சர்களும் தம்மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இடையூறு விளைவிக்க மாட்டார்கள் என எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர்களிடம் முதலமைச்சரின் நிலைப்பாட்டை சமரசப் பேச்சுக்கான தொடர்பாளர்கள் விளக்கியுள்ளனர்.
எனினும், அதற்கு அவசியமில்லை எனவும் விசாரரணக்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர்.
இதனிடையே, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஓர் அவசர கடிதமொன்றை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அதில், குற்றஞ்சாட்டப்படாத இரண்டு அமைச்சர்கள் தொடர்பான தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு இணக்கம் தெரிவித்துள்ள முதலமைச்சர், குறித்த அமைச்சர்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் விசாரணக்கு ஒத்துழைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலைமையின் கீழ், இரு தரப்பிலும் சிறு சிறு கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியதோடு, பிரச்சினையை தீர்ப்பதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்குத் தீர்வு காணும் முகமாக குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இரு தரப்புக்குமிடையிலான தொடர்பாடல் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- தினகரன்-
சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம்! விக்கியே வடக்கின் முதலமைச்சர்?
Reviewed by Author
on
June 18, 2017
Rating:

No comments:
Post a Comment