அண்மைய செய்திகள்

recent
-

குறைந்த வயதில் காலிறுதிக்குள் நுழைந்து ரஷ்ய வீரர் சாதனை


அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 19 வயதே ஆன ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லெவ் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் உக்ரைன் வீரர் அலெக்சாண்டர் டோல்கோபோலாவ்வை எதிர்கொண்டார்.

இதில் ரபெல் நடால் 6-2, 6-4, 6-1 என்ற நேர்செட்டில் அலெக்சாண்டரை எளிதில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற ரபெல் நடாலுக்கு 1 மணி 41 நிமிடம் தேவைப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் ரபெல் நடால் காலிறுதியை எட்டுவது இதுவே முதல்முறையாகும்.

ரஷியாவை சேர்ந்த 19 வயதான ஆந்த்ரே ருப்லெவ் 7-5, 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் உலக தர வரிசையில் 14-வது இடத்தில் டேவிட் கோபினை வீழ்த்தி அதிர்ச்சி அளித்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் 2001-ம் ஆண்டில் காலிறுதிக்கு முன்னேறிய ஆன்டி ரோட்டிக்குக்கு (அமெரிக்கா) அடுத்தபடியாக குறைந்த வயதில் அமெரிக்க ஓபன் காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர் என்ற பெருமையை ஆந்த்ரே ருப்லெவ் பெற்றார். கால்இறுதியில் ஆந்த்ரே ருப்லெவ், ரபெல் நடாலை சந்திக்கிறார்.

மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர்  6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் பிலிப் கோல்ஸ்கிரீபரை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 6-0 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியை எளிதில் ஊதி தள்ளி காலிறுதிக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-காப்ரிலா டாப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடி 6-4, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் ஹாய் ஷிங் ஷான் (சீனதைபே)-மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

அமெரிக்க ஓபன் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தின் பிரதான ஆடுகளம் வழக்கத்தை விட வேகமாக இருக்கிறது என்று ரபெல் நடால், கிவிடோவா உள்பட பல வீரர், வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்தா உள்பட சிலர் ஆடுகளத்தில் எந்தவித வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இது குறித்து ரபெல் நடால் கருத்து தெரிவிக்கையில், ‘அமெரிக்க ஓபனில் ஆடுகளத்தை கடினமானதாக அமைத்து இருப்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு திரில்லை கொடுக்கலாம். ஆனால் வீரர்களுக்கு களிமண் மற்றும் புல்தரை ஆடுகளங்களை விட உடல் ரீதியாக அதிக வலியை கொடுக்கும்’ என்று கூறியுள்ளார்.

குறைந்த வயதில் காலிறுதிக்குள் நுழைந்து ரஷ்ய வீரர் சாதனை Reviewed by Author on September 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.