சிறையில் இருப்பது தமிழ் அரசியல் கைதிகளே! விடுவிக்க வேண்டியது தமிழ் கூட்டமைப்பின் பொறுப்பு!
தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடன் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசுக்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் நோக்கங்களுக்காக மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டு அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் கூறியவை வருமாறு:-
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளென எவரும் இல்லை என்று ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைப் புனர்வாழ்வளித்து பிணையில் விடுதலை செய்யுமாறு அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
மேற்படி மூவரினது கருத்துக்கும் தமிழ் அமைச்சரின் கருத்துக்குமிடையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது என்று தமிழ் அரசியல் கைதிகள் எம்மிடம் தெரிவித்தனர்.
அதேவேளை, நாட்டில் தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர் என்பதை நிரூபிக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ள பொறுப்பாகும்.
அதனை நிரூபிக்கத் தவறினால் அது கூட்டமைப்புக்கு ஏற்படும் அரசியல் தோல்வியாகும். இது அரசியல் தீர்வு விடயத்திலும் தாக்கத்தைச் செலுத்தும்.
எனவே, தமிழ் அரசியல் கைதிகளை கைவிடுவதானது தமிழ் மக்களின் அரசியலை கைவிடுவதற்கு ஒப்பான செயலாகும் என்பதே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் கருத்தாக இருக்கின்றது.
ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியாக இருந்து இதை செய்ய முடியாவிட்டால் அது அரசியல் தோல்வியாகவே அமையும். அரசியல் கைதிகளின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கின்றது என்றார்.
சிறையில் இருப்பது தமிழ் அரசியல் கைதிகளே! விடுவிக்க வேண்டியது தமிழ் கூட்டமைப்பின் பொறுப்பு!
Reviewed by Author
on
June 03, 2017
Rating:

No comments:
Post a Comment