தமிழ் ஈழ தேசத்திற்கு பொதுவாக்கெடுப்பே தீர்வு: மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேச்சு
உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மன்றமே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேசியுள்ளார்.
உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மன்றமே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேசியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது கூட்டத்தில், ‘தமிழர் உலகம்’ என்ற அமைப்பு சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
வரலாற்றின் வைகறை காலத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் தான் இலங்கை தீவின் பூர்வீகக் குடிமக்கள். சிங்கள இனவாத அரசுகளின் ராணுவத்தால் ஈழத்தமிழர்கள் கொடூரமான படுகொலைக்கு, இன அழிப்புக்கு ஆளானார்கள். 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் மிருகத்தனமாக கொன்று குவிக்கப்பட்டார்கள்.
இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய இதே மனித உரிமைக் கவுன்சில் 2009 மே கடைசி வாரத்தில் இலங்கை அரசு நடத்திய படுகொலைக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.
ஐ.நா. சபை 2010-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமைத்த மார்சுகி தாருஸ்மென், ஸ்டீவன் ராட்னர், லாஸ்வின் சூகா ஆகிய மூவர் குழு, இலங்கையில் நடைபெற்றது ஈழத்தமிழ் இனப்படுகொலை என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்களுடன் 2011 ஏப்ரல் மாதம் அறிக்கை சமர்ப்பித்தது. இலங்கையின் பூர்வீகத் தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்களை சிங்கள அரசு கொண்டுவந்து குடியமர்த்துகிறது. காணாமல்போன தமிழர்களை பற்றி எந்தத் தகவலும் இல்லை.
சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஈழத்தமிழர்கள் வாழும் இடமே கொடும் சிறையாகிவிட்டது. இருண்டு கிடக்கின்ற ஈழத்தமிழர் வானத்தில் தற்போது தோன்றியுள்ள ஒரே ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவென்றால், மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன் சிங்கள ராணுவம் நடத்திய யுத்தக் குற்றங்களை உலகத்தில் எந்த நாடும் விசாரிக்கலாம் என்று கூறியது தான்.
ஈழத்தமிழர்களின் தாயகத்திலும், உலகெங்கும் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும் சுதந்திரமான தமிழ் ஈழ தேசத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள். அதற்கு முன்னால் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் இருந்து சிங்கள ராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இந்தப் பொது வாக்கெடுப்பை ஐ.நா. மன்றமே நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கவுன்சில் கூட்டத்திற்கு பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த ஈழத்தமிழர்கள் வைகோவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

தமிழ் ஈழ தேசத்திற்கு பொதுவாக்கெடுப்பே தீர்வு: மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேச்சு
Reviewed by Author
on
September 19, 2017
Rating:

No comments:
Post a Comment