முள்ளிவாய்க்கால் பகுதியின் வீதி வேலை பகுதியளவில் நடைபெறுகிறது : ரவிகரன்....
இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில் முழுமையாக லட்சக்கணக்கான மக்களின் பாவனையிலிருந்த வீதியின் குறிப்பிட்டளவு தூரம் பத்து மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் செப்பனிடப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் மேற்கு இரட்டைவாய்க்கால், மாத்தளன், சாலை வீதியை இறுதிப் போரின் போது லட்சக் கணக்கான மக்கள் பயன்படுத்தினார்கள்.
தற்போது குன்றும் குழியுமாக பாவிக்க முடியாமலும் எதுவித பேருந்து சேவைகளுமின்றி தனித்து விடப்பட்டவர்களாக இங்குள்ள மக்கள் காணப்படுகின்றார்கள்.
இந்த வீதியின் நீளம் 13.69 கிலோ மீட்டர் தூரமாகும். முள்ளிவாய்க்கால் மேற்கு வலைஞன்மடம் மற்றும் அம்பலவன் பொக்கணை, மாத்தளன், இரணைப்பாலை மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றனர்.
இதனுடைய முழுமையான திருத்தம் தொடர்பாக பல தடவைகள் சம்மந்தப்பட்டவர்களுடன் கதைத்து விட்டோம்.
கடந்த முறை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் விசேட திட்டத்தின் கீழ் இந்த வீதியும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. பின்பு இந்த வீதியை நிறுத்தி விட்டார்கள்.
இது விடயமான மக்களின் வேதனைகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் சுட்டிக்காட்டியிருந்தோம். இன்று வரை பதில் கிடைக்கவில்லை.
மாகாணசபை உறுப்பினர் ஒருவர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதி திருத்தத்துக்கு இந்த முறை ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கு சிபாரிசு செய்யலாம்.
அதற்கமைய இந்த வீதியின் புனரமைப்புக்காக நானும் மதிப்புறு வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரனுமாக பத்து மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம்.
தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீதி செப்பனிடப்படுகின்றது. மக்களின் அழைப்பை ஏற்று கடந்த 01ம் திகதி பிற்பகல் அங்கு சென்று நடைபெற்றுக் கொண்டிருந்த திருத்த வேலைகளைப் பார்வையிட்டேன்.
மேலும், பகுதி பகுதியாக என்றாலும் இந்த வேலைகளை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினோம் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியின் வீதி வேலை பகுதியளவில் நடைபெறுகிறது : ரவிகரன்....
Reviewed by Author
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment