கிழக்கின் வேலையற்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் தயாராக உள்ளோம்
கிழக்கில் சுற்றுலா முக்கியத்துவமிக்க இடங்களில் முதலீடுகளை முன்னெடுத்து அதன்மூலம் கிழக்கின் வேலையற்ற பிரச்சினைக்கு முற்றிப்புள்ளி வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது முதலமைச்சர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண சுற்றுலா மற்றும் விவசாயம் சார் துறைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் விமான சேவையினை விஸ்தரிப்பது தொடர்பிலும் பிரதமரோடு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மாகாணத்தின் வீதிக்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம்.
அத்துடன் மத்தல தொடக்கம் அம்பாறை வரையான பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்து தொழில்வாய்ப்புக்களை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்புடன் முக்கிய முதலீட்டாளர்களை கிழக்கிற்கு அழைத்து சுற்றுலா முக்கியத்துவம் மிக்க இடங்களில் முதலீடுகளை முன்னெடுத்து அதன் மூலம் கிழக்கின் வேலையற்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளோம்.
எனவே, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை அபிவிருத்தி செய்து கிழக்கு மாகாணத்தை நாட்டின் முன்னேற்றகரமான மாகாணமாக மாற்றியமைப்பதற்கான சகல திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின்போது கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண உயர்மட்ட அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கின் வேலையற்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் தயாராக உள்ளோம்
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment