மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான இறுதி ஏற்பாடுகள் தொடர்பில் மடுவில் அவசர கலந்துரையாடல்-(படம்)
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான இறுதி ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்தரையாடல் ஒன்று இன்று (29) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மடு திருத்தளத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம் பெற்றது.
-குறித்த அவசர கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.குணவர்த்தன உற்பட பொலிஸ் அதிகாரிகள்,திணைக்களத்தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது எதிர் வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ள மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான இறுதி ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அவசர ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
-குறிப்பாக போக்குவரத்து,குடி நீர் ,சுகாதாரம்,மருத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
-இதன் போது எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி தமிழ்,சிங்கள மொழிகளில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளதாக மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.
-அதே வேளை மடு திருவிழாவிற்காக அரச நிதியாக ஒரு மில்லியன் ரூபாய் நிதியினை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.குணவர்த்தன மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான இறுதி ஏற்பாடுகள் தொடர்பில் மடுவில் அவசர கலந்துரையாடல்-(படம்)
Reviewed by NEWMANNAR
on
June 29, 2017
Rating:

No comments:
Post a Comment