காணிகளை மக்களிடம் வழங்க நடவடிக்கை! ஜனாதிபதியிடம் - த.தே.கூ கோரிக்கை...
வட கிழக்கு மாகாணங்களில் படையினர்வசம் உள்ள காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரியிருப்பதாக கூறியிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் சுகாதார தொண்டர்களின் நியமனம், மணல் விநியோகம் என்பவற்றிற்கு விரைவான பதில் தருவதாக ஜனாதிபதி
தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
யாழ்.மாவட்டத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
இதன் பின்பு மேற்படி கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 2 வருடங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், படையினரின்வசம் உள்ள காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும் என கேட்டிருக்கிறோம். மேலும் பலாலி விமான நிலையத்தை சூழ உள்ள 5 வீதிகள் தொடர்ந்தும் படையினர்வசமே உள்ளது.
இதனால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கும் கூட மக்கள் செல்ல இயலாத நிலை உருவாகியுள்ளது என்பதை கூறியுள்ளோம். இதே போல் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இரணைதீவு மக்களுடைய மீள்குடியேற்ற பிரச்சினை தொடர்பாக சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்நிலையில் படையினரின்வசம் உள்ள மக்களுடைய காணிகள் தொடர்பான தகவல்களை பெற்று அந்த காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என நாளை (இன்று) நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு சபை கூட் டத்தில் வலியுறுத்துவேன் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மேலும் சுகாதார தொண்டர்களுடைய பிரச்சினைகள், வேலையற்ற பட்டதாரிகளுடைய பிரச்சினைகள் மற்றும் யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்தி தேவைகளுக்கான மணலை பெற்று கொள்வதற்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடியுள்ளோம்.
இது தவிர வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுடைய பிரச்சினைகள், செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் என்பவற்றை சுட்டிக்காட்டி பேசியிருந்ததையும் மாவை சேனாதிராசா தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காணிகளை மக்களிடம் வழங்க நடவடிக்கை! ஜனாதிபதியிடம் - த.தே.கூ கோரிக்கை...
Reviewed by Author
on
June 14, 2017
Rating:

No comments:
Post a Comment