யுத்தத்தின் பின்னர் வடபகுதி பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்....
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடபகுதிப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.
இதன்போது, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், யுத்தத்தின் பின்னர் பெண்களின் வகிபங்கு, மது போதைவஸ்து பாவனையும், பெண்கள் மீதான வன்முறை தொடர்பான கருத்துக்கள் வழங்கப்பட்டன.
போர் உருவாக்கிய மாற்றுத்திறனாளிப் பெண்களின் சவால்கள், உயர்கல்வியில் பெண்கள், பெண்களுக்கான பாதுகாப்பான வெளி, தமிழ் சமூகத்தில் தவிர்க்க முடியாத யதார்த்தம், முல்லைத்தீவு பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், யுத்தத்திற்கு பின்னர் பெண்கள் எதிர்நோக்கும் உள சக பிரச்சினை, கூறுபோடப்படாத பெண்ணின் சுயம் போன்ற தொனிப்பொருளில் கருத்துரைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த கருத்தரங்கில் யாழ்.போதனா வைத்தியசாலை மனநல வைத்தியர் சியோகம் கலந்துகொண்டு குடும்ப வன்முறைகள், அதில் பெண்களுக்கு ஏற்படும் உளநல பாதிப்புக்கள் அவற்றினை குறைப்பதற்கு பெண்கள் எவ்வாறான உத்திகளை கையாள வேண்டுமென்றும் கருத்துரைகளை வழங்கியுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,
அதிகப்படியான சுமைகள், நவீனமயமாக்கப்படுதல்களை பெண்கள் உல்லாசமாக கருதுகின்றார்கள். அது பெண்களுக்கு பாரிய தாக்கம் செலுத்தும், பெண்களுக்கு நெருக்கடியான சவால்களையும், நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன.
சுதந்திரம் என்ற போர்வையில் உளரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றது. குடும்ப வன்முறை அனைத்து பக்கத்திலும் இடம்பெறுகின்றது. அவற்றினை பெண்கள் சரியான முறைகளில் கையாள வேண்டுமென்றும் அவர் கருத்துரைகளை வழங்கினார்.
இந்த கருத்தரங்கு நாளையும்(28) நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் தேவானந்தா மற்றும், யாழ்.பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் விவகார பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்து உட்பட மகளிர் அமைப்புக்களை சார்ந்த பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யுத்தத்தின் பின்னர் வடபகுதி பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்....
Reviewed by Author
on
July 28, 2017
Rating:

No comments:
Post a Comment