வடமாகாணத்தின் சுற்றுச் சூழல் நிகழ்வுகள்
வடமாகாணத்தில் இன்று சுற்றுச் சூழல் அமைச்சு என்று எவ்வித அதிகாரமும் இல்லாத பெயரளவில் மாத்திரம் செயற்படும் அமைச்சு ஒன்றே காணப்படுகின்றது, என வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு இன்று கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள எருமைதீவு பிரதேசத்தில் வடமாகாண சுற்றுச் சூழல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வின் போது வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, விவசாய அமைச்சின் செயலாளர், பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதோடு இன்றைய நாளின் நினைவாக மரக்கன்றுகளையும் நாட்டி வைத்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இன்று வடமாகாண அமைச்சின் கீழ் சுற்றுச் சூழல் அமைச்சு என்று பெயரளவில் மாத்திரமே உள்ளது. ஆனால் அதற்கான எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. பொறுப்புக்கள் இல்லை இவ்வாறு ஒரு வெறுமையான பெயரளவிலான அமைச்சாக உள்ளது.
இவ்வாறு உள்ள நிலையில் குறிப்பாக கிளிநொச்சியில் நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறையை எடுப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
அதை நாம் எதிர்த்தோம், மன்னாரில் பெரிய அளவிலான தோல் பதனிடும் தொழிற்சாலை நிறுவப்பட முயற்சி எடுக்கப்பட்டது. அதனையும் நாம் எதிர்த்தோம். அப்போது அரசாங்கம் சுற்றுச் சூழல் அமைச்சின் அதிகாரங்கள் எம்மிடமே உள்ளது.
நீங்கள் எதிர்க்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தது. நாங்கள் ஆரம்பத்தில் வடமாகாண சபையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் வடமாகாண சபையை ஏற்றுக் கொண்டால், அதிகாரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே வடமாகாண சபையை ஏற்றுக் கொண்டோம்.
அதற்காக அரசு சொல்லும் அனைத்திற்கும் தலையசைக்க வேண்டியதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு கருத்து தெரிவித்த வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் மன்னார் பகுதியில் விளையாட்டு நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தேன் அங்கு விளையாட்டுக்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கையில் வெடிச் சத்தங்கள் பாரிய அளவில் கேட்டது.
இராணுவத்தினரின் பயிற்சி முகாம் பாடசாலைக்கு அருகில் காணப்படுகின்றமையை அப்போது அதிபர் ஊடாக கேட்டறிந்து கொண்டேன்.
அங்கு பெரிய அளவிலான வெடிச் சத்தங்களும் அடிக்கடி கேட்பதாகவும் அறிந்ததாக அவர் தெரிவித்தார். இவ்வாறான பயிற்சி முகாம்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அவர் இங்கு குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குறிப்பிடுகையில்,
இந்த எருமைதீவில் யானைகளும் உள்ளன, நீல பூனைகளும் உள்ளன என குறிப்பிட்டார்.
மேலும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பது தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர் இங்கு முப்படையினர் தேவையில்லை. அவர்கள் வெளியே போகலாம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தின் சுற்றுச் சூழல் நிகழ்வுகள்
Reviewed by Author
on
June 06, 2017
Rating:

No comments:
Post a Comment