கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்ய வேண்டும்! மோடிக்கு எடப்பாடி கடிதம்....
தமிழக மீனவர்கள் 72 பேரையும், 148 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,
புதுக்கோட்டை மாவட்டம், முத்தனேந்தல் மீன்பிடி தளத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நாட்டுப் படகில் (வல்லம்) கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஜூலை 16-ம் தேதி கைது செய்து கங்கேசன்துரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாக் நீரினையில் கில் வலைகளைக் கொண்டு நாட்டுப் படகுகளில் நூற்றாண்டு காலமாக மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், அவர்களையும்கூட இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.
அதேபோல, நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஜூலை 21-ம் தேதி கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இன்னல்களை அளித்து வந்தாலும், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் சுமூகமாக தீர்வு ஏற்பட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். ஆனால், இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து இன்னல்களை அளிப்பதோடு, மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சிறைபிடித்து வருகிறது.
கச்சத்தீவை இந்தியா திரும்ப பெறுவதும், சர்வதேச கடல் எல்லையை மறுவறையரை செய்தவதும்தான இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும். அப்போதுதான், தமிழக மீனவர்கள் தங்கள் தொழிலை நிம்மதியாக மேற்கொள்ள முடியும்.
எனவே, நீண்ட நாட்களாக நீடித்துவரும் இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், கடந்த ஜூலை 16,21-ம் தேதிகளில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள், 2 படகுகள் உட்பட மொத்தம் 72 மீனவர்கள், 148 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்ய வேண்டும்! மோடிக்கு எடப்பாடி கடிதம்....
Reviewed by Author
on
July 23, 2017
Rating:

No comments:
Post a Comment