காணாமல்போனோர் அலுவலகம் அமைக்க அரசு தாமதிப்பது ஏன்?
தாமதம் ஏற்படுத்தாது விரைவில் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்குமாறு அரச தலைவரிடம் காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இதன்மூலம் போரில் காணாமல்போன படையினரைக் கண்டறிவதற்கு இதுவே வழி என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் கே.ஜே. பிரிட்டோ பெர்னாந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
2015 செப்டெம்பர் மாதத்தில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தொடரில் இலங்கை உடன்பட்டவாறு நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அம்சமாகக் காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் 2016 ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
எதிரணியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மேற்படி சட்டத்தை ஏகமனதாக அங்கீகரிப்பதற்கு நல்லாட்சி அரசுக்குத் துணிவும் வலுவும் இருந்தது.
ஆனால், நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி 9 மாதங்கள் கடந்த நிலையில் தாங்கள் இந்தச் சட்டத்துக்கு அமைவான அதிகாரங்களை ஓர் அமைச்சருக்கு ஒப்படைக்காமையால் மேற்படி சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்தச் சட்டத்துக்கு அவசியமான சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், மேற்படி திருத்தங்களை வெகுவிரைவில் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று, உத்தேச அலுவலகத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு, முதன்மை அமைச்சர் உட்பட அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அண்மையில் அறிவித்திருந்தீர்கள்.
மேற்படி திருத்தம் மக்கள் விடுதலை முன்னணியினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தத் திருத்தம் 2017 ஜுன் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
குறிப்பிட்டதொரு சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய பின்னர் திருத்தம் கொண்டு வரும்வரை சட்ட நடைமுறைப்படுத்தலைப் பிற்போடுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தாங்கள் மேலும் தாமதிப்பீர்களாயின் ஏதோ ஒரு சக்தியின் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தாமதமாகிறது என்று கருத வேண்டியிருக்கும்.
காணாமல்போனோர் அலுவலக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் மேலும் பிற்போடுவது 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வாக்குறுதிகளை மீறுவதாகும்.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை சட்டவிரோதமாக மீறுவதாகும். தாங்கள் கைவிடுவதாக உறுதிமொழி அளித்த நிறைவேற்று அதிகாரத்தைச் சட்டவிரோதமாக மீண்டும் பயன்படுத்துவதாகும்.
காணாமல்போனோருக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தாமதிப்பீர்களாயின் எமது முழுமையான சக்தியைப் பயன்படுத்தி செயற்படுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் அலுவலகம் அமைக்க அரசு தாமதிப்பது ஏன்?
Reviewed by Author
on
July 01, 2017
Rating:

No comments:
Post a Comment