செட்டிக்குளம் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தின் பழமை வாய்ந்த ஆலயமாகவும் அரசாங்க தகவல் அறிக்கையில் பதியப்பட்ட திருயாத்திரையில் ஒன்றாகவும் விளங்கும் செட்டிக்குளம் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா ஞாயிற்றுக் கிழமை 06.08.2017சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடந்த 28.07.2017 அன்று இவ் திருயாத்திரை ஸ்தலத்தின் பரிபாலகரான பங்குதந்தை அருட்பணி சூசையப்பு ஜெயபாலன் குரூஸ் அடிகளாரின் தலைமையில் பெருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்று 09 தினங்களாக நவநாட்களுடன் இவ் விழா இடம்பெறுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை 06.08.2017 அன்று பங்கு தந்தை அருட்பணி சூசையப்பு ஜெயயபாலன் குரூஸ் அடிகளாரின் வழிநடத்தலில் மன்னார் மறைமாவட்ட பரிபாலகர் ஆயர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் குருமுதல்வர் ஏனைய அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் வெளிமாவட்ட மக்கள் பொதுநிலையினர் இணைந்து கூட்டுத்திருப்பலி காலை 7.30 மணிக்குசிறப்பாக நடைபெற்றது.
இவ் ஆலயமானது மன்னார் மறைமாவட்டத்தில் வருடாந்த யாத்திரை நடைபெறும் இடமாகும். அன்று ஆயர் யூலன் அண்டகை தனது வன்னிப்பகுதி ஆலய தரிசிப்பினை முதன்முதலாக மேற்கொண்டபோது இவ்விடத்தில் அளிவுற்ற நிலையில் ஆலயம் ஒன்று இருப்பதைக் கண்டார் எனவும் இவ்வாலயமானது றோமை கட்டிட அமைப்பையோ அல்லது பைசன்ரையின் கட்டிட அமைப்பையோ அல்லது கொதிக் கட்டிட அமைப்பையோ கொண்டிராமல் இலங்கை கட்டிட வடிவத்தை கொண்டதாக இருந்ததாக இவ் ஆலய சரித்திரத்திலிருந்து தெரிய வருகிறது.
.
அருளாளர் யோசப்வாஸ் அடிகளார் பெரியகட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் அவர் நாட்டிய சிலுவை பழைய கோவிலுக்கும் புதிதாக அமைக்கப் பெற்றுள்ள கோவிலுக்கும் இடையில் இருந்ததாகவும் அச்சிலுவையடியில் பல நோயாளிகளும் வந்து குணம்பெற்றுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாய்மொழிப் பாரம்பரியத்திற்கு இணங்க வஞ்சியன்குளம் பகுதியிலுள்ள மாவிலங்கேணி என்னும் சிற்றுரில் வாழ்ந்து வந்த கத்தோலிக்கர்கள் ஒல்லாந்தரின் வேதகலாபனைக்கு அஞ்சி தமது தூய பேதிருவானவர் சுரூபத்தை ஒரு மரப்பொந்துக்குள் ஒளித்து வைத்துவிட்டு கண்டி இராட்சியப்பகுதியில் அமைந்துள்ள பெரியகட்டில் குடியேறி வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பெரியகட்டு புளியங்குளம் என அழைக்கப்பட்ட பெரியமுறிப்பு மற்றும் கள்ளிக்குள கிராமங்களுக்கு அருகைமையில் பிச்சம்பிட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்தில் தூய அந்தோனியாருக்கு ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
நோய்கள் காரணமாகவும் தொழில் வாய்ப்புக்காகவும் பெரியமுறிப்பு பெரியகுஞ்சுக்குளப் பகுதிகளுக்கு மக்கள் சென்றபடியால் அவ்வாலயம் தனித்து விடப்பட்டிருந்ததை அறிந்த ஒரு வெள்ளைக்கார அருட்பணியாளர் அத் தூய அந்தோனியார் சுரூபத்தை பெரியகட்டு கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அந்தக்காலம் தொடக்கம் இன்றுவரை பெரிகட்டு அந்தோனியார் பெருவிழாவுக்கு கள்ளிக்குளம் பிச்சம்பட்டியூடாக நடந்து சென்று அளையில் குளித்து வருவது இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.
அன்றைய காலத்தில் கன்னாட்டி, செட்டிக்குளம், கட்டைக்காடு ,வவுனியா, பன்னவெட்டுவான், இசைமாலைத்தாழ்வு, பறப்பாங்கண்டல் ஆகிய கிராமத்தைச் சார்ந்த கத்தோலிக்க மக்கள் இவ்வாலயத்தை தமது நிர்வாகத்தக்குள் கொண்டுவந்து செயற்பட்டு வந்தபொழுது வங்காலை, பேசாலைச் சேர்ந்த ஏனைய கத்தோலிக்க மக்களும் தமக்கும் வழிபாடு நடாத்த கோரியிருந்தவேளையில் மறைந்த ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் அனுமதியுடன் நேரடியாக மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும் யாத்திரை தளமாக உருவாக்கப்பட்டது.
இவ்வாலயம் அயல் ஆலயங்களான கன்னாட்டி, பெரியமுறிப்பு, பெரியகுஞ்சுக்குளம், மடுறோட், கட்டைஅடம்பன் ஆகியவற்றை இணைத்து ஒரு பங்குதளமாகவும் விளங்கியதுடன் தற்போது செட்டிக்குளம் பங்கின் துணை ஆலயமாகவும் மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரை தளங்களுள் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை இவ் ஆலய பெருவிழா நடைபெற்று வருகிறது. இவ் விழாவுக்கு இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்து மன்னார் ,வவுனியா, மாதோட்டம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, சிலாபம் போன்ற இடங்களிலிருந்து பலதரப்பட்ட மக்களும் வருகை தந்து புனிதர் அந்தோனியாரின் ஆசீரைப் பெற்றுச் செல்வதும் காணக்கூடியதாக இருக்கின்றது.

செட்டிக்குளம் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
Reviewed by Author
on
August 08, 2017
Rating:

No comments:
Post a Comment