அமெரிக்காவை புரட்டிப் போட்ட 'ஹார்வி' புயல்! 50 லட்சம் பேர் பாதிப்பு
அமெரிக்காவை மிரட்டிய, ஹார்வி புயல், டெக்சாஸ் மாகாணத்தில் கரையை கடந்தது. அப்போது, வீசிய பலத்த காற்று மற்றும் கன மழையால், 50 லட்சம் பேர், கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மெக்ஸிகோ வளைகுடாவில், சமீபத்தில் புயல் சின்னம் உருவானது. 'ஹார்வி என பெயரிடப்பட்ட இந்த புயல், கரையைக் கடக்கும் போது, பேரழிவை ஏற்படுத்தும்' என, அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ஹார்வி புயல், நேற்று முன்தினம் இரவு, டெக்சாஸில் உள்ள, அரன்சாஸ், ஓ - கானர் துறைமுகங்கள் இடையே கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
புயல், கரையை கடந்த போது, டெக்சாஸ் மாகாணத்தில், கடலோரத்தில் அமைந்துள்ள, 10க்கும் மேற்பட்ட நகரங்களில், கடும் பாதிப்பு ஏற்பட்டது.
லட்சக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. புயல் தாக்கிய கடலோர நகரங்களில், 50 லட்சம் பேர், வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
தண்ணீர், பால் வினியோகம் இல்லை.விக்டோரியா உள்ளிட்ட நகரங்களில் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
டெக்சாஸில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள் மூடப்பட்டன.
அமெரிக்காவின் மிகப் பெரிய பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி மையமான, ஹூஸ்டன் நகரிலுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், டிரம்ப், தற்போது தான், முதல்முறையாக, இயற்கை பேரிடரை எதிர்கொள்கிறார்.
டெக்சாஸ் பாதிப்பை, இயற்கை பேரிடர் பாதிப்பாக அறிவித்துள்ள டிரம்ப், மீட்பு பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். இராணுவத்தினரும், மீட்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவை புரட்டிப் போட்ட 'ஹார்வி' புயல்! 50 லட்சம் பேர் பாதிப்பு
Reviewed by Author
on
August 28, 2017
Rating:
Reviewed by Author
on
August 28, 2017
Rating:


No comments:
Post a Comment